வெள்ளி, 7 மே, 2010

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி



சென்னை, மே 6: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையைச் சேர்ந்த லலிதா (12-வது ரேங்க்), கனகவல்லி (15-வது ரேங்க்) ஆகிய 2 பேர் முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர்.தில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ்ராஜ் புரோஹித் 2-ம் இடம் பிடித்துள்ளார்.இது குறித்த விவரம்:யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான நேர்காணல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறன் படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்களாவர்.சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2 பெண்கள் முதல் 25 இடங்களில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில், 15-வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த இவர், 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் வரைச் சென்றுள்ளார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கடைசி முயற்சியாக வீட்டில் இருந்தபடியே படித்த கனகவல்லி, நாட்டிலேயே 15-வது ரேங்க் பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் மாதிரி நேர்காணல் பயிற்சி பெற்றேன். டேவிதார், உதயசந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகள், நேர்காணலின்போது உதவியாக இருந்தது என்றார் கனகவல்லி.மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மையம்: சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று சிறப்பிடம் பிடித்த லலிதா, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்.முதன்முறையாக தேர்வெழுதிய சண்முகப்ரியா (36-வது ரேங்க்), சிவகுமார் (38-வது ரேங்க்), நிவாஸ் (45-வது ரேங்க்), வினோத்ப்ரியா (62-வது ரேங்க்) ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் சிறப்பு சேர்த்துள்ளனர் என்று மையத்தின் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குநர் வாவூசி தெரிவித்துள்ளனர்.மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாதெமியில் படித்த சுமார் 50 பேரும், பி.எல்.ராஜ் மெம்மோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாதெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்டேடஜி அகாதெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் வெவ்வேறு பாடங்களுக்கு பதிவு செய்து படித்திருப்பதால், எண்ணிக்கை மாறுபடும்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துகள். எங்குப் பணியாற்றியானாலும் நேர்மையாகவும் மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தியும் தமிழ் மொழி,இலக்கிய, நாகரிக, பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பியும் பணியாற்றும் பகுதியின் மொழியைக் கற்றும் ஒப்பிலக்கியத்தில் ஈடுபட்டும் மாமனிதர்களாகப் பணியாற்றுக. உயர் பதவிகளில் செல்லச் செல்ல அடக்கத்திலும் உயர்க. குறுக்கு வழியாளர்களின் செல்வாக்குகளுக்கு இரையாகாமல் நேர்மையானவர்களின் துணைக்கொண்டும் ஆன்றோர்கள் சான்றோரகள் வழிகாட்டினைப் பெற்றும் நாட்டு முன்னேற்றததை உலக அளவில் கொண்டு போகும் வண்ணம் செயலாற்றுக! தினமணி இணைய நேயர்கள் சார்பில் வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக