சகலகலா பெண் விவசாயி!
விவசாயம், இயற்கை உரம் தயாரித்தல் என, பல தொழில்களில் ஈடுபட்டு, இலட்சக்கணக்கில் இலாபம் ஈட்டும், தமிழரசி:
நான், திண்டுக்கல், புளியமரத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவள். 10ம்
வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணவர் படிக்காததால், எல்லா கணக்கு
வழக்குகளையும், நானே பார்க்கிறேன். சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தில், ரசாயன
உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்தோம். ஒரு போக விளைச்சலில், லட்ச ரூபாய்
கிடைத்தாலும், உரச் செலவு அதிகரித்ததால், தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது.
இதற்கு
என்ன தான் வழி என, சிந்தித்த நேரத்தில், திண்டுக்கல்லில் உள்ள, "அமைதி'
அறக்கட்டளை நிர்வாகிகள், இயற்கை உரத்தை தயாரிக்கும் வழிமுறைகளையும், இயற்கை
விவசாயத்தின் நன்மை பற்றியும், பயிற்சி தந்தனர். இதில், விவசாயம்
தொடர்பான, தெளிவான புரிதல் கிடைத்தது.
கணவர் ஒத்துழைப்புடன் பஞ்ச
கவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மூலிகை பூச்சுவிரட்டி, மீன் அமில
கரைசல், அரப்பு மோர்க் கரைசல் என, இயற்கை உரங்களை, நானே தயாரித்து, 20
சதவீத லாபத்தில் விற்கிறேன். இயற்கை விவசாயத்தில், கீரை, 10க்கும் மேற்பட்ட
காய்கறி மற்றும் பழங்களோடு, 40 தென்னை மரங்களை வளர்க்கிறேன்.
இயற்கை
உரம் தயாரிக்க மண்டை வெல்லம், வேப்பஞ்சுண்ணாம்பு வாங்குவது மட்டும் தான்
செலவு. மற்றபடி, 4 மாடு, 40 கோழிகளை மரங்களுக்கு இடையே வளர்த்து, அதன்
சாணம், கோமியத்தை உரமாக பயன்படுத்தி, விளைச் சலை பெருக்கினேன்.
பெண்
என்றும் பாராமல், விளைந்த காய்கறி, பழங்கள், கீரைகளை, என் மோட்டார்
வண்டியில் ஏற்றி, 8 கி.மீ., தூரத்தில் உள்ள சந்தையில், நானே நேரடியாக
விற்று வருகிறேன். முதலில் வாங்கிய இரண்டு வாத்துகள், 30 வாத்துகளாக
விரிவடைந்துள்ளன.
வாத்தை, 250 ரூபாய்க்கும், முட்டையை, 5
ரூபாய்க்கும் விற்கிறேன். விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்த நான், இன்று
விதை, உரம் என, அனைத்தையும் தயாரித்து, ஆண்டிற்கு, 2 லட்சத்திற்கும் மேல்
சம்பாதிக்கிறேன். தற்போது மீன் குட்டை அமைத்திருப்பதால், இனி இதிலிருந்தும்
லாபம் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக