புதன், 25 ஏப்ரல், 2012

பெருமைசேர்ப்போம்!

 சொல்கிறார்கள்
இந்தியாவிற்குப் பெருமைசேர்ப்போம்!


வில் வித்தையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அனுராதா: இரண்டு வயதில் போலியோ அட்டாக். ஏழு வயதில் அப்பாவை இழந்தேன். இந்தத்
துயரங்களுடன் தான் குடும்பத்தைக் கரையேற்றினார், என் அம்மா. கூலி வேலைக்குப் போய் எங்களை காப்பாற்றினார்.என் அண்ணன், தம்பி இருவரும் படித்து முடித்து, சம்பாதிக்க ஆரம்பித்த பின் தான், ஓரளவிற்கு வறுமை தீர்ந்தது. என் அண்ணன் கிரிக்கெட் பிளேயர், தம்பி கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். தினமும், அதிகாலையில் பயிற்சிக்காக போகும்போது, உடன் என்னை அழைத்துச் செல்வர்.

அனைவரும் ஓடி விளையாடுவதைப் பார்க்கும்போது, எனக்கு ஏக்கமாக இருக்கும். ஒருநாள் நான் அழுதுகொண்டிருந்ததை பார்த்த அண்ணனும், தம்பியும், எனக்கு தைரியம் கூறினர்.
விளையாட்டு சேனல்களைப் பார்ப்பது தான், என் முழு நேரப் பொழுது போக்கு. அப்படிப் பார்த்ததில், பிடித்துப் போனது வில் வித்தை. அண்ணனிடம் சொன்னதும், அதற்கான பயிற்சியில் சேர்த்து விட்டார்.

மாநில அளவிலான போட்டியில், இரண்டாம் இடத்தைப் பிடித்தது தான், என் முதல் வெற்றி. கடந்த 2011ல், மகாராஷ்டிராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற ஐந்து பேரில், நானும் ஒரு போட்டியாளர்.அதில், நான்கு பேர் தங்கப் பதக்கம் பெற்றோம். இப்போது, 10 மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து, பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறோம். வில் வித்தையில், 30 மீட்டரில் துவங்கி, 50, 60, 70 மீட்டர் தூரம் வரை குறி பார்த்து வில் எய்வதில், இப்போது முன்னேறியுள்ளோம்.

இப்போது, நாங்கள் பயன்படுத்தும் வில் ஒன்றின் விலை, 80 ஆயிரம் ரூபாய். இது தான் ஆரம்ப விலை. பத்து பேருக்கும் சேர்த்து, மொத்தம் நான்கு வில் தான் எங்களிடம் உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு போகும் போதும், மாற்றி மாற்றி வில் எடுத்துச் செல்கிறோம்.ஒலிம்பிக்கில் ஜெயிக்க, பயிற்சி எடுக்க, எங்களுக்கு இன்னும் தரமான வில் வேண்டும். அதற்கு, ஸ்பான்சர் கிடைத்தால், இந்தியாவிற்கு பெருமை சேர்க்க, நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் உழைப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக