வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தொண்டினைத் தொடரும் மூதாட்டி

சொல்கிறார்கள் : தினமலர்
"சேவையை த் தொடர்கிறேன்!'

சமூக சேவையாற்றி வரும், 82 வயதான ரத்தினம்: ராஜபாளையம் அருகில், ஜமீன்கொல்லம் கொண்டான் கோட்டையில், பெரிய பண்ணையார் குடும்பத்தில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம் என்பதால், மதுரையில் செயின்ட் பெசன்ட் கான்வென்ட்டில் படித்தேன். நன்றாக படிப்பேன்; இருந்தாலும், பெண் என்பதால், 10ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்கவில்லை. நான் பள்ளியில் படித்த போது, சேவை செய்வது குறித்து, என் ஆசிரியர் வகுப்பு எடுத்தார். எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், அப்போதே என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது. கடந்த, 1950ல், திருமணத்திற்குப் பின், கணவர் ஆறுமுகத்தின் சொந்த ஊரான தளவாய்புரத்திற்கு வந்தேன். மாமியாரின் கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்ததால், அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும், வீட்டு வேலையாட்களுக்கு, சிறிய உதவிகள் செய்து கொண்டே இருப்பேன். எங்கள் ஊர் பஞ்சாயத்தில், பெண்கள், "வார்டு மெம்பராக' பொறுப்பிற்கு வர வேண்டும் என, என் மாமனாரிடம் விவாதம் செய்து, ஊராட்சி மன்ற உறுப்பினராகி விட்டேன். "வாசுகி மகளிர் மன்றம்' ஆரம்பித்து, அதன் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க உதவினேன். வயல் வேலை செய்யும் பெண்களால், தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்க இயலாது. எனவே, அப்பெண்களின் குழந்தைகளுக்காக, பாலர் பள்ளியைத் துவங்கினேன். ராஜபாளையம் கலெக்டர் உதவியுடன், எங்கள் ஊர் பெண்களுக்கு, தையல் கற்றுக் கொடுக்க பயிற்சி பள்ளியை துவங்கினேன். என் அழைப்பை ஏற்று, முதலில் ஐந்து பெண்கள் மட்டுமே வந்தனர். பின் படிப்படியாக, 50, 60 என, எண்ணிக்கை கூடியது. பயிற்சிக்கு வரும் பெண்களின் குழந்தைகளை பாலர் பள்ளியில் வைத்து, நானே கவனித்து வந்தேன். அன்றைய கால கட்டத்தில், நான் சமூக சேவையில் ஈடுபட, என் கணவர் உறுதுணையாக இருந்தார். இப்போது, என் இரு மருமகள்களின் துணையுடன், என் சேவையை தொடர்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக