சனி, 22 டிசம்பர், 2012

செம்மொழித்தமிழ் விருதுகள்: பிரணாப் வழங்கினார்

செம்மொழி த் தமிழ் விருதுகள்: பிரணாப்  வழங்கினார்

First Published : 22 December 2012 02:19 AM IST














2008-09 ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக சேவையாற்றிவரும் 92 வயது புலவர் சி. கோவிந்தராசனாருக்கு "தொல்காப்பியர் விருது' வழங்கப்பட்டது.
அ. லட்சுமி தத்தை, சு. மாதவன், மு. ராமகிருஷ்ணன், ச. செந்தமிழ்ப்பாவை ஆகியோருக்கு "செம்மொழி தமிழ் இளம் அறிஞர்' விருது வழங்கப்பட்டது.
வெளிநாட்டவர் பிரிவில், "குறள் பீடம்' விருதுக்குத் தேர்வு பெற்ற பிரான்ஸýவா குரோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. விருது பெற்றவர்களின் விவரம்:
தொல்காப்பியர் விருது: 1920-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்த புலவர் சி. கோவிந்தராசனார், திருச்சியில் வசித்து வருகிறார்.
கரந்தை தமிழ்க் கல்லூரி, தமிழவேள் உமாமகேஸ்வரனார் கரந்தை கலைக் கல்லூரி ஆகியவற்றில் சுமார் 30 ஆண்டுகள் தமிழ் பணியாற்றினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் சிறப்பு நிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நாட்டின் தலைசிறந்த தொல்லியல் அறிஞராக விளங்குகிறார்.
இவரது ஆய்வில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோட்டம், நாமக்கல் அருகே உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்த சங்க கால நாயகனான வல்வில் ஓரி சிலை, முல்லைக்கு தேர் தந்த பாரி மன்னன் வாழ்ந்த பறம்பு மலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
"கண்ணகி கோட்டம்', "கண்ணகியர் அடிச்சுவட்டில், புகார் முதல் காஞ்சிவரை' ஆகியவை இவர் எழுதிய பிரபல நூல்களாகும்.
கோவிந்தராசனாருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது. அவரது தமிழ்ச் சேவையை சிறப்பிக்கும் வகையில் தொல்காப்பியர் விருது, பாராட்டு பத்திரம், ரூ. 5 லட்சம் பொற்கிழி, நினைவுப் பரிசு ஆகியவற்றை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
குறள் பீடம் விருது: திருக்குறள், பரிபாடல் ஆகிய நூல்களை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவர் பிரான்ஸýவா குரோ (79). அந்நாட்டில், பாரிஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
சங்க கால தமிழில் இருந்து தற்கால தமிழ் வரையிலான இவரது ஈடுபாடு, பல்வேறு தமிழ்ப் படைப்புகளை பிரெஞ்ச் மொழிக்கு கொண்டு சென்றுள்ளது. இவர் பரிபாடல், திருக்குறள் காமத்துப்பால் ஆகியவற்றை பிரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இளம் அறிஞர்களுக்கான விருது: இளம் தமிழ் அறிஞர்களிடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்க்கும் வகையில் கீழ்க்கண்ட நான்கு பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பொற்கிழி, விருது வழங்கப்பட்டது.
அ. லட்சுமி தத்தை (39): புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாயக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ்க் குடும்பம், நாவலும் சமூகமும், சமணம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
மு. ராமகிருஷ்ணன் (41): செம்மொழி தமிழாய்வுக்கான மத்திய நிறுவனத்தில் இணை ஆய்வறிஞராகப் பணிபுரிகிறார். தமிழில் எட்டு கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
சு. மாதவன் (43): திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியம், சமூகம் சார்ந்த 25 கட்டுரைகள், "தமிழ் அற இலக்கியங்களும் புத்த சமண அறங்களும்', "பன்முகத் தமிழியல்', "இந்திய சமூகம் - மார்க்கமும், பெரியாரும்' என்பவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
ச. செந்தமிழ்ப்பாவை (44): காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் இணை பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதலில் மூன்று பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளனர். சங்ககால தமிழ் எழுத்துகள் தொடர்பான இவரது தேடலும் ஆய்வும், "செம்மொழி தமிழ் இளம் அறிஞர்' விருதுக்கு இவரை தகுதி பெறச் செய்துள்ளன.
இந்தியில் தமிழ் வரலாறு: அறிஞர்கள் அதிருப்தி
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற செம்மொழி தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை மத்திய அரசு அதிகாரியொருவர் ஹிந்தி மொழியில் அறிவித்தார். விருது பெறுவோரின் குறிப்புகளும் ஹிந்தி மொழியிலேயே வாசிக்கப்பட்டன.
இது, விருது பெற வந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
"தமிழ் மொழிக்கான உயரிய விருது வழங்கும் விழாவை, குறைந்தபட்சம் திருக்குறளை வாசித்தாவது தொடங்கியிருக்க வேண்டும்' என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக