திங்கள், 30 ஜூலை, 2012

போர்க் குற்ற வழக்கு முடிய ஐந்தாண்டாகும்: சொல்கிறது சிங்கள அரசு


போர் குற்ற வழக்கு முடிய ஐந்தாண்டாகும்: சொல்கிறது இலங்கை அரசு
 
 

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு, ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இறுதிக் கட்ட சண்டையில், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போர் குற்றம் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா., குறை கூறியிருந்தது. இது தொடர்பாக, படிப்பினை மற்றும் நல்லிணக்க குழுவும் சில பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தக் கோரி, இலங்கை அரசுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம், சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இலங்கை அரசு, அமெரிக்காவின் நிர்பந்தத்தை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா நிருபர்களிடம் கூறியதாவது:போர் குற்றம் குறித்த விசாரணைகள் தொடர்பாக கால அட்டவணை போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்த சண்டையின் போது நடந்த, போர் குற்றங்கள் குறித்த விசாரணை முடிய ஐந்தாண்டுகள் ஆகும். முதல் கட்டமாக, ராணுவம் கொடுத்த பட்டியலில் பலியான அப்பாவிகள் குறித்து விசாரிக்க ஓராண்டாகும். இந்த விசாரணையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதைத் தொடர்ந்து, வழக்குகளை நடத்தி முடிக்க கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். நல்லிணக்க குழு ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, எச்சரிக்கையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு லலித் வீரதுங்கா கூறினார்.

சர்வதேச நெருக்கடியை திசை திருப்பவே அரசு இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுவதாக, இலங்கை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். "ஏற்கனவே பல விசாரணை கமிஷன்கள் அளித்த அறிக்கையை, அரசு செயல்படுத்தவில்லை. எனவே, அரசின் செயல் திட்டங்கள் ஏமாற்று வேலையாகும்' என, இலங்கை அரசியல் விமர்சகர் குசல் பெரிரா தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக