சனி, 22 டிசம்பர், 2012

ஊறுகாய் முதல் புட‌ைவை வரை... வாழைப்பழ கண்காட்சி


சென்னை: தமிழகத்தில் அதிக அளவு வாழைப்பழ உற்பத்தி இருப்பதால், அதன் பயன்பாட்டை விளக்கும் இரண்டு நாள் கண்காட்சி சென்னையில் நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி சென்னையில் நடப்பது இது முதல் தடவை ஆகும்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து, சென்னையில் முதல் வாழைப்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய, இந்த இரண்டு நாள் கண்காட்சியில் தோட்டக்கலை, வேளாண்துறை, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், வேளாண் பல்கலை, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகிய அமைப்புகள் பங்கேற்கின்றன. மேலும், வாழை உற்பத்தி தொடர்பான பல்வேறு தனியார் நிறுவனங்களின் அரங்குகளும் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் விளையும் பூவன், நெய் பூவன், கற்பூரம், செவ்வாழை, , ரஸ்தாலி, ரொபாஸ்டா, அரிச்சல், கிராண்ட் நைன், மொந்தன், விருப்பாட்சி உள்ளிட்ட பல ரக வாழைப்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான சத்துமாவு, சத்து பானங்கள், வாழைத்தண்டு, வாழைப்பூ ஊறுகாய்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஊறுகாய்களை சுவைத்து, அவற்றை வாங்கி செல்வதில் பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். வாழை நாரில் தயாரிக்கப்படும் புடவைகள், கைப்பைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவையும், பார்வையாளர்களைக் கவர்கின்றன. வாழைப்பழத்தை பழுக்க வைக்க பயன்படும் நவீன குளிர்சாதன இயந்திரங்களும், வாழை விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை ஒட்டி, நவீன முறையில் வாழைப்பழங்களை அறுவடை செய்தல், ஏற்றுமதி செய்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில், விவசாயிகள், வேளாண் விஞ்சானிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இக்கண்காட்சி குறித்து இந்திய தொழிற்கூட்டமைப்பின் வேளாண்மை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில், தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தான் வாழைப்பழங்கள் அதிகளவில் விளைகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதவீத வாழைப்பழ விளைச்சல், தமிழகத்தில் தான் உள்ளது. வாழைப்பழ உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தாலும், அவற்றை விற்பனை செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் சில பின்னடைவுகள் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வாழைப் பழங்களை கையாள்வது, ஏற்றுமதி செய்வது குறித்து விளக்கவே, இந்த கண்காட்சி முதல் முறையாக இங்கு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதில், தோட்டக்கலைத்துறை கமிஷனர் சந்தோஷ்பாபு, சி.ஐ.ஐ., நிர்வாகி புருஷோத்துமன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக