செவ்வாய், 31 ஜூலை, 2012

ஏட்டுச் சுரைக்காய்!

ஏட்டுச் சுரைக்காய்!

First Published : 30 Jul 2012 12:50:32 AM IST


 பிளஸ் 2 தேர்வில் 1,150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த ஒரு மாணவிக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பத் தெரியவில்லை; அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அந்த மாணவியே சொன்ன தகவல் இது.  சுவரில் ஒரு வட்டத்தை வரைந்து அதில் ஒரு புள்ளியை வைத்து, அந்தப் புள்ளியைப் பார்த்துக்கொண்டே (கவனம் சிதறாமல் இருப்பதற்காகவாம்) படிக்க வேண்டும் என ஆசிரியர் நிர்பந்தம் செய்ததாக அதே நிகழ்ச்சியில் மற்றொரு மாணவர் கூறினார்.  கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர், கல்விக் கட்டணம் தொடர்பாக அந்தப் பள்ளிக்கு எதிராக நியாயம் கேட்டதால், பத்தாம் வகுப்பில் 450-க்கு மேல் மதிப்பெண்கள்பெற்ற அவரது மகனுக்கு பிளஸ் 1 வகுப்பில் சேர அந்தப் பள்ளி அனுமதி மறுத்துவிட்டதாம்.  நண்பர் ஒருவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன், வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் அளிக்காததால், பாதியிலேயே வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.  மதிப்பெண் இலக்கைக் குறிவைத்து, மாணவர்களை வேட்டையாடும் தனியார் பள்ளிகளின் இன்றைய உண்மையான முகம் இதுதான்.  பாடப் புத்தகத்தை மட்டுமே மனனம் செய்யவைத்து, வெளியுலக அறிவைப் போதிக்காமல், ஒரு விண்ணப்பத்தைக்கூட நிரப்பத் தெரியாத அளவுக்குதான் தனியார் பள்ளிகள் மாணவர்களை உருவாக்குகின்றன.  பிளஸ் 2 தேர்வில் 1,150 மதிப்பெண்கள் எடுத்த மாணவியின் அறிவுத்திறமையே இதுதான் என்றால், சராசரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கும் திறன், நல்லது எது, கெட்டது எது என விரைவாக ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்யும் திறமை, பொது அறிவில் சிறந்து விளங்குவது என மாணவர்களை ஆளுமைத்தன்மையுடன் உருவாக்க வேண்டிய பள்ளிகள், அவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகத்தான் உருவாக்குகின்றன.  கவனம் சிதறாமல் இருக்க சுவரில் வட்டத்தை வரைந்து அதில் வைக்கப்பட்ட புள்ளியையே பார்த்துக்கொண்டு படிக்க வேண்டுமாம்; மாணவரின் கவனம் அந்தப் புள்ளியில் இருக்குமா? பாடத்தில் பதியுமா? அந்த ஆசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும்.  கேள்விக்குச் சரியாக பதில் அளிக்காத மாணவரை வீட்டுக்கு அனுப்பியதால் விடை தெரிந்துவிடுமா? அந்தக் கேள்விக்கான பதிலை வகுப்பு முடிவதற்குள் படித்து, சரியாகச் சொல்ல வேண்டும் என கூறியிருந்தால் அதுதான் சரியான தீர்வாக இருந்திருக்கும்.  இதெல்லாம் பல தனியார் பள்ளிகளில் தவறாமல் நடக்கும் தவறுகள். நூறு சதவீத தேர்ச்சி எனும் வியாபார நோக்கத்துக்காக, பத்தாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு நிர்பந்தங்களை அளித்து, அவர்களைப் பள்ளியைவிட்டே நீக்குவது அல்லது மனரீதியான சித்திரவதைகளால் சம்பந்தப்பட்ட மாணவர்களை மனம்நொந்து பள்ளியைவிட்டு விலகவைப்பது என பெரும் "அரசியலே' செய்கின்றன பல பள்ளிகள்.  பத்தாம் வகுப்பில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டும் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பது, அதே பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 10 வரை படித்திருந்தாலும், நூறு சத தேர்ச்சி, ஸ்டேட் ரேங்க் என்கிற "பள்ளிக்கு நன்மைதரும்' விஷயங்களை மட்டும் கருதி, மனசாட்சியைக் கொன்று அந்த மாணவர்களைச் சேர்க்க மறுப்பது, வகுப்பில் பார்த்தால் குற்றம், பேசினால் தப்பு, சிரித்தால் தண்டனை என எதற்கெடுத்தாலும் அபராதம் மேல் அபராதம் விதிப்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது என தனியார் பள்ளிகளின் "தேர்ச்சி நுணுக்கங்கள்' ஏராளம்.  தமிழகத்தில் கல்விச் சேவையாற்றுவதில் தனியார் பள்ளிகள் பெரும் சேவை ஆற்றுகின்றன என்று புள்ளிவிவரங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், மாணவர்களை ஆளுமைத்திறம் உடையவர்களாக, இரக்க சிந்தனை கொண்டவர்களாக, சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக, சேவை எண்ணம் கொண்டவர்களாக, பொது அறிவில் சிறந்தவர்களாக உருவாக்குவதில் பல தனியார் பள்ளிகள் தவறிவிடுகின்றன.  மதிப்பெண்களை மட்டுமே இலக்காக வைத்து, கல்வியைத் தண்டனையாக்கி ஸ்டேட் ரேங்க் பெற்று, அதை அடுத்த கல்வியாண்டுக்கான வியாபாரத்துக்கு அஸ்திவாரமாகத்தான் பயன்படுத்துகின்றன.  தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் பெரும் சாதனையாளர்களாக மாறுவதில்லையா எனக் கேட்கலாம். அப்படியும் சாதனையாளர்கள் உருவாகத்தான் செய்கிறார்கள். மொத்தத்தில் சில தனியார் பள்ளிகள் கூறிக்கொள்ளும் கல்விச் சாதனை எல்லாம் வெறும் "ஏட்டுச் சுரைக்காய்'தான் என்றே இதையெல்லாம் பார்க்கும்போது தோன்றுகிறது.   
கருத்துகள்

Ondru நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் யாருக்கும் எதை எப்படி எப்போது செய்வது என்பது என்று புரியவில்லை. எதை படித்தால் நமது அறிவும் வளம்பெறும் வாழ்கையும் வளம் பெரும் என்பது விளங்கவில்லை. ஒன்றை படித்து முடிப்பதற்குள் மற்ற புதிய மாற்றம் வந்துவிடுகிறது. நமது வாழ்கையும் எதைசுற்றி சுற்றி வருவது என்பது போல ஆஹிவிடுகிறது. இதில் எதை நோக யாரை வைய?
By மாடிகளை
7/30/2012 11:14:00 AM
இதில் புதுமை ஒன்றும் இல்லை. விண்ணப்பத்தை நிரப்புவது, முக்கியமான காரியம் ஆதலால் பெற்றோர்கள் உதவுவார்கள். நம் கல்வி முறை அப்படி. படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, செயலறிவு இல்லது ஒன்றும் செய்ய முடியாது. முன்பு பொறியியல் கல்லூரியில் க்ளட்ச் என்ன என்று சொல்லி தராமலேயே, பார்முலா மூலம் படிப்போம். கார் மிக குறைவாக இருந்த காலம். தமிழ் நாட்டில் மிக சில பொறியியல் கல்லூரிகள் இருந்த காலம்.படிப்பின் அளவு தான் கூடுதலே தவிர தரம் குறைவு. யார் கவலை படுகிறார்கள்.
By gopalan
7/30/2012 8:56:00 AM
மதிப்பெண்களை மையமாகக் கொண்ட கல்வி முறை இப்பொழுது!அரசின் கையை மீறிய தனியார் பள்ளிகள் !பெற்றோர்களின் மனதை ஈர்த்த கல்வியும் இதுவே!ஒதுக்கீடும் மதிப்பெண்களையே மையம் கொண்டுள்ளது.ஆதலின்,இப்பொழுது இப்படி கூப்பாடு போடுவதில் அர்த்தமுள்ளதா ?வியாபாரம் எனில் பொருளையே தரத்தையே சொல்ல வேண்டும்.உண்மையில்,இப்படி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஊடகங்களிலும் மாணவர்களின் மதிப்பெண்களும் அவர்களின் ஒதுக்கீடும் பிரதனமாயுள்ளன.பிராயசித்தமாக கட்டுரை,கவிதை,ஒப்புவித்தல்,பாடல்,ஓவியம்,விளையாட்டு,வினாடி வினா...இத்யாதிகளில் போட்டிகள் நடத்தலாம்.இப்பொழுது,'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' போட்டியை' புதிய தலை முறை' நடத்துகிறது.ஆனால்,அரசுப்பள்ளிகள்,உதவி பெறும் பள்ளிகளின் பங்களிப்பு வெகு குறைவு!
By பி.ஸ்தனிஸ்லாஸ்
7/30/2012 8:22:00 AM
... உண்மைதான் ! பல்வேறு [ அகில இந்திய ] ] நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தரம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கிறது . ஏன் சென்னையில் உள்ள ஐ .ஐ. டி .-யிலும் & வேல்லூர் காலேஜில் படிக்கும் மாணவர்களில் சுமார் எண்பது சதவிகதம் மாணவர்கள் ஆந்த்ராவை சேர்ந்தவர்களே !! 1197 / 1200 வாங்கும் தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அடிமட்டத்தில் இருப்பதற்கு காரணம் பள்ளிகள் மார்க்கு உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலைகள் ஆனதே காரணம் !இதில் சந்தேகமே இல்லை !
By ர.Krishanmurthy
7/30/2012 6:14:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக