திங்கள், 10 ஜூன், 2013

அறுபதாம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

அறுபது ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி
 
புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில், இந்நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால், நம்புவதற்கு இப்போது சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.

12 படுக்கைகள்
பலகட்ட முயற்சிக்கு பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், "கெனால் பேங்க்' சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவக்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1954ம் ஆண்டு, ஜூன், 18ம் தேதி முதல், இம்மருத்துவமனை செயல்படத் துவங்கியது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என, நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.
1982ம் ஆண்டு, அடையாறு, சர்தார் படேல் சாலையில் துவங்கப்பட்ட, கிளை மருத்துவ மனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று, பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.

சேவை உணர்வு

அரை நூற்றாண்டிற்கும் மேலாக, புற்றுநோய் மருத்துவத்தில் சேவை உணர்வுடன் பணியாற்றி வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முதல்வர் சாந்தா
கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவீதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவீதம் பேருக்கு, குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களை நாடி வருவோருக்கு, தரமான சிகிச்சை வழங்குவதில், நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. கதிர்வீச்சு, மருந்து, அறுவை என, புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும், "கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கி வருகிறோம்.ஆண்டிற்கு சராசரியாக, 1.2 லட்சம் பேர், இம்மருத்துவமனையில், உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு, எங்கள் மருத்துவமனைக்கு வழங்கி வந்த, 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை, சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது. இதேபோன்று, மத்திய அரசின் நிதியுதவியும், விரைவில் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கிறோம். கடந்த, 15 ஆண்டுகளாக, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க, சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து, இளைய தலைமுறை விடுபட வேண்டும்.இவ்வாறு சாந்தா கூறினார். புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர்படிப்புகளையும், இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) - டி.எம்., (மருந்து சிகிச்சை) - எம்.டி., மற்றும் டி.எம்.ஆர்.டி., (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், இம்மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில், உடல் ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "இளைஞர் உடல்நலத் திருவிழா' நடத்தப்படுகிறது.

தைரியம் தரும் பண்பாளர்
சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், 68, என்பவர், கடந்த, 1999ம் ஆண்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், தொண்டை புற்றுநோய்க்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்தார். தன் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக, அவர் தற்போது, இம்மருத்துவமனை வளாகத்தில், புகை இலைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயப்படுவோருக்கு, தைரியமும் அளித்து வருகிறார். நற்சான்று தன்னார்வத்துடன் இவர் மேற் கொண்டு வரும் பணி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சேவைக்கு நற்சான்றாக விளங்குகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், 50 ஆண்டு களுக்கும் மேலாக, செவிலியராக பணிபுரிந்து வரும் ஜானகி கூறுகையில், ""புற்றுநோய் சிகிச்சையில், உலகளவில் பெயர் பெற்று விளங்கும் இம்மருத்துவமனையில் பணிபுரிவதில் பெருமை அடைகிறேன். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோர், அரும்பாடுபட்டு வளர்த்த மருத்துவமனை, இன்று வைர விழா கொண்டாடுகிறது என்பதை நினைக்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

சாதனை பயணத்தின் சிறப்புகள்...
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின், 60 ஆண்டு கால சாதனை பயணத்தில் முக்கிய அம்சங்கள்:கடந்த, 1954ம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக, 1956ம் ஆண்டு, இங்கு,
கதிரியக்க புற்றுநோய் மருத்துவத் துறை ஏற்படுத்தப்பட்டது.
1960ம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக, குழந்தை
களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
1971ம் ஆண்டு, புற்றுநோய்க்கான மருந்து முறை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
1974ம் ஆண்டு, இம்மருத்துவமனையை, புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக, மத்திய அரசு அறிவித்தது.
ஐ.ஓ.ஆர்.டி., எனும், கதிரியக்க சிகிச்சை தொழிற்நுட்பம், 1995ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
2002ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் சார்பில், புகையிலை ஒழிப்பு மையம், இம்மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது. 2005ம் ஆண்டு, ஆசியாவின் உயர்ந்த விருதான, "மகசேசே' விருதை, இம்மருத்துவ நிறுவனம் பெற்றது.
- நமது நிருபர் -
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக