திங்கள், 30 ஜூலை, 2012

"பள்ளிப் போக்குவரத்தில் பல ஓட்டைகள்':




"பள்ளி ப் போக்குவரத்தில் பல ஓட்டைகள்': அரசுக்கு சுருதி விட்டுச் சென்ற சேதி

தினமலர்
கோவை:அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள்...கவனக்குறைவான பெற்றோர்... அதிவேகமாக செல்லும் பள்ளி வாகனங்கள்... புத்தக சுமையுடன் சிரமப்பட்டு நெரிசலில் மாணவர்கள் ஏறிக் கொண்டிருக்கும்போதே, வேகமெடுக்கும் பஸ்கள்...பாதுகாப்பில்லாத ரோட்டோர சாக்கடை குழிகள், ஆழ் குழாய் கிணறுகள்...இப்படி பள்ளிக் குழந்தைகளை பலி வாங்க காத்திருக்கும் அபாயங்களை தடுக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சென்னை மாணவி ஸ்ருதி விட்டுச் சென்றுள்ள சேதி.

ஸ்ருதியின் மரணத்தையும் மற்றொரு மரணமாக கருதாமல், அரசு சுதாரித்தால் மட்டுமே, பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து பலியாவதை தடுக்க முடியும்.சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி, பள்ளி வாகனத்தில் இருந்த துவாரம் வழியாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அரசு நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய, ஒவ்வொரு முறையும் ஏதுமறியாத குழந்தைகள் பலிகடா ஆவது தொடர்ந்து வருகிறது.
ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகே விழித்துக் கொள்கின்றனர் அதிகாரிகள். வாகனங்களை கையாள்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஏற்கனவே இருக்கின்றன. இருக்கையில் அமர்ந்தபடி, "தாள்களில்' மட்டுமே கவனமாக இருக்கும் அதிகாரிகளால், விதிமுறைகளும், வெறும் தாள்களில் மட்டுமே உறங்குகின்றன.

ஏற்கனவே உள்ள விதிமுறைகளை, அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தினாலே போதும் என்பதே, பெற்றோரின் கருத்தாக உள்ளது.மூட்டைகளை அடுக்குவது போல், குழந்தைகளை திணித்து, ஆட்டோக்கள் பல தினமும் ரோட்டில் செல்கின்றன. மோட்டார் ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் கண்களில் இவை தென்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. இன்று ஸ்ருதி எனும் சிறுமி, பள்ளி போக்குவரத்து விதிமுறைகளில் உள்ள "ஓட்டைகளை'
சுட்டிக்காட்டவே வண்டியின் துவாரம் வழியாக விழுந்து தனது உயிரை தியாகம் செய்துள்ளாள்.

பாதுகாப்புக்கு பட்டியல்:
* பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் மட்டுமே, குழந்தைகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
* ஒப்பந்த அடிப்படையில் தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியிலும் மாற்று ஓட்டுனர் தயாராக பணியில் இருக்க வேண்டும்.
* அதிக குழந்தைககளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
* அரசு பஸ்களில் மாணவர்கள் ஏறுவதையும், இறங்குவதையும் உறுதி செய்த பின்னரே, நடத்துனர் பஸ்சில் ஏற வேண்டும்.
* நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளில் துவங்கும் நேரம், முடியும் நேரத்தை அரை மணி நேரம் முன்பின் மாற்றியமைக்க வேண்டும்.
* பள்ளிக் குழந்தைகளுக்கென பஸ் இயக்கும் திட்டத்தை, அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக