புதன், 25 ஏப்ரல், 2012

செங்கற்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக - வைகோ

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்திடுக! வைகோ அறிக்கை

vaiko1300
நூற்றுக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள், தமிழக ‘கியூ’ பிரிவு காவல்துறையினரால் பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளின் மூலம், சட்டவிரோதமாக செங்கற்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நீதிமன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்ற வாயிலிலேயே மீண்டும் கைது செய்து, இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
இவர்கள் தமிழீழ அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் என்று, சிங்களப் பேரினவாத அரசின் உளவுத்துறை மூலமாக இந்திய அரசுக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டு, சிங்கள அரசின் அடக்குமுறைச் செயல்பாடுகளை நம்முடைய காவல்துறை மூலமாக இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவர்கள் தமிழீழ அரசில் பணியாற்றினார்கள் என்பதைத் தவிர, வேறு ஒன்றும் அறியாதவர்கள். அப்படி இருக்கையில் பீடி, தீப்பெட்டி, பேட்டரி கடத்தினார்கள் என்று ஒரு விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பாசிச மனப்பான்மை.
தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று, உயிரைப் பணயம் வைத்து கடல் கடந்து வந்து, இங்கே சொல்லொணாக் கடும் துயரில் வாடி வதங்குகிறார்கள். நீண்ட நாட்களாகச் சிறை வைக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி, காந்திய அகிம்சை வழிப் போராட்டமான உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு கடந்த 16.04.2012 திங்கள்கிழமை முதல் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன் ஆகியோர் உண்ணாநிலைத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். பத்திரிகைகள் வாயிலாக செய்தி அறிந்து அவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு ஆறுதல் சொல்லி, உண்ணாவிரதத்தைக கைவிட வலியுறுத்திட, என் வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு மற்றும் கழகத் தோழர்கள் 22.04.2012 திங்கள்கிழமை சென்றபோது, சிறப்பு முகாமின் நிலைய அதிகாரியான வட்டாட்சியர் திரு. வெங்கடேசன், காவல்துறை ஆய்வாளர் திரு. குமரன் மற்றும் காவலர்களால் வாயிலுக்கு முன்பாகத் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
காரணம் கேட்டபோது, இரத்த சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று சொல்லி உள்ளனர். அப்படியானால் வேலூர் சிறையில் சகோதரி நளினியை இத்தாலி சோனியாவின் மகள் பிரியங்கா எப்படிச் சந்தித்தார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே விளங்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் சுதந்திரமாகத் தாய்த் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு உரிமை மறுக்கப்படும் நிலையில், இனி வாழ்வதில் பயன் இல்லை என்று தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து உள்ளதாக வருகின்ற செய்திகள், இதயத்தை வாள்கொண்டு பிளப்பதாக உள்ளது. உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வரும் சகோதரர்கள் நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை. உங்கள் காயங்களுக்கு மருந்து தடவ, நாங்கள் இருக்கின்றோம். விரைவில் மலரப் போகும் சுதந்திரத் தமிழீழ தேசத்தில், உங்களைப் போன்றவர்களின் பணி தேவை.
இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாத அரசால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் முள்வேலி முகாம்களை மூடிட நாம் குரல் கொடுக்கும் அதே வேளையில், தாய்த் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களை மூடி முன் உதாரணமாகத் தமிழக அரசு திகழ்ந்திட வேண்டும்.
சர்வதேச சமூகம் வழங்கி உள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்து வாடி வரும் அப்பாவி ஈழத் தமிழர்களை விடுவித்து, தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில் வாழ்ந்திட அனுமதிக்குமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மனித உரிமைக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் வருகிற 26.04.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, மெமோரியல் அரங்கிற்கு முன்பாக ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள சிறப்பு முகாம்களை மூடிடக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பங்கேற்கும். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்டச் செயலாளர் சு. ஜீவன் மற்றும் தோழர்கள் பங்கு ஏற்பார்கள்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
24.04.2012 மறுமலர்ச்சி தி.மு.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக