சொல்கிறார்கள்
"மறைவிற்குப் பிறகும் நினைவுபடுத்தும்!'
"மறைவிற்குப் பிறகும் நினைவுபடுத்தும்!'
தமிழில் நாவல் எழுதி, இலக்கியத்திற்கான விருது பெற்ற, "திருநங்கை' பிரியா பாபு: என் சொந்த ஊர் முசிறி. திருநங்கைகளுக்கு, சிறு வயதில், பெண்
தன்மை இருக்கும். ஆனால், ஆணா, பெண்ணா என்ற புரிதல் இருக்காது. 15 வயதிற்கு
மேற்பட்டுதான், பாலினம் பற்றிய சுய சிந்தனை ஏற்படும்.
அத்தகைய வயதில், நான் சந்தித்த துன்பங்கள் பல. என்னை, அனைவரும், கேலிப்
பொருளாகவே பார்த்தனர். இதனால், மனம் வெதும்பி தற்கொலைக்கு முயன்றேன்.
காப்பாற்றி, உயிர் பிழைக்க வைத்தனர்.பின், சமூகத்தில், விளிம்பு நிலையில்
வாழும், என்னை போன்ற திருநங்கைகள் மத்தியில், விழிப்புணர்ச்சி ஏற்படுத்த
வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
எழுத்தாளர் சு.சமுத்திரம், திருநங்கைகள் பற்றி எழுதிய, "வாடா மல்லி'
என்ற நூல் தான், நான் எழுத்தாளராக முக்கிய காரணமாக அமைந்தது.திருநங்கையாக
மாறத் துடிக்கும் மகனுக்கும், அவனது தாய்க்கும் இடையே நடக்கும் மனப்
போராட்டத்தை," மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலில், எழுதினேன். திருநங்கை
எழுதிய முதல் தமிழ் நாவல் இது தான்.
இந்நூலைப் பாராட்டி, சிறந்த இலக்கியத்திற்கான விருதை, பாரதிதாசன்
பல்கலைக்கழகம் வழங்கியது. "திருநங்கையர் வழக்காறுகள்' என்ற
குறும்படத்தையும் இயக்கினேன். சென்னையில், "வானவில்' அமைப்புடன் இணைந்து,
திருநங்கைகளுக்கு, எழுதுவதற்கு பயிற்சி அளிக்கிறேன். கட்டுரை, சுயசரிதை,
ஆய்வுக் கட்டுரை எழுதுவது தொடர்பாக, பயிற்சி தருவதில்,
ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். இந்தியாவின் பட்டிதொட்டிகளில் பயணம்
செய்து, "கண்ணாடி' கலைக் குழு மூலம், விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன்.
திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று தருவது, மத்திய, மாநில
அரசுகள் வழங்கும் இலவச திட்டங்களை பெறுவது தொடர்பான தகவல்கள் தருவது என,
பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறேன்.திருநங்கைகள் குறித்த ஆவணங்கள்
திரட்டி, நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்நூலகத்தை,
திருநங்கைகள் தினமான, ஏப்ரல், 15 அன்று, திறக்க இருக்கிறேன். இது,
மறைவிற்கு பிறகும் என்னை நினைவுபடுத்த உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக