செவ்வாய், 11 ஜூன், 2013

சிற்றூரில் இருந்து ஓர் இ.ஆ.ப.




குக்கிராமத்தில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
குக்கிராமத்தில் பிறந்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற, விஜயா கிருஷ்ணன்: நான், சிவகங்கை மாவட்டத்தின், குமாரபட்டி என்ற குக்கிராமத்தில் தான் பிறந்தேன். குமாரப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். என் தந்தையும், அப்பள்ளியில் தான் சத்துணவு ஊழியராக பணியாற்றினார். மேல் படிப்பையும், சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் தான் படித்தேன்.
அனைவரும் மருத்துவம், இன்ஜினியரிங் என, படிக்கும் போது, விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், திருநெல்வேலி, கிள்ளிகுளத்தில் உள்ள, விவசாய கல்லூரியில், பி.எஸ்சி., விவசாயம் படித்தேன். கல்லூரி இறுதி ஆண்டின் போது, என் சீனியர் மாணவர்கள் சிலர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, என்னையும் ஊக்கப்படுத்தினர். நானும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற என் ஆசையை, பெற்றோரிடம் சொன்ன போது, நடுத்தர விவசாய குடும்பமான நமக்கு, ஐ.ஏ.எஸ்., படிப்பெல்லாம் சாத்தியமா என, தயங்கினர்.
அந்த கஷ்டத்திலும், என் மீது கொண்ட நம்பிக்கையால், மேற்கொண்டு படிக்க சம்மதித்தனர். 2007ல் நடைபெற்ற, ஐ.ஏ.எஸ்., தேர்வில், 325வது இடமே கிடைத்து, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை இணை ஆணையராக பணியாற்றும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இங்கு மிக நேர்மையாக பணியாற்றியதை, அங்குள்ளோர் பாராட்டினர். வயது, 31 ஆனாலும், ஐ.ஏ.எஸ்., ஆனால் தான் திருமணம் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். ஆனால், தொடர்ந்து தேர்வு எழுதியும் பலனில்லை.
கடந்த, 2012ல் நடைபெற்ற தேர்வே, எனக்கு இறுதி என்பதால், இதில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். இந்திய அளவில், 32ம் இடமும், தமிழக அளவில், 3ம் இடமும் பெற்று, குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியிலேயே படித்தவர்களாலும் ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என, சாதித்து காட்டினேன்.
என்னுடைய இந்த வெற்றி, அரசு பள்ளியில் படிக்கும் கிராமத்து மாணவியராலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க முடிந்ததில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக