செவ்வாய், 31 ஜூலை, 2012

திருவாரூர் அருகே 1100 ஆண்டு பழமையுடைய கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே 1100 ஆண்டு பழமையுடைய கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு

First Published : 31 Jul 2012 03:29:26 PM IST


திருவாரூர், ஜூலை 31: திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலத்தில் 1100 ஆண்டு பழமையான கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சீதக்கமங்கலம் என்ற கிராமத்தில் இருந்த பழைய சோழர் கால சிவாலயம் இடிந்து தரை மட்டமாக இருந்துள்ளது. அந்த ஆலயத்தைப் புதுப்பிப்பிக்க முன்னாள் ஊராட்சித் தலைவர் செ.இராமலிங்கம் மற்றும் ஊர்மக்கள் இணைந்து இடிபாடுகளைச் சீர்செய்தபோது மூன்று கல்வெட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மற்றும் ஆய்வாளர் சுந்தர் பரத்வாஜ், தமிழ்ப்பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அக்கல்வெட்டுக்கள் பற்றி குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவிப்பது:  சீதக்கமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் காலத்தால் பழமையானது பராந்தக சோழனின் 5-ஆம் ஆண்டுக்குரியதாகும். இது கி.பி.912ஐக் குறிப்பிடுவதாகும். அதில் அவ்வூரின் பழம் பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.நிலைக்கால் ஒன்றில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு இராஜராஜனின் 27-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1012) பொறிக்கப்பட்டது. அச்சாசனத்தில் அவ்வூருக்கு இரண்டு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுங்கமங்கலம் என்னும் அபிமானபூஷண சதிர்வேதிமங்கலம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.அபிமானபூஷணன் என்பது இராஜராஜனின் பட்டப்பெயராகும், நாகப்பட்டினத்தில் கடாரத்து (மலேசியா) அரசன் கட்டிக் கொண்டிருந்த பௌத்தக்கோயிலிக்கு மாமன்னன் இராஜராஜன் 97 வேலி நிலத்தைத் தானமாகக் கொடுத்து அதைச் செப் பேட்டில் சாசனமாகப் பதிவு செய்தான். அச்சாசனத்தில் கையொப்பமிட்ட துர்பில் ஸ்ரீதரபட்டன் என்பவர் ஸ்ரீதுங்கமங்கலத் தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, 1100 ஆண்டுகால அக்கோயிலைப் புதுப்பிக்க அவ்வூர் மக்கள் முன்வந்தது பாராட்டுக்குரியது என்றார் பாலசுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக