வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கணித் தட்டச்சசு முறைக்கு எவ்விசைப்பலகை தேவை?


தமிழ் 99  என்பது தேவையற்ற ஒன்று. (தமிழில் தட்டச்சிடத் தெரியாதவர்களுக்குத் தொடக்க நிலையில் உதவலாம்.) தட்டச்சு முறையில்  விரல் பயன்பாட்டிற்கு ஏற்ப விசைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதே முறையில்தான் கணிணி விசைப்பலகையும் இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில் தட்டச்சு வெற்றியாளர்களை உருவாக்கிக் கொண்டு அதற்கு முரணான கணி விசைப்பலகையைப்பயன்படுத்த வேண்டும் என்பது  உளவியலுக்கும் மூளை வளர்ச்சிக்கும் எதிரானது.  பயன்பாட்டு நடைமுறையை உணராமல் அறிவிக்கப்படும் தமிழ் 99 என்பதும்  வேறு வணிகர்களுக்கு நன்மை தரக்கூடியதே. எனவே, புதிய தட்டச்சு முறை, முந்தைய தட்டச்சு முறை,  பரிந்துரைக்கப்படும் தமிழ் ௯௯ முறை என எவ்வகையிலும் தட்டச்சிடலாம் எனத் தற்பொழுது இருக்கும் நடைமுறையே தொடரலாம். எழுத்துருக்களும் சீருரு ( யூனிகோடு) என்றெல்லாம் வரையறுக்காமல்  குறிப்பிடத் தகுந்த எழுத்துருக்களில் எதைப் பயன்படுத்தினாலும் அனைவரும் அறியும் வண்ணம் கணியமைப்பை உருவாக்க வேண்டும். தட்டச்சு நிறுவனங்கள் அனைத்தும் கணித்தட்டச்சு பயிற்றுவிக்கப்படும் வகையில் உரிய தேர்வு முறை மாற்றங்கள் தேவை.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தமிழில் கணினியைப் பயன்படுத்த, பொதுவான எழுத்துருக்களும், விசைப்பலகையும் வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மறுபுறம், இவற்றை தயாரித்து, அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டும், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ் 99: கணினிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, தமிழில் எழுத்துருக்கள் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. தனியார் பதிப்பகங்களும், ஏடுகளும், தங்கள் பயன்பாட்டிற்காக, தமிழ் எழுத்துருக்களையும், அதற்கான விசைப் பலகைகளையும் உருவாக்கினர். ஆனால், ஒருவர் உருவாக்கிய முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை, மற்றொருவர், சிறப்பு மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க இயலவில்லை. இது, பொறியியல் ரீதியாக ஒவ்வுமை இல்லாதல் எனக் குறிக்கப்படுகிறது. இதே முயற்சியில், தமிழக அரசும் ஈடுபட்டது. அதன் விளைவாக, "தமிழ் 99' என்ற விசைப்பலகை முறையும், அதற்கான எழுத்துருவும் உருவாக்கப்பட்டது. இது, உலகம் எங்கும் ஏற்கப்பட்டு உள்ள ஒருங்குறி (யுனிகோட்) முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால், தகவல் பரிமாற்றத்திற்கு உகந்ததாக உள்ளது. அதாவது, இதை வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் இணைய தளங்களை, உலகில் எந்த பகுதியில் இருந்தும், சிறப்பு மென்பொருட்களின் உதவி இல்லாமல், ஆங்கிலத்தைப் பார்ப்பது போலவே பார்க்கலாம். "தமிழ் 99' முறையை, தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என, ஜூலை 1999ல், அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் இல்லை: ஆனால், அரசு அலுவலகங்களில், இந்த முறை, இதுவரை பயன்பாட்டுக்கே வரவில்லை. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அரசுப் பணிகளுக்காக, "தமிழ் 99' பயன்படுத்துவது பற்றிய அரசு ஆணை இருப்பதே, பெரும்பாலான அரசு அலுவலர்களுக்கு தெரியாது. தனியார் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்,'' என்கிறார். அரசு துறைகளிலும் சரி, மக்கள் பயன்பாட்டுக்கும் சரி, "தமிழ் 99' இதுவரை கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால், மலேசியாவில், "தமிழ் 99' அரசு மற்றும் தனியார் பயன்பாட்டிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளில், அதிகாரப்பூர்வமாக, "தமிழ் 99' அமல்படுத்தப்பட்டுள்ளது.

தயக்கம் ஏன்? தமிழகத்திலோ, தமிழ் கணினி பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மாநாடுகளை நடத்துதல்; சிறப்புக் குழுக்களை அமைத்தல்; தமிழ் கணினி எழுத்துரு மற்றும் விசைப்பலகையை உருவாக்க ஆய்வுகளை ஊக்குவிக்க நிதி அளித்தல் என, தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம், தமிழக அரசு, நிதி மட்டும் செலவழித்த வண்ணம் உள்ளது. அரசு துறைகளில், "தமிழ் 99' முறையை அமல்படுத்தினால் தான், அது தனியார் பயன்பாட்டிற்கும் பரவும். தற்போது பொதுவான முறை இல்லாததால், தமிழ் விசைப்பலகை கூட எளிதில் கிடைப்பதில்லை. பொதுவான முறை ஏற்கப்பட்டு, பரவலாக்கப்பட்டால், பல பெரிய தனியார் நிறுவனங்கள் கூட, தமிழில் மென்பொருட்கள் தயாரிக்க முன் வருவர். தமிழில் உள்ள இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசிகள் முதலான மின்னணு சாதனங்கள், தமிழிலேயே இயங்க வழி பிறக்கும். இவ்வளவு நன்மைகள் இருந்தும், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, வெவ்வேறு முறைகளால் ஏற்படும் ஒவ்வுமை பிரச்னையை வைத்து, லாபம் பார்க்கும் சில தனியாருக்காக எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கணினி தமிழ் அறிஞர்கள் கூறும்போது, "தமிழ் விசைப்பலகை மற்றும் எழுத்துரு முறைகளில், தனியார் கொடிகட்டிப் பறக்கின்றனர். இந்த நிலையில், "தமிழ் 99' மட்டுமே, தமிழின் பொதுவான எழுத்துரு; இதை மட்டுமே பன்படுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டால், தற்போது கொடிகட்டிப் பறக்கும் தனியாரின் வியாபாரம் நின்று விடும். இதனால் தான், "தமிழ் 99' பொதுவானது என அறிவிக்க, அரசு தயக்கம் காட்டி வருகிறது' என்கிறார். இந்த நிலை நீடித்தால், எந்த காலத்திலும், தமிழுக்கு பொதுவான விசைப்பலகை மற்றும் எழுத்துரு முறையை கொண்டு வர முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆங்கிலம் படித்தவர்கள் தான், கணினியைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம் என்ற நிலையை மாற்றி, தமிழர்களின் நலன் காக்க, தன் 13 ஆண்டு உறக்கத்தில் இருந்து, அரசு விழிக்குமா?
கல்வி கழகத்தின் செயல்பாடு: தமிழ் இணைய கல்விக் கழகத்தில், தமிழ் மென்பொருட்களை மேம்படுத்த, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மென்பொருள் மேம்பாட்டுக்காக, தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், தனி நிதியத்தையும் அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிதியத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மென்பொருள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, தமிழ் இணைய கல்விக் கழகம் நிதி உதவி பெற, அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை, 17 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 12 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன; ஐந்து திட்டங்கள் நடந்து வருகின்றன. முடிக்கப்பட்ட திட்டங்கள், தமிழ் இணைய கல்விக் கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் வெளியிடப்பட்டு, இலவச பதிவிறக்கத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக