திங்கள், 3 மே, 2010

இடிபாட்டுக்கு இலக்காகும் வரலாற்றுச் சின்னம்



தஞ்சாவூர், மே 1: தஞ்சாவூரில் விடுதலைப் போராட்ட தியாக வரலாற்றின் சின்னமாகவும், இந்தோ சரஸனிக் (இந்திய முகலாய பிரிட்டிஷ்) கட்டடக் கலை ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ள சிறை வளாகத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.தஞ்சை பெரிய கோயில் சோழர் கால கட்டடக் கலையின் உச்சம் என்றால், இந்த சிறைக்கூடம் இந்தோ சரஸனிக் கட்டடக் கலையின் உச்சமாகப் போற்றக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டது. முழுவதும் செங்கல், சுண்ணாம்பு சாந்து மட்டுமே பயன்படுத்தி மிக நேர்த்தியாகவும், நவீன அமைப்புடனும் கட்டப்பட்ட தொகுப்புக் கட்டடங்களைக் கொண்ட இந்தச் சிறைக்கூடம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அரசியல் கைதிகளை அடைக்கவே 1886-ல் கட்டடப்பட்டது.இது சிறைக்கூடம் என்றாலும், மிகச் சிறப்பான பல நுட்பங்களைக் கொண்டது. இந்தச் சிறையின் சுவரே இதன் பிரமாண்டத்தை கூறிவிடும். சுமார் 15 அடி உயரம், 3 அடி அகலம், நான்கு பக்கமும் தலா 1000 அடி நீளத்தில் நூல் பிடித்தது போன்ற நேர் கோட்டில் சென்று, நான்கு மூலையும் நேர்த்தியாக வளைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்தச் சுவர், இன்றளவும் ஒரு சிறு விரிசல்கூட இல்லாமல் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது.இந்தச் சிறையின் முகப்புக் கட்டடத்தின் எதிரே இரு புறமும் 1905-லும், 1911-லும் கட்டப்பட்ட இரண்டடுக்கு மாடி சிறைக் கட்டடங்கள் உள்ளன. இதில் ஒன்று தற்போது சிறார் சீர்திருத்தப் பள்ளியின் வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தக் கட்டடத்தில் உள்ள செங்கல் வளைவு படிக்கட்டுகள், மிக பிரமாண்ட செங்கல் தூண்கள், மேற்கூரையைத் தாங்கி நிற்கும் தேக்கு மர உத்திரங்கள், சிறை அறைகளில் மேலும், கீழும் அமைந்துள்ள லண்டன் மற்றும் மெட்ராஸ் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட இரும்புக் கதவுகள், ஜன்னல்கள், மனிதக் கழிவுகளை வெளியேற்றும் சுழலும் அமைப்பு போன்ற பல நுட்பமான கட்டமைப்புகள் உள்ளன.இன்றைய நவீன தொழில்நுட்பம் அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளபோதிலும், 100 ஆண்டுகளுக்கு உத்திரவாதம் தரப்படும் கட்டடங்கள்கூட 20 ஆண்டுகளுக்குள்ளாகவே எலும்புக்கூடகக் காட்சியளிக்கிறது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில்கூட இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் உறுதியாகவும், காண்பவரை கவர்ந்திழுக்கும் வகையிலும் உள்ளது இக் கட்டடம். நமது செழுமையான கட்டடக் கலை மரபுக்கும், பல்வேறு பாரம்பரியங்களின் ஒருங்கிணைப்புக்கும் இக்கட்டடம் சான்றாக உள்ளது.கட்டடத்தின் உள்புறம் அமைந்துள்ள சிறைக் கூடங்கள், ஒரு பெரிய வட்டத்தை மையமாகக் கொண்டு சூரியக் கதிர்களைப் போன்ற எட்டு நீள்சதுர சிறைக் கட்டடங்களைக் கொண்ட தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, தென்புறத்தில் தனியாக ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறைக் கட்டடமும் 210 அடி நீளமும், அதில் 31 அறைகளை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அறைகள் வளைவு கூரை அமைப்பில் காணப்படுவதால், வெப்பத்தையும், மழை நீரையும் எளிதில் வெளியேற்ற முடியும்.சுதந்திரமான காற்றையும், ஒளியையும் பெறும்படியாக வடிவமைக்கப்பட்ட இச் சிறைக் கூடங்கள், கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கக் கூடியவை.விடுதலைப் போராட்டத்தின்போது, எண்ணற்ற போராளிகளும், தியாகிகளும் அடைக்கப்பட்டிருந்த சிறையின் வரலாற்றையும், கலைப் பெருமையையும் அறியாமல் அதன் ஒரு பகுதியை இடித்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இதற்காக தமிழக சமூக பாதுகாப்புத் துறையிடமிருந்து சிறை வளாகத்தின் தென்பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை எழுதிப் பெற்றுள்ளனர்.தற்போதைய மாவட்ட ஆட்சியர் இல்லம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இல்லம், சிறைக் கூடத்தையொட்டியுள்ள சிறைக் கண்காணிப்பாளர் இல்லம் மூன்றும் ஒரே வடிவமைப்பைக் கொண்டதோடு, சிறைக்கூடம் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்ட நிறைய இடங்கள் இருக்கிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இல்லத்தை அடுத்த எல்லை தொடங்கி பழைய வீட்டு வசதி வாரியம் வரை சுமார் 20 ஏக்கர் அளவுக்கு உள்ள நிலம் கூட அரசுக்குச் சொந்தமானதுதான். இதில் அதிகாரிகள் சிலரின் வீடுகள் மட்டுமே உள்ளன.அண்ணா சாலையில் நூற்றாண்டுகள் பழைமையான பாரத் இன்சூரன்ஸ் கட்டடத்தை இடிக்க முயன்றதை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்ததோடு, தமிழகத்தில் மாவட்டம் தோறும் இதுபோன்ற, பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடங்களின் பட்டியலை தயாரித்து வழங்கவும் உத்தரவிட்டது.அந்தத் தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடிபாட்டுக்கு ஒரு வரலாற்றுச் சின்னம் இலக்காகியுள்ளது என்பது வருத்தத்திற்குரியது.திறந்தவெளி அருங்காட்சியகமாகுமா? பழமையான கட்டடங்கள், வரலாற்றுச் சின்னங்களை மக்கள் பார்த்து உணரும் வகையில், அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியக முறை ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில், இந்தச் சிறைச்சாலையை மக்களின் பார்வைக்கு திறந்துவிடுவதன் மூலம் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் இந்தச் சிறைக் கூடத்தை தொல்லியல் துறை மூலம் அதன் கட்டமைப்பு மாறாமல், சிதைந்த பகுதிகளை சீரமைத்து பராமரிப்பை மேற்கொள்ளமுடியும்.
கருத்துக்கள்

இன்றைய இதழில் ஆசிரியருரை, துணை ஆசிரியரின் செய்திக் கட்டுரை (ஊடக உரிமை நாள் பற்றியது), கடலூர் சுற்றுலா விளம்பரப்பலகையில் உள்ள பிழைகள் பற்றிய செய்தி, பழங்கட்டடங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் இந்தச் செய்தி எனத் தமிழ் நலம், பொது நலம் நாடும் செய்திகளைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள்.

தொண்டு தொடர வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 4:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக