ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சாப்பிடாமல் இருந்திடுவேன்; செய்தி படிக்காமல் இருக்க முடியாது'

"சாப்பிடாமல் இருந்திடுவேன்; செய்தி படிக்காமல் இருக்க முடியாது'

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.

உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.

நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.

எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.

தினமும் படிக்கிறீங்களா?அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.

உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?

உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக