தலித் அதிகாரிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது: ஜெயலலிதா
First Published : 18 Sep 2010 12:00:00 AM IST
Last Updated : 18 Sep 2010 12:50:30 AM IST
சென்னை, செப்.17: திமுக ஆட்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் என தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது.அந்த வகையில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் மு. முருகன் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. ஆனால், மருந்து குடித்ததன் காரணமாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் மட்டும் அனுப்பப்பட்டது. அவரது மனைவி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தன் கணவரைப் பார்த்திருக்கிறார். தன் கணவரின் இடது தோள்பட்டைக்கு கீழ் ரத்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 9-ம் தேதி புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முருகன் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்த அவரது மனைவி, 13.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், தன் கணவருக்கு குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ரேஷன் பொருள்கள் கடத்தல் தொடர்பாக முந்தைய மண்டல மேலாளர் மற்றும் சிலர் மீது நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார்கள் வழங்கியதாகவும் கூறியிருக்கிறார். மேற்படி நபர்களால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று தன் கணவர் தன்னிடம் ஏற்கெனவே கூறியதாகவும், கொலையை மறைப்பதற்கான முயற்சி நடப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும், தன் கணவர் வழக்கமாக கையில் வைத்திருக்கும் டைரி மற்றும் பை தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.எனவே கொலையை தற்கொலையாக காவல் துறையினர் மாற்றி இருக்கின்றனரோ என்ற சந்தேகம் இப்போது அப்பகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ரேஷன் பொருள்களை கடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை முதல்வர் கருணாநிதிக்கு இருந்திருந்தால், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும். மேற்படி கடத்தல் மற்றும் கொலை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், மரணமடைந்த முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:13:00 PM
9/18/2010 1:13:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:11:00 PM
9/18/2010 1:11:00 PM


By periya karuppan.kadalur
9/18/2010 12:14:00 PM
9/18/2010 12:14:00 PM


By ram
9/18/2010 11:57:00 AM
9/18/2010 11:57:00 AM


By Boodhi Dharma
9/18/2010 8:23:00 AM
9/18/2010 8:23:00 AM


By m sundaram
9/18/2010 5:12:00 AM
9/18/2010 5:12:00 AM


By rajasji
9/18/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/18/2010 4:31:00 AM