ஞாயிறு, 2 மே, 2010


சேலம் உருக்காலை: நிலம் அளித்தவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்



சென்னை,மே.1: சேலம் உருக்காலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து மத்திய உருக்குத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:உருக்காலை அமைப்பதற்காக நிலம் அளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் சேலத்தில் இரண்டுமுறை போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தனி வேலைவாய்ப்பு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.சமீபத்தில் பேரவையில் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரம் மத்திய அரசுக்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்திருந்தார்.எனவே நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட, அதனால் இடம்பெயர்ந்த நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

அமைதிப்பேச்சும் துணைமுதல்வர் உறுதியும் மத்தியஅரசிற்கு அனுப்பும் மடலில் தேவையில்லாத செய்திகள். ஒப்புக்குச் சப்பாணி மடலாக இல்லாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கிடக்கும் இப் பொருண்மையில் கடமை தவறியுள்ள செயலைச் சுட்டிக்காட்டி இது போன்ற தவறுகளால் வேறு நல்ல செயல்களால் நிலம் கையகப்படுத்த இயலாமல் போவதையும் கவனத்திற்குக் கொண்டு வந்து கடுமையைச சுட்டிக் காட்டும் கனிவு மடலாக இருக்க வேண்டும். முதல்வர் தில்லி செல்லுகையில் மத்திய அரசுடன் பேசும் பொருண்மையில் இதனைச் சேர்க்காததால் மடலைப் படிக்காமலேயே துடைத்துத் தூரப போடப் பயன்படுத்தும் நிலைதான் ஏற்படும். தமிழக அரசு கடமை தவறும் செயல்களில் இதுவும் ஒன்றாகத்தான் அமையும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக