உண்மையான திமுகவாக மதிமுக எழுச்சி பெறும்: வைகோ
First Published : 16 Sep 2010 02:12:11 AM IST
காஞ்சிபுரத்தில் மதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பேசுகிறார் வைகோ. (வலது படம்) மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள்.
காஞ்சிபுரம், செப். 15: அண்ணா உருவாக்கிய உண்மையான திமுகவாக மதிமுக எழுச்சி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். அண்ணாவின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுகவின் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டை நிறைவு செய்து வைகோ பேசியது: தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பத்திரிகைகள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகிறது. திமுகவை அண்ணா தொடங்கிய போது எழுத்துரிமை, பேச்சுரிமை காப்பதே இயக்கத்தின் நோக்கம் என்று சூளுரைத்தார். இன்று அதே பேச்சுரிமை, எழுத்துரிமைக்காக மதிமுக போராடி வருகிறது. நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் அல்ல. திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு. இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு முன் உள்ள ஒரே கேள்வி. மக்களுக்கு எது வேண்டும்? தமிழ்நாட்டின் ஜனநாயகமா? அல்லது முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமா? இந்த கேள்விக்கு நாம் விடை கண்டு ஆக வேண்டும். 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என கருணாநிதி விரும்பினார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதை சிறையிலேயே முடிவு செய்து விட்டேன். வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நாளில் முதல்வர் கருணாநிதியிடம் இதைத் தெரிவித்து விட்டு, என்னோடு 19 மாத காலம் சிறையில் வாடிய கணேசமூர்த்திக்கு மட்டும் ஒரு தொகுதி தர வேண்டும் என வலியுறுத்தினேன். உடனே அதை மறுத்த கருணாநிதி, முடியவே முடியாது என்றார். மேலும் அவர் கூறும் போது, "திமுக எனக்கு பிறகு இருக்காது. உங்கள் கட்சி தான் இருக்கும்' என்றார். மதிமுகவை அழித்து விட வேண்டும் என்று மனதில் கங்கனம் கட்டிக் கொண்டு கருணாநிதி கூறிய இந்த வார்த்தைகளை கேட்டு நான் மயங்கிவிடவில்லை. எனினும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ, அதை கருணாநிதி கூறி விட்டார். கருணாநிதி கண்ணெதிரிலேயே அவரது குடும்ப அரசியல் ஆதிக்கம் உடைந்து சுக்குநூறாகும். அண்ணாவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய திமுகவாக மதிமுக எழுச்சி பெறும். மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்பதை அண்ணா கடைசி வரை வலியுறுத்தினார். அதே கொள்கைகளுக்காக குரல் கொடுத்த கருணாநிதி இன்று, மத்தியில் இருப்பது கூட்டாட்சிதான் என்கிறார். அவருக்கு ஒன்றை தெளிபடுத்துகிறோம். இது கூட்டாட்சி அல்ல; கூட்டணி ஆட்சி. அண்ணா வலியுறுத்திய கூட்டாட்சி இதுவல்ல.÷இன்று தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஓழுங்கு சீரழிவு என மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடம் காணப்படும் வெறுப்பின் அடையாளமே கோவையிலும், திருச்சியிலும் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டங்களில் கூடிய மக்கள் கூட்டம் என்றார் வைகோ.÷மாநாட்டை வாழ்த்திப் பேசிய எம்ஜிஆர் மன்றச் செயலரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயகுமார் எம்.எல்.ஏ. பேசியது:அண்ணாவும், எம்.ஜி.ஆரும் கட்சியை குடும்பப் பாசத்துடன நடத்தினர். ஜெயலலிதாவும், வைகோவும் அவ்வாறே நடத்தி வருகின்றனர். ஆனால் கருணாநிதி தனது குடும்பத்தையே கட்சியாகப் பார்க்கிறார். ஒரே குடும்பத்தில் தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்ர், பேரன் மற்றொரு மத்திய அமைச்சர், மகள் எம்.பி., ஆகி இருக்கும் ஜனநாயக விரோதச் செயல் உலகில் வேறு எங்கும் இல்லை.÷இப்போது தமிழகத்தில் நடப்பது அண்ணாவின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் மாறான மக்கள் விரோத அரசு. நிச்சயம் இந்த அரசு வரும் தேர்தலில் மாற்றப்பட வேண்டும் என்றார் ஜெயகுமார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2010 2:43:00 AM
9/16/2010 2:43:00 AM


By S.S. Chandran
9/16/2010 2:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/16/2010 2:32:00 AM