ஞாயிறு, 29 ஜூலை, 2012

தீருமா தமிழின் துயரம்? உரத்த சிந்தனை இரா. ஆஞ்சலா இராசம்



தீருமா தமிழின் துயரம்? உரத்த சிந்தனை
இரா. ஆஞ்சலா இராசம்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்' இத்தகு வரலாற்றை உள்ளடக்கிய, தமிழ் மொழி தான், இன்று, அரசியல், சினிமா வியாபாரிகளிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தன் மொழிக்கு பெருமை சேர்ப்பவன் தான், உண்மையான மொழிப் பற்றாளன்; மொழியால் தனக்கு புகழ் தேடிக் கொள்ளபவனல்ல. இதில், இரண்டாவதைத் தான், இன்று, பெரும்பாலானோர் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவோர் கூட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது.

யார் விற்றாலும், வியாபாரம் ஆகிவிடுவதால், தமிழை விற்பவர்கள் எல்லாம், தலைவர்களும் ஆகிவிடுகின்றனர்; அதுவும், தமிழர்கள் அனுமதியே இன்றி... தமிழனைப் போலவே, அவன் பேசும் தமிழும் நாதியற்று கிடக்கிறது. சேர்ந்தால் போல், நான்கு வார்த்தை தமிழில் பேசினாலே, வியப்போடு விழி உயர்த்தும் காலம் இது. ஆங்கிலம், சரளமாய் புகுந்து விளையாடுகிறது. தமிழகப் புத்திரர்களுக்கு, யாரைப் பார்த்தாலும்,"ஹாய்' சொல்லவே தோன்றும். அதிலும், "எனக்கு தமில் பேசவே வராது' என்று கூறும், "மேதை'கள் தான் அதிகம். தமிழராகப் பிறந்து, தமிழர் மத்தியிலே வளர்ந்து, "தமில்' வராது, தெரியாது என்று, இப்படி பெருமையுடன் கூறும், "தனிச்சிறப்பு' தமிழனை மட்டுமே சாரும். அப்படி பேசினாலும், காது கொடுக்கும் நிலையில் தமிழ் இருப்பதில்லை. "மார்னிங் என்ன ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்ட; நாளைக்கு ஈவினிங் எங்க மீட் பண்ணலாம்?' என்பது தான், இன்றைய,"சுந்தரத் தமிழ்!' (ஆங்கிலம் கலக்காமல், ஒரு வாக்கியம் கூட முழுமையாக பேச முடிவதில்லை என்பது எவ்வளவு வெட்கக் கேடு).

தமிழுக்கு பேராபத்தே இந்த, "தமிங்கிலம்'தான். தமிழை அறிந்து கொல்ல (எழுத்துப்பிழை இல்லை), பிரத்யேக வகுப்பே தேவையில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழில், ஓர் எழுத்தைக் கூட அறியாமல், ஒரு தமிழன், முனைவர் பட்டம் வாங்கி விடலாம்; ஆனால், ஆங்கிலம் தெரியாமல், அவனால் முதல் வகுப்பு கூட தேர்ச்சி பெற முடியாது. "தமிழ் தமிழ்...' என, மூச்சுக்கு 300 தடவை நீட்டி முழங்கும் திராவிடக் கட்சிகள், 40 ஆண்டுகளாக சாதித்தது இதைத் தான். இரு மொழிக் கொள்கையால், இந்தியோடு சேர்ந்து, தமிழுக்கும் இடமில்லாமல் போனது தான் உண்மை. அந்த வகையில், அது, இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல; மறைமுக தமிழ் எதிர்ப்பு போராட்டம் கூடத் தான். தமிழைக் காக்க நடந்த போராட்டம் என்றால், தமிழை அல்லவா வளர்த்திருக்க வேண்டும்; ஆனால், நம்மை ஆதிக்கம் செய்தவர்களின் மொழியான ஆங்கிலத்தை வளர்த்து, தமிழை, "தமிள் மொலி'யாக அல்லவா மாற்றியுள்ளனர், நம் திராவிட சிகாமணிகள்; இதுதான், தமிழ்த்தாய் மீது இவர்கள் கொண்டுள்ள, "அதீதப்பற்று!' ஆங்கிலம் பேசினால் அறிவாளி; தமிழ் பேசினால் தற்குறி என்ற மனப்பான்மை நிலவுவதால், பல் முளைக்கும் முன்பே, "மம்மி, டாடி...' என, அன்னிய மொழியை பேசத் துவங்குகின்றனர், தமிழ்த்தாயின் தன்னிகரற்றப் புதல்வர்கள். கல்விக் கூடத்திலும் ஆங்கிலத்துக்கே அரியாசனம்; தமிழுக்கில்லை. பல்கலைக் கழகங்களில் பாடமொழியாக தமிழ் இல்லை; ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை. நீதிமன்றத்தில், வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை. ஆக, இப்படி, இருக்க வேண்டிய எந்த இடத்திலும் தமிழ் இல்லை. இப்படி இல்லை என்று கவலைப்படுவது ஒரு நிலை என்றால், "தமிழ்(!)' தொலைக்காட்சிகள் பலவும், "தொல்லைக்'காட்சிகளாக மாறி, தமிழை கொலை செய்து கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. சின்னத்திரையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், தமிழைக் கூட அன்னிய மொழியை போன்றே, "வால்க, வலர்க...' என்றெல்லாம் உச்சரிப்பதை கேட்கும் போது, காதில்,"தேன்(ள்)' கொட்டுவது போலிருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, "தமிழ் தமிழ்...' என்று முழங்கும் பலருக்கும் கூட,"தமில்' தான் வருகிறது. நாக்கை மடித்துப் பேச வரவில்லை போலும்! பாவம்... இவர்களல்ல, "நற்றமிழ்!'

இப்படி, சின்னத்திரையே, "சீன்' போட்டால், பெரியத்திரை, "பிலிம்' காட்டினால் தானே, அதற்கு மதிப்பு! அதனால், கொஞ்சம் தமிழ், நிறைய இங்கிலீஷ் இருந்தால், அதற்கு பெயர் தமிழ்ப் படம்; படம் முழுவதும், தமிழ் வசனம் மட்டுமே இருந்தால் அது,"டப்பிங்' படம். இது தான், இன்றைய, "தமிழ்ப் படத்'தின் சிறப்பு! பாடல்கள் அதை விட சூப்பர். ஆஹா... கேட்டுக் கொண்டே இருக்கலாம்; "ஒய் திஸ் கொலவெறி, டாடி, மம்மி வீட்டிலில்லை; அஸ்லி புஸ்லி; டொட் டொய்ங்; ரண்டக்க ரண்டக்க; நாக்கு முக்க...' என, தூய தமிழில், பொருள் பொதிந்த பாடல் வரிகள்! படத் தலைப்புகளையோ கேட்கவே வேண்டாம்! கருத்தாழத்துடன்(!) , மனதைக் கவரும் வண்ணம் (!), செந்தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. "தமிழில் பெயர் வைத்தால், வரிவிலக்கா; பிற மொழியில் வைத்தால், அபராதம் விதிக்க வேண்டியது தானே... ' என்றெல்லாம் எண்ணி விடக் கூடாது. அது, தமிழ்த் துரோகம் ஆகிவிடும். மானியம், வரிவிலக்கு, திரைப்படம் எடுக்க பணம் என்றெல்லாம் இருந்தால் தானே, தமிழ் வளரும்; தமிழனும் செழிப்பான்! அடுத்து, குழந்தை, "ம்மா...' என்று அழுதாலோ, அழைத்தாலோ கூட வரிவிலக்கு உண்டென்று, விரைவில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழை வளர்க்க வேண்டாமா அரசு!

இது ஒரு ரகம் என்றால் அடுத்தது, தமிழ் உணர்வை வைத்து செய்யப்படும் வியாபாரம். "தமிழன்' என்று ஒரு படம்; படத்தை பார்த்தபின், தமிழனுக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்ததில், தலைவலி வந்தது தான் மிச்சம். பின்தான் புரிந்தது, "தமிழன்' என்று சொன்னாலே அது,"தமிழுணர்வு!' என்று; இதை எண்ணி வியந்ததில் புல்லரித்து விட்டது. இதுபோல், இன்னும் எத்தனை பேருக்கோ! இதேபோல், ஒழுக்கத்துடன் கூடிய வீரம் என்று பொருள்படும் படம் ஒன்றில், "தமிழன் வீரத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது' என்றொரு வசனம். கதைக் கருவிற்கும், இந்த வசனத்திற்கும் கடுகளவும் சம்பந்தம் கிடையாது. இவர்களுக்கு, திடீர் திடீர் என்று எப்போது தமிழ்ப்பற்று வரும் என்று நினைத்தாலே, மெய்சிலிர்த்து விடுகிறது. ஒரு காலத்தில், நெஞ்சில் சுமந்து, தாயை விட உயர்வாகப் பேணப்பட்ட தமிழ் தான், "டெங்கு' காய்ச்சலால் பீடிக்கப்பட்டதைப் போல, உயிரைக் கொடுத்து காக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த லட்சணத்தில், எட்டு உலகத் தமிழ் மாநாடுகளையும், ஒன்பதாவதாக, உலகச் செம்மொழி மாநாட்டையும் கடந்துள்ளோம். "டமிலில்' என்ன இருக்கிறது என்று கேட்கும், "டமிலர்'களை வளர்த்து விட்டு, "செம்மொழி'அந்தஸ்து பெற்ற மொழி என மார்தட்டிக் கொள்வதில் பெருமை என்ன வேண்டி கிடக்கிறது? ஐரோப்பியனும், அமெரிக்கனுமா பைந்தமிழில் கொஞ்சிக் குலாவ போகிறான்?

இது இப்படி என்றால், இன்னொரு கூட்டம், "தமிழ் வாழ்க; தமிழன் வாழ்க' என்று வாய்ச்சவடால் விட்டு, தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருவதாகக் கூறி, தமிழின் பெயரை வைத்து, தனக்கு ஆதாயம் தேடிக் கொண்டு, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. நல்லவேளை, இந்தக் கூத்தையெல்லாம் பார்க்க, பாரதி இல்லை; இருந்திருந்தால், "தீ'யாக மாறி, பாரை அழித்திருப்பானோ என்னவோ! தமிழ் பேசுங்கள்; படியுங்கள்; பயன்படுத்துங்கள் என்றால், பிற மொழிகளை புறக்கணியுங்கள் என்றோ, கற்றுக் கொள்ள வேண்டாம் என்றோ, ஆங்கிலம் ஒழிந்துவிட வேண்டும் என்றோ அர்த்தமில்லை. இடம், பொருள் அறிந்து, எங்கு தேவையோ அங்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தாய்மொழியை புறக்கணித்து, பிறமொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதுதான். தமிழர்களுக்கு ஆங்கிலம் தேவைப்படுவது, அறிவு மொழியாக அல்ல; தொடர்பு மொழியாக என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் தெரிந்தாலும், அன்னிய மொழியில் பேசும் மோகத்தை, துரோகத்தை கைவிட வேண்டும். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாட்டை எதிரொலிக்கும் காலக் கண்ணாடி. அந்த வகையில், தமிழனின் முகவரி தமிழ்;அந்த முகவரியை இன்று இழந்து கொண்டிருக்கிறோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எங்கே தமிழ் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழன் இருக்கிறான்; தமிழ் தான் இல்லை என்ற காலம் வரும் முன், சிந்திப்போம்; செயல்படுவோம். email: anjalarajam@gmail.com

- இரா. ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி


எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
guru - kaf,ஆப்கானிஸ்தான்
29-ஜூலை-201202:04:49 IST Report Abuse
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழை கொலை செய்து கொண்டிருக்கும் தமிழின் புதல்வர்களான டமீலர்கலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நமது தமிழன் அடையாளத்தையும் முகவரியையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிவதில்லை

Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201201:38:54 IST Report Abuse
நமக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. அதை நாம் தான் காக்க வேண்டும். நாட்டு நடப்புகளை நன்றாக கவனித்து சிந்தித்து எழுதியிருக்கிற தங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.தினமலரில் கருத்து எழுத்பவர்கள் என்க்ளிஷிலும் எழுதலாம் தமிழிலும் எழுதலாம். ..ஆரம்பத்தில் சிலர் மட்டுமே இங்கிலிஷில் எழுதினார்கள். அது இப்போது அறவே அற்று பொய் விட்டது. நூறில் ஒருவரோ இருவரோ எழுதுகிறார்கள். அதுவும் அவர்களுடைய தமிழ் எழுத்து நடை என்னை வியக்க வைக்கிறது. இந்திவேண்டுமா?,,,வேண்டாமா? என்பதற்கு கருத்து எழுத வேண்டிய நிலை வரும்போது பல வாசகர்கள் ஆணித்தரமாக இந்தி வேண்டவே வேண்டாம் என்று சொல்வதை படிக்கும்போது தமிழ் இன்னும் வாழ்கிறது வாழும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். முடிந்தால் பல மொழிகளை கற்று கொள்வோம். நம் முதல் மொழி தமிzh என்பதை நினைவில் கொள்வோம். தங்களை போன்ற தமிழ் ஆர்வலர்கள் உள்ளவரை தமிழ் வாழும் வளரும் என்பதில் ஐயமில்லை. ...

 
தமிழ் நலம் நாடும் மக்களின் கருத்துகளை நன்கு  எதிரொலித்துளள்ளார் ஆஞ்சலா இராசம். பாராட்டுகள். இக்கருத்துகளை வெளியிட்ட தினமலருக்கும் பாராட்டுகள்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக