பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தாலும் வாழ்வோம்...: குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைவீரர்
கோவை: கோவையை ச் சேர்ந்த முன்னாள் படைவீரர், மனைவி, மகன், மகளுடன் முழு உடல்தானம் செய்தார். கோவை சூலூர், டிபென்ஸ் காலனியை சேர்ந்தவர்
ராஜகோபால், 51; முன்னாள் படைவீரர். அவரது மனைவி செல்லம்மாள், 46, மகள்
பூவிழி, 24, மகன் கோவலன், 22, ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
குடும்பத்தினருடன் முழு உடல்தானம் செய்வதாக கலெக்டர் கருணாகரனிடம் கடிதம்
கொடுத்தார்.
முன்னாள் படைவீரர் ராஜகோபால் கூறியதாவது:
இந்திய
ராணுவத்தில் பணியாற்றியபோது, ரத்ததானம் செய்தேன். அதன்பின், கண்களை தானம்
செய்ய படிவம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், கோவையை சேர்ந்த சுகுமாரி
என்பவர், முழு உடல்தானம் செய்த செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். அவரை
போன்று, நானும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம்
செய்ய திட்டமிட்டேன். என்னுடைய முடிவுக்கு குடும்பத்தில் அனைவரின் ஆதரவும்
கிடைத்தது. என்னுடன் சேர்ந்து, மனைவி, மகள், மகன் ஆகியோரும் உடல்தானம்
செய்ய விரும்பினர். உடல்தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள்
எங்களுக்கு தெரியவில்லை. கோவை குனியமுத்தூரை சேர்ந்த, "பிறர்க்கு உதவு'
என்ற பொது நல இயக்கத்தின் உதவியுடன் உடல்தானம் செய்வதற்கு ஏற்பாடு
செய்துள்ளேன்.
வாழும் காலத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்பதால், பிறந்தநாள், திருமண
நாள்களில் பசியால் வாடுவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து
வருகிறோம். இருக்கும் போதும், இறந்த பிறகும் நம்மால் முடிந்த உதவியை
பிறருக்கு செய்ய வேண்டும். நாங்கள் இறந்ததும், எங்களது உடல் உறுப்புகள்
மற்றவர்களுக்கும், உடல் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கும் பயன்படும். இறந்த
பிறகு யாருக்கும் பயன்படாத உடல், மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்பது
எங்கள் குடும்பத்தின் விருப்பம். இதன் மூலம் இறந்த பிறகும் வாழலாம்.
இவ்வாறு, ராஜகோபால் தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஏற்படும்!
"பிறர்க்கு
உதவு' அமைப்பின் நிறுவனர் ராஜாசேதுமுரளி கூறுகையில், ""கோவையில்
குடும்பத்துடன் உடல்தானம் செய்வது இதுவே முதல் முறை. ""இவர்களை பார்த்து
எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவர்கள் நான்கு பேருடன்
சேர்த்து, குனியமுத்தூரை சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி ராஜவேலு என்பவரும்
உடல்தானம் செய்துள்ளார். எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை 29 பேரின்
உடல்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக