"பயிற்சிக்கு வர வைப்பது சவால்!'
ஏழ்மையான பின்புலம் உள்ள
சிறுவர்களுக்கு, கால்பந்து பயிற்சி தரும், "ஸ்லம் சாக்கர்' என்ற அமைப்பின்
சென்னைப் பகுதிக்கான ஆர்வலர், சாய் ஆதித்யா: கால்பந்து, என்னைப் போன்ற பல
பேருக்கு உயிர். ஆனால், அந்த விளையாட்டின் மூலம், பல குட்டிப் பசங்களின்
வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நிரூபித்த அமைப்பு தான், "ஸ்லம்
சாக்கர்!' ஏழ்மையான, அடித்தட்டு நிலையிலுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து,
அவர்களுக்கு கால்பந்து பயிற்சி தந்து, வாழ்க்கையின் மீதான பிடிப்பை
ஏற்படுத்துவது தான், இந்த, "ஸ்லம் சாக்கரின்' முக்கியப் பணி. ஆனால், ஒரு
முறை இங்கு வரும் குழந்தைகளை, தொடர்ந்து பயிற்சிக்கு வர வைப்பது தான்
சவால். அந்தக் குழந்தைகளைத் தொடர்ந்து வரவழைக்க, ஷூ, டி-ஷர்ட் என,
அவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துகிறோம். அந்த வகையில், "ஸ்லம்
சாக்கர்' தமிழகம் உட்பட, இந்தியாவில் எட்டு மாநிலங்களில், 70 ஆயிரம்
குடும்பங்களைச் சென்று சேர்ந்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், நன்றாக
விளையாடும் குழந்தைகளைத் தேர்வு செய்து, எங்கள் அகாடமிக்கு அழைத்து வந்து
பயிற்சி தருவோம். பயிற்சியில் பிரகாசிக்கும் குழந்தைகளை மட்டும் அழைத்து
வந்து, "ஹோம்லெஸ் உலகக் கோப்பை' யில் பங்கேற்கச் செய்வோம். பெரும்பாலான
பிள்ளைகளுக்கு ஏழ்மையான பின்புலம் என்பதால், இவர்களின் ஆட்டத்தில் கொஞ்சம்
முரட்டுத்தனம் இருக்கும். ஆனால், பயிற்சியைத் தாண்டி, நாங்கள் கற்றுத்
தரும் பல விஷயங்களால், அவர்களின் நடவடிக்கைகளில் ஓரளவிற்கு முன்னேற்றம்
ஏற்பட்டு வருகிறது. மாலை வரை படிப்பு, அதன் பின், நள்ளிரவு வரை கால் பந்து
விளையாட்டிற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால், இங்கு பயிற்சிக்கு ஒழுங்காக
கால்பந்து மைதானங்கள் கிடைப்பது இல்லை. நிதிப் பற்றாக்குறை என சிரமங்கள் பல
இருந்தாலும், சென்னையில் அடுத்த மாதம் தனியாக அகாடமி ஒன்றை ஆரம்பித்து,
அதில் பயிற்சி தர உள்ளோம். அதில், இன்னும் சிறப்பான கால்பந்து விளையாட்டு
வீரர்களை உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக