புதன், 15 செப்டம்பர், 2010

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக 4 காட்சிக்கூடங்கள் அடுத்த மாதம் திறப்பு: ஆணையர்


திருநெல்வேலி, செப். 14: சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ரூ.3 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நான்கு காட்சிக்கூடங்கள் அடுத்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என அருங்காட்சியகத் துறை ஆணையர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் தெரிவித்தார். திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 20 மாவட்டத் தலைநகரங்களில் அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன. 12-வது நிதிக் குழுவின் ரூ.8 கோடி நிதியுதவியில் இந்த அருங்காட்சியகங்களும், தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 13-வது நிதிக் குழுவிடம் கணிசமான நிதியுதவி கேட்டு திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமராவதி, சமண மதம், இந்து கற்சிலைகள், மானுடவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திர மாநிலம் அமராவதியில் கண்டெடுக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட தொல்லியல் சிறப்பு வாய்ந்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த காட்சிக் கூடங்களின் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தஞ்சாவூரில் இம் மாதம் 24, 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ராஜ ராஜன் திருவிழாவில் தொல்லியல்துறை சார்பில் ஒரு அருங்காட்சியக கண்காட்சி நடைபெற உள்ளது. அங்குள்ள அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 350-க்கும் மேற்பட்ட தொல்லியல் சிறப்பு வாய்ந்த பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் இதுவரையில் சுமார் 350 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. இதில் தொல்லியல் துறை  சார்பில் மட்டும் 35 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்து புத்தகமாக வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பணி நடைபெறும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதில் பொதுமக்களும் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் ஸ்ரீதர்.
கருத்துக்கள்

தமிழ்நாட்டின் தொல்பெருமையை உணர்த்தும் செயற்பாட்டிற்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2010 5:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக