சனி, 18 செப்டம்பர், 2010

பெருமழைப் புலவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் உத்தரவு

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST


சென்னை, செப். 17: மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தினரின் வறுமை நிலை கருதி ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்து ஆகஸ்ட் 7-ம் தேதியிட்ட "தினமணி'யில் செய்தி வெளியானது. அன்றைய தினமே பெருமழைப் புலவரின் இல்லத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார், தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் கபிலர்.இதனிடையே, மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் வறுமை நிலை கருதி தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவாரூர் மாவட்டம், மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ல் பிறந்தவர் பொ.வே.சோமசுந்தரனார். ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்ற அவர், திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர்.அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் கடந்த 1972-ல் இயற்கை எய்தினார். பெருமழைப் புலவரின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி இப்போது அவருடைய வாரிசுகள் வறுமையில் வாடுவதாகப் பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குச் செய்திகள் வந்தன.பெருமழைப் புலவரின் நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்னைகள் இருக்கின்றன. இப்போதுள்ள சூழலில் அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்காக உதவும் நோக்குடன் அவரின் குடும்பத்துக்கு உதவி நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்படுகிறது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

கலைஞருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள்! கோரிக்கை வைத்தவர்களுக்கும்தினமணி, குமுதம் ஆகியவற்றுக்கும் நன்றிகள். பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரானர் புகழ் ஓங்குக! 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக