சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
First Published : 16 Sep 2010 12:07:00 AM IST
Last Updated : 16 Sep 2010 03:04:23 AM IST
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை திறந்துவைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதியமைச்சர்
சென்னை, செப். 15: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் பெயரில் வீதிகள்தோறும், கிராமங்கள்தோறும் வாசக சாலைகள் அமைத்து இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பியவர்கள் நாங்கள். அந்த வழிமுறையில் அண்ணாவின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனை இன்று செயல்படுத்தியுள்ளோம்.1940-களில் குண்டலகேசி என்ற தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாடகம் வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை. திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். அதன்பிறகு பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் முயற்சியில் அந்த நாடகம் மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில் குப்பை கூடைக்கு அனுப்பப்பட்ட கதைதான் இப்படி வசூலை அள்ளித் தந்தது. நமது இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்தும் நிறுவனமாக வானொலி இருந்தது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.1948-ல் வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை என்ற தலைப்பில் வானொலியில் அண்ணா பேசினார். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்ததாக புத்தகச்சாலைக்கு இடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பேசினார். ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகச் சாலை இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறிய காட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்றபோதுகூட துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் அவர் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு புத்தகத்திலேயே இறுதிநாள் வரை ஆழந்திருந்தார். அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு கூட அவரைப் பார்க்கச் சென்றால் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அதனால்தான் இந்த நூலகத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ. 1,300 - ரூ. 3,000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ. 2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படியும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.நிதி அமைச்சர் க. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
நூலகத் திறப்பிற்கும் முட்டை அளிப்பிற்கும் பாராட்டுகள். பள்ளிகளில் காலையும் சத்துணவு வழங்க வேண்டும். மாலை பால், சிற்றுண்டி எதுவும் வழங்கப்பட வேண்டும். மூன்று வேளையும் சாதி, பண வேறுபாடின்றி அனைத்து மாணாக்கர்களுக்கும் உணவு தரமானதாக வழங்கி வசதியானவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2010 3:12:00 AM
9/16/2010 3:12:00 AM
என்னையா இது கூத்து ! வாரத்துக்கு ஐந்து முட்டை போடும் காசில்....இரண்டு முட்டை ஒரு வாழைப் பழம் ஒரு ஆரஞ்சுப் பழம் ஒரு மாம்பழம் அல்லது ஒரு ஆப்பிள் என்று கொடுத்தால் அதுதான் சரியான சத்துணவு ! இதை விடுத்து முட்டை உற்பத்தியாளர்களிடம் வேண்டும் அளவு கமிசன் கறந்து கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்துவது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது ! இப்படியே உன்னை விட்டால் மக்கள் எல்லோருக்கும் இலவச முட்டை போட்டு காசை சுருட்டிக் கொண்டு போய் விடுவாய் ! கொள்ளையடிக்கிற காசை எப்படியய்யா எங்க கொண்டுபோய் பதுக்குற ! சும்மா சொல்லப் புடாது..பிடி படாமல் ஊழல் செய்யும் திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதிக்கு நோபெல் பரிசு கொடுக்க வேண்டும் ! @ rajasji
By rajasji
9/16/2010 12:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/16/2010 12:33:00 AM
16.09 அன்று இச்செய்தி பதிவாகியிருக்கும் பொழுது மீண்டும் ஏன் பதிவு செய்ய வேண்டும். அதில் நான், நூலகத் திறப்பிற்கும் முட்டை அளிப்பிற்கும் பாராட்டுகள். பள்ளிகளில் காலையும் சத்துணவு வழங்க வேண்டும். மாலை பால், சிற்றுண்டி எதுவும் வழங்கப்பட வேண்டும். மூன்று வேளையும் சாதி, பண வேறுபாடின்றி அனைத்து மாணாக்கர்களுக்கும் உணவு தரமானதாக வழங்கி வசதியானவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 9/16/2010 3:12:00 AM எனப் பாராட்டியதை எடுப்பதற்காகவா? இவ்வாறு பல செய்திகளில் புதிய பதிவும் பழைய கருத்துகள் எடுப்பும் நிகழ்வதைத் தடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:38:00 PM
9/18/2010 1:38:00 PM