சனி, 18 செப்டம்பர், 2010

தினமணி செய்தி எதிரொலி: தமிழில் ரயில்வே கால அட்டவணை வெளியீடு


தெற்கு ரயில்வே சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை புத்தகத்தின் முகப்பு அட்டை.
சென்னை, செப். 17: தமிழில் ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.   தெற்கு ரயில்வே மண்டல அளவில் இந்த ஆண்டுக்கான (2010) கால அட்டவணை ஆங்கிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோல தமிழிலும் ரயில்வே கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்று தினமணியில் செய்தி வெளியானது.  இதையடுத்து, தமிழில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.  இதைதொடர்ந்து, கடந்த இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் தென்மண்டல அளவிலான ரயில்வே கால அட்டவணை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. எளிய தமிழில் 358 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த கால அட்டவணையின் விலை ரூ. 30. இதன் முகப்பு அட்டையில் ராமேசுவரம் ரயில்வே பாலம் மற்றும் ராஜமுந்திரி ரயில்வே பாலம் ஆகியவற்றின் படங்கள் இடம் பெற்றுள்ளன.பயணிகளுக்கான விவரங்களின் தொகுப்பு: இதில், கால அட்டவணையைப் படிக்கவும், பயன்படுத்தவும் அட்டவணை எண்களுடன் கூடிய வரைபடம் மூலம் வழிகாட்டப்பட்டுள்ளது. அனைத்து இந்திய மற்றும் தென்னிந்திய அளவிலான ரயில் பாதைகள் குறித்த வரைபடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே ஆகிய 4 மண்டல அளவில் அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. ரயில்களின் புறப்படும், சேரும் இடங்கள், சேவை நேரம், துரந்தோ, யுவா, ராஜதானி, சதாப்தி, ஜன் சதாப்தி, சம்பர்க் கிராந்தி ஆகிய வண்டிகளுக்கான அட்டவணை, சுற்றுலா இடங்கள், தங்கும் வசதி, மற்றும் பயணிகளுக்கான பல்வேறு தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இது தவிர முன்பதிவு மையங்கள், முக்கிய தொலைபேசி எண்கள், டிக்கெட் தொகையை திரும்பப் பெறும் வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறை உள்ள ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மேலும் பல தகவல்களும் இந்த கால அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளன.பார்வைத் திறனுக்கு சவால்:  எனினும், இந்த கால அட்டவணையில் பெரும்பாலான பக்கங்களில் உள்ள தகவல்கள் மிகச் சிறிய வடிவிலான (ஃபாண்ட்) எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளதால், பயணிகளின் பார்வைத் திறனை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கால தாமதம் ஆகியதால் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  ஓரிரு நாள்களில் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள புக்கிங் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களில் இந்த ரயில்வே கால அட்டவணை விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

தினமணிக்குப் பாராட்டுகள்! இனி அச்சிடுகையில் ஒப்பிற்கு அச்சிடாமல் மக்கள் பயனுறும் வகையில் இயல்பு எழுத்துகளில் அச்சிடுக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக