வெள்ளி, 7 மே, 2010

"வெட்டப்பட்ட தீர்மானம்!'



நாட்டு மக்களை அல்லற்படுத்தும் விலைவாசிகளின் உயர்வைக் கண்டிக்கும் வகையில், மானிய ஒதுக்கீடுகளுக்கான ஆதரவைப் பெற மத்திய அரசாங்கம் மக்களவையை எதிர்கொள்ளும்போது, வெட்டுத் தீர்மானம் மூலம் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முனைந்தன.மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுப் பண்டங்களின் விலைகள் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஓராண்டில், நாளொரு விலையும் பொழுதொரு ஏற்றமுமாக வளர்ந்து கொண்டே தீவிரமடைந்து வந்திருக்கிறது.விலைவாசிகள் நூறு நாள்களில் குறைந்துவிடும், இரண்டு மாதத்தில் பஞ்சம் என்பது பறந்துவிடும், தேவையான அளவுக்கு உணவு தானியங்களின் சேமிப்பு இருக்கிறது என்று மன்மோகன் சிங்கின் அமைச்சர் பெருமான்கள் நிர்வாக மந்திரங்களை ஓதியபடி இருந்தனர். மானிய ஒதுக்கீடுகள் மக்களவையில் ஏப்ரல் 27-ம் நாள் வரப்போகின்றன, அப்பொழுது நாங்கள் தரும் வெட்டுத்தீர்மானங்களின் மூலம் விலைவாசிகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்று எதிர்க்கட்சிகள் ஆரவாரத்துடன் அறிவித்தன.அதே நாளன்று அக்கட்சிகள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தின. இத்தகைய முயற்சிகள் மூலம் ஏதாவது உருப்படியான பலன் கிடைக்காதா என பாவப்பட்ட மக்களும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.ஏப்ரல் 27 வந்தது. பல மாநிலங்களில் கடையடைப்புவேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏராளமான வெட்டுத்தீர்மானங்களும் தரப்பட்டிருந்தன. கடைசியாக, நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தந்த வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 192 வாக்குகளும், எதிராக 276 வாக்குகளும் கிடைத்தன. அடுத்து, நாடாளுமன்றத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தந்த அதேவிதமான வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 201, எதிராக 289 வாக்குகளும் போடப்பட்டன, மற்ற எதிர்க்கட்சிகள் தந்த வெட்டுத்தீர்மானங்களும் ஒட்டுமொத்தமான வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் அவைகளும் தோற்கடிக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய அரசாங்கம் தந்த மானியங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரிவிதிப்புகள் பற்றிய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்தியக் கருவூலத்திலிருந்து அரசாங்கச் செலவினங்களுக்கான 45 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. 2010-11-ம் ஆண்டு அரசாங்கத்தின் செலவுகளுக்கான பிரமாண்ட நிதிவசதிகள் அனைத்தும் எத்தகைய விவாதமும் இன்றி நொடிப்பொழுதில் ஒப்புதல் பெற்றுவிட்டன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையொத்த முக்கியத்துவம் வெட்டுத்தீர்மானத்துக்கு இருக்கிறது என்றாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சியினரும் விரிவாகப் பேசுவதற்கு கிடைக்கும் நேரமும், வாய்ப்பும் ஏப்ரல் 27-ல் வெட்டுத்தீர்மானங்களின்போது எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. மக்களவையில் தற்பொழுது 34 கட்சிகள் உள்ளன. 545 உறுப்பினர்களையுடைய அந்த அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 207 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பெரும்பான்மை பலம் இல்லை. ஆயினும் அதன் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் (19), திமுக (18), தேசியவாத காங்கிரஸ் (9), ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கூட்டணியில் இணைந்து உள்ளிருந்து ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை 258. அமைச்சரவையில் இடம்பெறாமல் ஆட்சிக்கு மக்களவையில் ஆதரவு தரும் கட்சிகளின் விவரம்: சமாஜ்வாதி கட்சி (22), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (4), சிக்கிம் ஜனநாயக முன்னணி (1), கேரளா காங்கிரஸ் (1), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (1), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள்.எண்ணிக்கையளவில் 288 உறுப்பினர்களின் ஆதரவை மன்மோகன் சிங் அமைச்சரவை பெற்றிருந்தாலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகிய இருவரும் தொடர்ந்து ஆளுங்கட்சியை எதிர்த்து, பலவகைகளில் இடையூறு விளைவித்து வந்ததுடன், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாதபடி இதுவரை அல்லற்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும், இந்த விலைவாசி உயர்வைக் கண்டிப்பதில் அவர்களும் முனைப்பாக இருந்தார்கள். ஏப்ரல் 27 அன்று விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து இவ்விரு தலைவர்களும் கடுமையாகப் பேசிவிட்டு, வெட்டுத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னதாக அவையிலிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை வெளியிலிருந்து அவர்கள் ஆதரவு தந்தார்கள், வெட்டுத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது அவையை விட்டு வெளியேறியது, ஒருவகையில் வெளியே இருந்து மறைமுக ஆதரவு தந்ததாக இருந்தது போலும். விலைவாசிப் பிரச்னையில் அரசாங்கத்தை எதிர்த்தார்கள், அதேசமயம் அரசாங்கம் விழாதபடி பாதுகாத்தார்கள்.காங்கிரûஸ அதுவரை கடுமையாக எதிர்த்துவந்த உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி திடீரென்று ஓர் அரசியல் மாயாஜால முடிவை எடுத்தார். வெட்டுத்தீர்மானம் வந்த ஏப்ரல் 27 அன்று, 21 மக்களவை உறுப்பினர்களையுடைய தமது பகுஜன் சமாஜ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று அறிவித்தார்.அதற்கு முக்கிய காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், முலாயம் சிங் எடுக்கிற முடிவை எதிர்ப்பதுடன், மத்திய ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமக்கு வரும் பல இடர்ப்பாடுகளை நீக்கிக்கொள்வதற்கும் ஒரு வழிமுறையாக அது இருந்தது.2008 ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சிகள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்தபொழுது, எதிர் வரிசையைச் சேர்ந்தவர்களே ஆளுங்கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அகில இந்திய அளவில் மத்தியக் கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதைவிட, மாநில அளவில் தமக்குள் இருக்கும் போட்டியில் ஒன்றையொன்று எதிர்ப்பதில்தான் பல எதிர்க்கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன. அதனையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் திகைப்பூட்டும் வகையில் திடீர் முடிவுகளை எடுத்து வருகிறார்கள். ஏப்ரல் 27 வெட்டுத்தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் முன்னைவிட பலவீனமாக காட்சி அளிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆளுங்கட்சியின் பலத்தை அதிகமாக்கியிருக்கிறது. வெட்டுத்தீர்மானத்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் அதிகமாக இருக்கின்றன. அதற்கும் மேலாக மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் நெறிமுறைக்கு படுகாயம் ஏற்பட்டுவிட்டது. 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, இந்திரா அரசாங்கம் சிறுபான்மை பலமுள்ளதாக ஆனது. இருப்பினும் 1971 பொதுத்தேர்தலில், இந்திரா காங்கிரஸ் 342 இடங்களில் வெற்றிபெற்றது. அதற்கு மேலும், இந்தியா செய்த உதவியினால், பாகிஸ்தான் ஆதிக்கத்தில் இருந்த பங்களாதேஷ் விடுதலை அடைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. அதை வைத்து 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பைப் போட்டு, அடிப்படை உரிமைகளை ஒடுக்கிடும் ஓர் எதேச்சாதிகாரம் தலைதூக்கியது. அப்பொழுது ஜெயப்பிரகாசர் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இணைந்து போராடின.1971 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்து இந்திரா காந்தியின் ஆட்சி அப்பொழுது இருந்தது என்றாலும், கடைசியில் 1977 தேர்தலில் இந்திரா காங்கிஸ் படுதோல்வி அடைந்தது.1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 415 தொகுதிகளில் - அதற்குமுன் ஜவகர்லால் நேரு காலத்தில்கூட கிடைக்காத அளவில்-பெருவெற்றி கிடைத்து, ராஜீவ் காந்தி பிரதமராக ஆனார். கிடைத்த பெரும் வெற்றி அவருக்கு தொடர்ந்து தேர்தல் வெற்றியைத் தரவில்லை. போபர்ஸ் ஊழல் வெளிப்பட்டதும், அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடின; ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது மக்களவை உறுப்பினர் பதவிகளைவிட்டு வெளியேறினார்கள். கடைசியில் 1989 நவம்பர் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.ஒரு தேர்தலில் கிடைக்கும் ஆதரவை வைத்து ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அந்த ஆட்சி தவறினால், அடுத்த தேர்தலில் அது படுதோல்வி அடையும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.அதற்காக, மறு தேர்தல் வரும்வரை எதிர்க்கட்சிகள் செயலற்று இருந்துவிடக்கூடாது. அரசாங்கம் செய்யும் குறைபாடுகளையும் குற்றங்களையும் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திச் சுட்டிக்காட்டுவதுடன், இடைவிடாத பிரசாரத்தாலும் போராட்டங்களாலும், மக்களின் கவனத்தையும் ஆதரவையும் எதிர்க்கட்சியினர் திரட்டினால், அடுத்த தேர்தலில் ஆளும் மக்கள் விரோத அணியை வீழ்ச்சியடையச் செய்துவிடலாம். 1977-ல், 1989-ல் மக்கள் சக்தியை நம்பிய அரசியலால்தான் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. வெட்டுத்தீர்மானம் வெற்றுத்தீர்மானமாக ஆனதற்குக் காரணம், அதற்கான ஆதரவை மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை மட்டும் வைத்துப் பார்க்காமல், நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்டு, வெட்ட வெளியில் இருக்கும் கோடானு கோடி மக்களின் ஆதரவை எதிர்க்கட்சியினர் பெற்றிருக்க வேண்டும்.
கருத்துக்கள்

வெட்டுத் தீர்மானம் வெற்றுத் தீர்மானம் ஆனது குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார். மூத்த மேனாள் நா.ம.உறுப்பினர் என்ற முறையில் வெட்டத் தீர்மானம் என்றால் என்ன அதன் முதன்மை என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதை அடுத்தொரு கட்டுரையில் செழியனார் விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக