ஞாயிறு, 9 ஜூன், 2013

கடத்தப்படும் மாடுகளை மீட்க ப் போராடும் அமைப்பு

கடத்தப்படும் மாடுகளை மீட்க ப் போராடும் அமைப்பு
மனிதர்களை ப் போலவே, விலங்குகளையும் துன்புறுத்தினால், தண்டிக்க சட்டம் உள்ளது. ஆனால், அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தினசரி ஆயிரக்கணக்கான மாடுகள், நாய்கள் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றன. இதை, தடுக்க பிராணிகள் ஆர்வலரும், இளம் தொழில் அதிபருமான அருண், "பீப்புள் பார் கேட்டில் இன் இந்தியா' (பி.சி.ஐ.,) என்ற அமைப்பை துவக்கி போராடி வருகிறார்.
அவரிடம் பேசியதில் இருந்து....

உங்கள் அமைப்பை பற்றி சொல்லுங்களேன்...?

இறைச்சிக்காக, விலங்குகள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அவற்றில், மாடு, ஆடு, பூனைகளே அதிகளவில் கடத்தப்படுகின்றன. இது, சட்டப்படி குற்றம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பை விட, தற்போது ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது. தமிழகத்தில், மொத்தம், 10 சதவீத ஆடுகளே உள்ளன. இப்படியே விலங்குகள் குறைந்து கொண்டே போனால், உணவு சங்கிலி சுழற்சி முறை மாறுபடும். விலங்குகள் இல்லாமல், மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்களுக்கு, உரிமை மீறல் வரும்போது, போராடி நியாயம் கேட்க முடியும். ஆனால், ஐந்து அறிவு ஜீவராசிகள், தங்களை துன்புறுத்தினால், அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. இதையே, பலமாக வைத்து கொண்டு, பலர் கோபம் வரும்போது, பிராணிகளை அடிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க, தான் பி.சி.ஐ., அமைப்பை துவக்கினோம்.

பிராணிகள் கொல்லப்படுவதில் சட்டவிரோத நடைமுறைகள் உள்ளனவா?

நிறைய...கடவுளுக்கு நேர்த்தி கடனாக வெட்டப்படும், ஆடு மற்றும் மாடுகளுக்கு, மருத்துவரின் அனுமதி சான்றிதழ் இருக்க வேண்டும். ஆனால், கிராமப்புறங்களில் நேர்த்திக்கடன் என்ற பெயரில், ஆடு மற்றும் மாடுகள் சட்ட விரோதமாக கொல்லப்படுகின்றன. அதேபோல், சட்டவிரோதமாக, ஆந்திரா, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான மாடுகள், லாரிகளில் கடத்தப்படுகின்றன. அவற்றில் கருவுற்ற மாடுகளும் ஈவிரக்கமின்றி கடத்தப்படுகின்றன. இவற்றின் இறைச்சி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பி.சி.ஐ., யின் பணிகள் என்னென்ன?

இந்த அமைப்பில், சென்னையில் மட்டும் 200 பேர் ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்களின் உதவியோடு, இதுவரை, கடத்தப்பட்ட 650 மாடுகளை மீட்டுள்ளோம். தமிழகம் முழுவதும், விலங்குகள் கடத்தப்படுவதற்கு எதிராக, 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், பிராணிகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தொலைந்து போவதை தடுக்க, புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு சத்தத்தை கேட்டு நாய்கள் தொலைந்து போகும். உரிமையாளர்கள் நாயின் அடையாளத்தை விளம்பரப்படுத்தி, தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். இதை தடுக்க, நாயின் கழுத்தில், பெல்ட் அணிவித்து, அடையாள அட்டை தொங்கவிடப்படும். இதில், உரிமையாளர் பெயர், தொடர்பு எண், நாயின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம், தொலைந்து போனாலும், நாய்களை கண்டுபிடித்து விடலாம். இந்த அடையாள அட்டை பெற, 300க்கும் மேற்பட்டோர், பி.சி.ஐ.,யில் பதிவு செய்துள்ளனர்.

செல்ல பிராணிகள் வளர்ப்பு பற்றி?

செல்ல பிராணிகள் வளர்ப்பு குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை. நாய், பூனை, குருவி போன்றவற்றையே, அதிகளவில் செல்ல பிராணிகளாக வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அவற்றுக்கான தடுப்பூசி, உணவு முறை தெரியாமல் வளர்ப்பதால், தொற்று வியாதிகள் வருகின்றன. நாய்களுக்கு, 3 மாதத்தில் தடுப்பூசியும், ஒரு ஆண்டில், கருத்தடை சிகிச்சையும் செய்வது அவசியம். சர்க்கரை, உப்பு, மிளகாய் போன்றவை அதிகமுள்ள உணவு பொருட்களை தரக்கூடாது. குறிப்பாக, "சாக்லெட்' கொடுக்கவே கூடாது. ஆனால், இது தெரியாமல், பெரும்பாலோர் நாய்களுக்கு சாக்லெட்டுகளையே அதிகம் கொடுக்கிறார்கள். இதனால், நாய்களுக்கு கல்லீரல் பிரச்னை வரும். நாய் வளர்ப்பில் முக்கியமானது, வயதான நாய்களை தெருவில் விடுவதை தவிர்க்க வேண்டும். காரணம்... பாசத்தோடு வளர்க்கப்படும் நாய்கள், தெரியாத இடங்களில் கைவிடப்பட்டால், அன்புக்காக ஏங்கி ஏங்கியே செத்து போகும்.

தொடர்புக்கு : 76670 66666/ 97910 45790

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக