புதன், 19 டிசம்பர், 2012

11 years old girl issue notice to P.M. Manmohan

தகவல் உரிமைச் சட்டம்:  தல‌ைமை அமைச்சருக்கு  அறிவிப்பு  அனுப்பிய 11 அகவைச் சிறுமி 


இலக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார்.

நோட்டீசில், சிறுமி தெரிவித்துள்ளதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

"உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது' என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக