புது தில்லி, செப். 12: முப்படை தளபதிகளின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் திங்கள்கிழமை துவங்கி வைக்கிறார். ராணுவத்தின் 23 பிராந்திய கமாண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் சீனா, நக்ஸல் விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.தரைப்படை, கடற்படை, விமானப்படை கமாண்டர்களின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம், வீரர்களை குவித்துள்ளதால் இந்த ஆண்டு மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்திய ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங் தலைமையில் ராணுவ உயரதிகாரிகள் குழு அண்மையில் சீனா செல்வதாக இருந்தது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த வடக்குப் பிராந்திய கமாண்டர் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. காஷ்மீர் பிராந்தியத்துக்கு பொறுப்பு வகிப்பதால் அவருக்கு விசா வழங்க முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம் 13,000 வீரர்களை குவித்துள்ளதாகவும், அங்கு இந்திய நிலைகளுக்கு எதிராக ஏவுகணைகள் நிறுத்தி வைத்திருப்பதாவும் செய்திகள் வெளியாகி உள்ளன.மேலும், "முத்துச் சரம்' என்ற பெயரில் தெற்காசியாவில் ராஜீய ரீதியில் தனது ஆதிக்கத்தை சீனா பலப்படுத்தி வருகிறது. மியான்மரில் ஹாங்யி, பாகிஸ்தானில் கௌதார், இலங்கையில் அம்பாந்தோட்டை மற்றும் மாலத்தீவில் கடற்படை தளங்களை சீன ராணுவம் அமைத்துள்ளதாக மேற்கத்திய ராணுவ ஆய்வு இதழ்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு எதிராக சீனா சமார்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதால் அந் நாட்டுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய ராணுவ கமாண்டர் ஜஸ்வாலுக்கு விசா வழங்க மறுத்ததற்குப் பதிலடியாக சீன ராணுவ கமாண்டர்கள் இருவருக்கு விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது. மேலும், இந்திய ராணுவ அதிகாரிகளின் சீன பயணத் திட்டத்தையும் ரத்து செய்து விட்டது.காஷ்மீர் எல்லையிலும், அடிக்கடி பிரச்னைக்குள்ளாகும் அருணாசல பிரதேச எல்லையிலும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், தில்லியில் துவங்கும் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் சீனாவை ராணுவ ரீதியில் எதிர்கொள்வது குறித்து புதிய வியூகம் வகுக்கப்பட உள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டை துவக்கி வைத்து ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.சீனாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் விளக்கம் அளிக்க உள்ளனர்.பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனும் சீன ராணுவத்தின் ரகசிய செயல்பாடு குறித்து பேச உள்ளனர்.உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் நக்ஸல் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விரிவாக பேச உள்ளார். நக்ஸல்களை ஒடுக்குவதில் ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.இந்திய ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங், கடற்படை தளபதி பி.வி.நாயக், விமானப் படை தளபதி நிர்மல் வர்மா உள்ளிட்ட கமாண்டர்கள் தங்கள் கருத்துகளை மாநாட்டில் தெரிவிக்க உள்ளனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/13/2010 10:28:00 AM
9/13/2010 10:28:00 AM


By ezhumalai
9/13/2010 8:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/13/2010 8:41:00 AM