செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு?

ஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு? முதலில் திராவிட வரலாறு தெரிந்து கொள்வோம்: பென்னாகரம் தமிழ்ச்செல்வன்

periyar-prabha
திராவிடமும் தமிழ்த்தேசியமும்
திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாமல் ஐம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் கோலோச்சி இருக்கிறதென்றால் அதன் வீரியம் இன்றைய தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் இன்றைய திராவிட இயக்கங்களும் திராவிட இயக்கத்தலைவர்களும் மட்டும் காரணமில்லை. குறைந்தது நூறாண்டுகள் சென்றாவது அரசியல் வரலாற்றை ஆய்வு செய்யவேண்டும்.
நிகழ்கால அரசியல் அரங்கில் பெருமளவிலான விவாதங்கள் நடப்பது, “இன்றைய தேவை திராவிடக் கொள்கையா? தமிழ்த்தேசியக் கொள்கையா?” என்பதில்தான். திராவிடக் கட்சிகளுக்கு தனியாக திராவிடக் கொள்கையென இல்லையென்பதையும் அதன் செயற்பாடுகளும் கொள்கையும் தமிழ்த்தேசியத்தை நோக்கிதான் உள்ளது என்பதனையும் ‘திராவிடம் எங்களுக்கான அரசியல் பெயர்தான் என்பதனையும் எனது முந்தைய இரு கட்டுரைகளில் (பார்க்க www.thamilinchelvan.wordpress.com) விளக்கியுள்ளதால் திராவிடக் கட்சிகளின் செயற்பாட்டு அலசலை மட்டும் இவ்வேளையில் காணலாம்.
அதற்கு முன் இரண்டு வாதங்கள். இங்கே எந்த திராவிட கட்சியினரும் தன்னை ‘திராவிடன்’ என்று கூறிக்கொள்வதில்லை. ‘திராவிடன்’ என்பது தேசியம் அல்ல. அது ஒரு குறியீட்டு பெயர். அதேபோல திராவிட தேசியம் என்றேல்லாம் யாரும் கோரவில்லை. ‘திராவிடம்’ என்பது மொழிக் குடும்பத்தின் பெயர்தான், அதையும் நாம் கூறிக்கொள்ளத்தேவையில்லை என எனது முந்தைய கட்டுரைகளில் தெளிவுப்படுத்தியுள்ளேன்.
வட இந்தியாவில் பெரும் அரசியல் புரட்சியாளர்கள், அரசியல் தளகர்த்தர்கள் என அறியப்படும் ராம்விலாஸ் பஸ்வான், ஜோதி பாசு, சரத் பவார் போன்றவர்கள் தங்கள் சாதிப்பெயரை தன்னுடன் இணைத்தே வாழ்ந்துள்ளதை காணலாம். பல ஆண்டுகளாக இந்திய அரசியல் வரலாற்றில் எண்ணற்ற ‘போஸ்’களும், ‘படேல்’களும் ‘சாஸ்திரி’களும் ‘பானெர்ஜி’களும் நிறைந்து சாதியப் பெயரோடு அரசியல் புரட்சிகள் புரிந்ததையும் பார்க்கிறோம். இங்கே தமிழகத்தில் சாதிக்காக கட்சி நடத்தும் ராமதாஸ், ஜான்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கூட சாதிப்பெயரை தங்களுடன் இணைத்துக்கொள்ளாமல் இருப்பதையும் காண்கிறோம். இத்தகைய புரட்சிகர மாற்றம் ஏற்பட திராவிட இயக்கத்தின் பங்கு அளப்பெரியது. ஓர் நாளில் நிகழ்ந்துவிடவில்லை இம்மாற்றம். அதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும் சொல்லிலடங்காதவைகள்.
இவ்வளவு ஏன், 1951 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டத்தின் விளைவால்தானே இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. பார்ப்பனிய ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான போரை நடத்தி தமிழனின் அடிமைத்தனத்தை உணர்த்தியது திராவிட இயக்கமன்றி வேறு யார்?
இந்தியா முழுக்க இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான அலை உருவானாலும், தமிழகத்தில் இருந்து மட்டும் புரட்சிகர குரல் ஒலிக்கும். அவ்வளவு அழுத்தமாக புரட்சி விதைகள் இங்கே விதைக்கப்பட்டுள்ளது என்பதனையும் அதற்கு திராவிட இயக்கங்களின் அளப்பரிய தியாகங்களையும் நாம் மறந்துவிட முடியாது.
தமிழகத்தில் தனது மகனையோ மகளையோ கல்லூரிகளில் சேர்க்கப்போகும் தருவாயில் தனது பிள்ளைக்கு இடஒதுக்கீட்டு முறையில் ‘இந்த’ கல்லூரியில் ‘இந்த’ துறையில் இடம் கிடக்கும் என பெருமைபடும் தந்தையும் தாயும் பிள்ளைகள் படித்து முடித்தவுடன் இட ஒதுக்கீட்டு முறையை விமர்சிப்பதை நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.
இட ஒதுக்கீட்டு முறையில் வாய்ப்பினை பெற்று பெரியாரின் திராவிட கழகத்தினால் விழிப்புணர்வு பெற்று பயனடைந்து, இன்று இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான வசனத்தை திரைப்படங்களில் வைக்கும் திரைப்பட இயக்குநர்களையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
இவர்களது கூற்றைப்பார்க்கும் பொழுது தோழர் மதிமாறனின் “என்ன செய்து கிழித்தார் பெரியார்” கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
இவர்களுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. சந்தர்ப்பவாதிகளாக இருக்க பழகிக்கொண்டார்கள். இவர்களுக்கும் பெரியாரையும் திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
தமிழகத்தில் இன்றளவும் தமிழ்த்தாய் பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுவது திராவிட இயக்கத்தினர்களால்தான். கொளத்தூர் மணி அண்ணன் சொல்வது போல தமிழ்த்தேசியவாதிகள் என்றும் திராவிடக் கட்சியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் நடத்தும் தாய்தமிழ் பள்ளிக்கூடங்கள் பட்டியலை எடுத்தாலே யார் தமிழ்மொழிக்கு சேவை செய்கிறார்கள் என்று தெரியும். யேல் பல்கலைக்கழகம் சென்று அமெரிக்கர்களுக்கு திருக்கிறள் பாடம் நடத்தி தமிழின் பெருமையை பறைச்சாற்றியவன் திராவிட இயக்கத்தின் தலைவன்தான். திருக்குறளின் பெருமையை அரசியல் தளங்களிலும் பொது மக்களின் நெஞ்சங்களிலும் விதைத்தவர்கள் திராவிட இயக்கதினர்தான் என்பதனை மறந்துவிட முடியாது. தமிழ்மொழி மீது இன்றைய தலைமுறை பெரும் ஈர்ப்பில் திகழ்வதற்கும் தமிழிலக்கிய சொற்பொழிவுகளை மேடைதோறும் கேட்க முடிவதற்கும் இன்றைய திராவிட இயக்கத்தின் பேச்சாளர்களும் மேடைகளும்தானே காரணம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும்துணையாக இருந்து பங்காற்றியது திராவிட இயக்கத்தினர்தான் என்பதனை யாராலும் மறுக்கமுடியுமா? கொடும் சிறைவாசத்தையும் சொல்லண்ணாத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு களம் நின்றவர்களும் வீதிகளில் அரசியல் போர் புரிந்தவர்களும் திராவிட இயக்கத்தினர்தானே. ஏன், இன்று கூட தமிழ்த்தேசியம் பேசும் அனைத்து தலைவர்களுக்கும் ‘பாலர்’ பள்ளிக்கூடம் திராவிட இயக்கம்தானே.
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் பேசலாம். ராஜீவின் மரணத்திற்கு பிறகு பல அடக்குமுறைகளுக்கு ஆளானபொழுதும் தமிழக மக்களிடத்தில் தமிழின தாக்கத்தை தக்கவைத்தது திராவிட இயக்கம்தானே. கருணாநிதி தமிழின உணர்ச்சியை தக்கவைத்தாரோ இல்லையோ அவரது பெயரையும் ஆட்சியையும் காரணம்காட்டி தமிழ்த்தேசியத்திற்கான தாக்கத்தை கற்றுக்கொண்டவர்களும் தமிழ்த்தேசியத் தாக்கத்தை விதைத்தவர்களும் ஏராளம். இதனை யாரும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
‘முள்ளிவாய்க்கால்’ நேரங்களில் வீதியில் அடிபட்டவனும் மிதிபட்டவனும் திராவிட இயக்கத்தின் தொண்டர்கள்தானே. இதில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் விதிவிலக்கு. அண்ணன் திருமாவளவன் அவர்களின் இன்றைய அரசியல் செயற்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானாலும் பாமர மக்களின் நெஞ்சத்தில் தமிழ்த்தேசிய விதையை விதைத்தவர் என்ற நோக்கில் அவரை மதிக்காமல் இருக்கமுடியாது.
‘முள்ளிவாய்க்கால்’ காலத்தில் இந்திய இராணுவ வாகனத்தை தடுத்து பெரும்போர் புரிந்தவர்கள் திராவிட இயக்கத்தினர்தான் என்பதனை இன்றைய நவீன தமிழ்த்தேசியவாதிகள் உணரவேண்டும்.
ஓர் அழிவிற்கு பிறகு புது சித்தாந்தங்கள் பிறப்பதும் அவ்வழிவில் இருந்து புது தலைமுறையும் தலைமைகளும் கட்சிகளும் உருவாவது இயற்கை. அவர்கள் செயற்திட்டங்களும் கொள்கைகளும் சரியாக நிற்கும்வரை மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், அவர்களை வளர்த்துவிட்ட மரத்தினை வெட்டிவிட்டுத்தான், தங்கியிருந்த வீட்டை இடித்துவிட்டுத்தான் புதிய தளத்தை அமைப்பேன் என்பது பைத்தியக்காரத்தனமாக இல்லையா?
இன்றைய காலத்தில் நமது தேவை தமிழ்த்தேசியக் கொள்கையா? திராவிடக்கொள்கையா? என்ற வாதமே வீணானது. திராவிடம் என்பது அரசியல் பெயர். அதன் பெயர்க்காரணத்திற்கான களமும் அரசியலும் வேறு. தமிழ்த்தேசியத்திற்கான களமும் அரசியலும் வேறு. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து வீணான குழப்ப அரசியலை செய்ய முன்வருவது நமது கழுத்தை நாமே அறுத்துக்கொள்ளும் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒப்பானதாகும்.
பெரியாரின் திராவிட கட்சியின் வழியில் வந்த கட்சிகள் ‘திராவிட’ என்ற பெயரையும் புதிதாக முளைக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ‘தமிழர்’ என்ற பெயரையும் தாங்கி நிற்கட்டுமே. மாற்றங்கள் உருவாவது இயற்கைதானே. ஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு?
நாம் இங்கே முரண்படுவதால் நமக்குள் பிளவுபடுவதால் நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதனை அனைவரும் நினைவில் கொள்க. நமது கொள்கையிலும் இலக்கிலும் தவறுகள் ஏற்படும்பொழுது ஒவ்வொருவரும் சுட்டிக்காட்ட உரிமை உண்டு. அது நம்மை இணைப்பதற்கும் நம்மை வலிமைப்படுத்துவதற்குமாக இருக்க வேண்டுமே தவிர அங்கிருந்து சிதைவதற்காக இருக்கக்கூடாது.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்த தவறுக்கெல்லாம் திராவிட இயக்கத்தின் தவறாக சித்தரிக்க முயலவேண்டாம் என கூறினால், மிகப்பெரிய அரசியலை இந்த இரண்டு பேரோடு மட்டும் முடிச்சி போட்டு தப்பித்துக்கொள்ள வேண்டாம் என எதிர்ப்பு குரல் கேட்கிறது. ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜியார் தான் கடைசி ஐம்பது ஆண்டுகள் அரசியல் புரிந்ததும் ஆட்சியில் இருந்ததும். அண்ணாவின் காலத்திலும் பெரியாரின் காலத்திலும் நாம் அழிந்துவிடவில்லை. தமிழ்த்தேசிய உணர்ச்சி குன்றி இருந்திருக்கவில்லை. ஆக, நாம் அண்ணா, பெரியாருக்கும் பின் ஆட்சியில் இருந்தவர்களைத்தானே குறை கூற முடியும்.
மேடைகளில் முழங்கும் நவீன தமிழ்த்தேசியவாதிகளே! மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை யாரும் ‘திராவிடன்’ என அழைக்க விரும்பவில்லை. எந்த திராவிட இயக்கத்தினரும் தன்னை தமிழன் எனதான் அழைத்துக்கொள்கிறானே தவிர திராவிடன் என அழைத்துக்கொள்வதில்லை.
திராவிட இயக்கத்தின் கடந்த கால பங்கை மதிக்கிறோம், இன்றைய தமிழகத்தின் தமிழினத்தின் இழிநிலைக்கு காரணம் திராவிட இயக்கங்கள்தான். திராவிட இயக்கங்கள் உருவாகாமல் தமிழ்த்தேசிய அரசியல் இயக்கங்கள் உருவாகி இருந்தால் நாம் எதையும் இழந்திருக்க மாட்டோம் என சிலர் வாதிடுகின்றனர். திராவிட இயக்கங்கள் தோன்றி செய்ய முடிந்ததை செய்திருக்கிறது. இன்று தமிழ்த்தேசிய இயக்கங்கள் முளைவிடுகிறதென்றால் அவர்கள் செய்யவேண்டியதை செய்யட்டுமே. யாரும் தடுக்கப்போவதில்லையே. அதனைவிடுத்து நாங்கள் இருந்திருந்தால் அதனை செய்திருப்போம் இதனை செய்திருப்போம் என்பது அரசியலற்ற வாதமாகவேபடுகிறது.
அடுத்து தமிழன் யார் என இரத்தப் பரிசோதனை செய்யும் குணம் தமிழகத்தில் அதிகமாக நடந்துவருகிறது. வீட்டுமொழியை வைத்து இழிவுபடுத்தும் குணமும் அதிகமாகிவிட்டது. ஒரு வைகோவிற்காக விஜயகாந்த்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என அறிவிக்கும் தமிழ்த்தேசியவாதிகளே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். தமிழின தமிழக நலனுக்கு பாடுபடும் ‘வைகோ’க்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் தமிழ்ப்பேசும் தாய் தகப்பனுக்கு பிறந்துவிட்டு தமிழினத்திற்கு எதிராய் இருக்கும் ‘வாசன்’களும் ‘சிதம்பரம்’களும் இங்கு இருக்கிறார்கள். நாம் யாரை வரவேற்கிறோம் யாரை எதிர்க்கிறோம் என்பதே இங்கு முக்கியம். அதனைவிடுத்து இரத்தப் பரிசோதனை செய்வதால் தமிழ்த்தேசியம் வளர்ந்துவிடாது.
அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் உரையை இங்கு நினைவுபடுத்தி நிறைவு செய்கிறேன். “ஆட்டம் (Atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று பொருள். Dalton’s atomic theory சொல்கிறது…Atom is indivisible (அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்போது வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும் அழிவு வேலைகளையும் செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவைப் பிளக்கமுடியாது என்று கருதிக்கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற பொருளுள்ள Atom என்ற சொல்லை, பிளக்கமுடியும் என்று தெரிந்த பின்னாலும் Atom என்பதை மாற்றவில்லை. ஒரு சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்தைக் கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக