புதுதில்லி, மே 2: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தாம் நிச்சயம் வருவதாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்ததாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக, தில்லி வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் முதல்வர் கருணாநிதிக்கு அன்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:தங்களுடைய தில்லி வருகையின் நோக்கம் என்ன?இந்த ஆண்டுக்கான திட்டக் குழுவின் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தான் வந்திருக்கிறேன். அதோடு, கோவையில் நடைபெற இருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவரை அழைத்திருக்கிறோம். அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவும் வந்திருக்கிறேன்.ஞாயிற்றுக்கிழமை காலையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தீர்களே, அவர் செம்மொழி மாநாட்டுக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்தாரா? நிச்சயமாக வருவதாகத் தெரிவித்தார்.சேலம் இரும்புத் தொழிற்சாலையில் அதற்காக நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது பற்றி மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறீர்கள். பிரதமரை திங்கள்கிழமை சந்திக்கும் போது, அதைப் பற்றி பேசுவீர்களா?பிரதமரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி பேசுவேன்.இந்த ஆண்டு திட்டக் குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டை விட அதிகமாக நிதி ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்துவீர்களா? புதிய திட்டங்கள் எதையெதை வலியுறுத்துவீர்கள்?திட்டக் குழுவில் எவ்வளவு தொகை கேட்டோம்; எவ்வளவு அனுமதித்தார்கள்; என்னென்ன திட்டங்களுக்காக கேட்டோம் என்பதற்கான விளக்கங்களையும், அதற்கான பதில் என்ன என்பதையும் திட்டக் குழு கூட்டம் முடிந்த பிறகு சொல்கிறேன்.தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்கின்றனவே?இந்தியா முழுவதிலுமே மின் பற்றாக்குறை உள்ளது. அதைப் பற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்து இருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் மின் வெட்டு அவ்வளவாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.மின் பற்றாக்குறை பற்றி வெள்ளை அறிக்கை அளிக்கப்படுமா?நான் அளித்துள்ள விளக்கமே வெள்ளை அறிக்கை போன்றது தான் என்றார்.ராசாவும், அழகிரியும்...மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, மு.க.அழகிரி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார். அது குறித்து, கேள்வி-பதில் விவரம்:நாடாளுமன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவரை பதவி விலக வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டு இருக்கிறது. அவர் பதவியில் நீடிப்பாரா?உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டு வரவில்லை. (ராசா பதவி விலகத் தேவையில்லை என்பதையே சூசகமாக தெரிவித்தார்.)மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் துறை சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் இதுவரையில் பதில் அளிப்பதில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுகிறது. மக்களவைத் தலைவர் அழைப்பையும் அவர் புறக்கணித்து விட்டார் என்று சொல்லப்படுகிறதே?இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் அழகிரியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் விசாரிப்பீர்களா?விசாரித்தால் உங்களுக்குத் தெரிய வருமே!
கருத்துக்கள்
மாநாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருவது மகிழ்ச்சி. ஆனால், இந்நாள் வரை செம்மொழி அறிஞர்களுக்கு விருது வழங்காமல் இழுத்தடிக்கும் அவர் இம் மாநாட்டிலாவது அவற்றை வழங்குவதாக அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு அப்பால் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பிக்கப்படவும் தமிழர்கள் மிகுதியாக வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழர்களை நியமிக்கவும் அனைத்துத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ் கற்பிக்கவும் வகை செய்ய வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்குச் சம உரிமை வழங்கி இந்திய ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 5/3/2010 3:30:00 AM