ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

நிச்சயம் பதக்கம் வெல்வேன்

சொல்கிறார்கள்
        நிச்சயம் பதக்கம் வெல்வேன்

 
கேரம் விளையாட்டில், சாதித்து வரும் நாகஜோதி: சின்ன வயதில் இருந்தே அப்பா, அண்ணன் கூட கேரம் விளையாடுவேன். அப்பாதான் என் குரு; அவர் தான் எனக்கு கேரம் விளையாட்டை அறிமுகம் செய்துவைத்தார்.ஐந்தாவது படிக்கும் வரை, வீட்டில் தான் விளையாடுவேன். அப்போது, வீட்டிற்கு அடிக்கடி வரும் பால்ராஜ் என்பவர், என் ஆட்டத்தைப் பார்த்து, நேரு ஸ்டேடியத்தில் உள்ள, இலவச கோச்சிங் மையத்தில் சேர்த்து விட்டார். அங்கு என் விளையாட்டைப் பார்த்தவர்கள், இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க என்னைத் தேர்வு செய்தனர்.இந்த வாய்ப்பு, நான் சேர்ந்த ஒரு மாதத்தில் கிடைத்தது. முதல் போட்டி குஜராத்தில் நடந்தது.

பயம், பதற்றத்தால் என்னால் ஜெயிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின், என் கோச்சர்ஸ் விஜயராஜ், ஆனந்த் இருவரும் தீவிரமாகப் பயிற்சி அளித்தனர்.
பயந்தால் சாதிக்க முடியாது என்று புரிந்து கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.தேசியப் போட்டிகளில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விளையாடி, பரிசுகள் வாங்கினேன். சர்வதேச விளையாட்டு வீராங்கனை யுவராணியுடன் கேரம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது; அதிலும் ஜெயித்தேன். அதன் பின், நான் விளையாடிய அனைத்து விளையாட்டிலும், எனக்கு ஏறு முகம் தான்.

கடந்த மூன்று ஆண்டுகளில், மாவட்ட அளவில் நடந்த ஆறு போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றேன்.மாநில அளவில் மூன்று, தேசிய அளவில் ஆறு என, நிறைய பரிசுகள் வாங்கிவிட்டேன். நான் பரிசுகள் வாங்குவதற்கு என் அம்மாவும், தெருப் பிள்ளைகளும் தான் காரணம். எப்போதும் அவர்களுடன் கேரம் விளையாடிக் கொண்டிருப்பேன்.கேரம் விளையாட்டை, ஒலிம்பிக்கில் சேர்க்கப் போவதாக அறிந்தேன். அப்படிச் சேர்த்தால், கண்டிப்பாக தங்கம், வெள்ளி என, நாட்டிற்காக பதக்கங்கள் வெல்வேன்.

"மன உறுதிவேண்டும்!'

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும், சைக்கிளிங் போட்டிகளில் சாதனை புரியும் ராஜேஷ் தேவராஜ்: நான் பிறந்த போதே, "மெகாயூரேட்டர்' என்ற சிறுநீரகக் குழாய் குறைபாட்டுடன் தான் பிறந்தேன். இது, இன்று எளிதில் சரி செய்யக் கூடிய பிரச்னை. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், எளிமையான மருத்துவச் சிகிச்சைக்கு வழி இல்லாமல், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.ஒரு வயது கூட நிரம்பாத என் உடம்பில், கிட்டத்தட்ட 100 தையல்கள். அதன் பின், பெரிதாக எந்தச் சிக்கலுமின்றி, வாழ்க்கை நகர்ந்தது.
ஆனால், உடல் பரிசோதனைகள் தொடர்ந்தன. அந்த வலியில் இருந்து விலக, நான் டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்தேன். மகேஷ் பூபதியை கூட தோற்கடித்து இருக்கிறேன். தேசிய அளவில் விளையாடிய நான், ஒரு கட்டத்தில் படிப்பே முக்கியம் என முடிவு செய்தேன்.

கோவை சி.ஐ.டி., கல்லூரியில், பி.இ., முடித்துவிட்டு, எம்.எஸ்., படிக்க அமெரிக்கா சென்றேன். திரும்பி வந்தவுடன், மீண்டும் சிறுநீரகக் குழாய் பிரச்னை. "மாற்று சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்றனர்' மருத்துவர்கள். என், 61 வயது அம்மாவின் சிறுநீரகம் எனக்கு ஒத்துப்போனது. என் அம்மா, ஒரு சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினார்.அறுவைச் சிகிச்சைக்குப் பின், சகஜ நிலைக்குத் திரும்பினேன். ஆனால், பிரச்னை வேறொரு ரூபத்தில் வந்தது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால், எலும்புகள் வலுவிழந்து, உடைந்து போகும் நிலையில் இருந்தன.

அதனால், டென்னிசை விட்டு, சைக்கிளிங்கிற்கு மாறினேன். சைக்கிள் ஓட்டுவதால், எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். வாரத்திற்கு, 250 கி.மீ., ஓட்டும் அளவிற்குப் பயிற்சி செய்தேன்.போட்டிகளில் களமிறங்கி, இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளினேன். இப்போது, எனக்கு வயது 40. தன்னம்பிக்கையும், உறுதியும் இருந்தால், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாலும் சாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக