புதன், 19 டிசம்பர், 2012

இலங்கையில் மீண்டும் வெள்ளை ஊர்தி ஒழுகலாறு கூடாது: அத்தநாயக

இலங்கையில் மீண்டும் வெள்ளை வேன் கலாசாரம் கூடாது: ஐ.தே.கட்சியின் திஸ்ஸ அத்தநாயக

First Published : 18 December 2012 08:03 PM IST
இலங்கையில் மீண்டும் வெள்ளை வேன் கலாசாரம் வரக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக கூறியுள்ளார்.
இலங்கை தலைமை நீதிபதி மீது விசாரணை கோரிவரும் வழக்குரைஞர் குணரத்ன வன்னிநாயக மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதன் மூலம் அரசு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் முயற்சியானது, வழக்குரைஞர்கள் சங்கத்தை அச்சுறுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகத் தெரிகிறது என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நீதித்துறையின் சுதந்திரமும் சுயாட்சியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்த நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது என்று கூறிய அவர், அந்த எண்ணத்தை அழிக்க அரசு முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
அதே நேரம், கல்விப் பொது தராதரத் தேர்வுகளில் அறிவியல் வினாத்தாள் முன்னதாகவே வெளியாகியுள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டை, தேர்வுத் துறையே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அது குறித்த விசாரணையை முடுக்கிவிடுமாறு ரகசிய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் திஸ்ஸ அத்தநாயக.
வினாத்தாள் முன்னதாகவே வெளியாகும் முறை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இருந்து வருகிறது என்றும், அதனை இந்த அரசால் தடுக்க முடியாமல் போனது கல்வித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கச் செய்வதாகவும் திஸ்ஸ அத்தநாயக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக