திங்கள், 3 மே, 2010

எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்



நீங்கள் செய்தித்தாளே இல்லாத அரசை விரும்புவீர்களா? அல்லது அரசே இல்லாத செய்தித்தாள்களையா?'' என அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான தாமஸ் ஜெப்பர்சனிடம் கேட்டபோது,அவர் கூறிய பதில், ""செய்தித் தாள்களையே நான் விரும்புவேன்'' என்பதுதான்.இதழியல் துறை இவ்வாறு, சிறப்பு மிக்க ஓர் இடத்தைப்பெற்று பொது மக்களின் கருத்துகளை உருவாக்கவோ, அழிக்கவோ வல்லதாக வளர்ந்துள்ளது."டையர்னல்' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றிய "ஜர்னலிசம்' என்கிற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமே "இதழியல்' என்ற சொல். இதழ் என்பது பத்திரிகை, செய்தித்தாள், தாளிகை என்பனவற்றைக் குறிக்கும். இதழ்களுக்கு குறிப்பாக செய்தித்தாள்களுக்கு எழுதும் தொழில்தான் முதன் முதலில் இதழியல் எனப்பட்டது. இப்போது, செய்திகளையும், கருத்துகளையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாகவும், சமுதாய விழிப்புணர்வுக்கு மிக இன்றியமையாத கருவியாகவும் வளர்ந்துள்ளது இதழியல். அற அடிப்படையிலும், சட்ட நோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் துறை திகழ்கிறது. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இதழ்கள் - செய்தித்தாள்கள் அளவாலும், இயல்பாலும், வகையாலும் நமது அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இதழ்களின் செல்வாக்குக்கு உள்படாத எந்தத் துறையும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு தற்போது வியக்கத்தக்க வகையில் இதழியல்துறை தனது பார்வையையும், வீச்சையும் பரவலாக்கிக் கொண்டிருக்கிறது.அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் தகவல் தொடர்பு சாதனங்களில் முதலிடம் பெறுவது இதழ்களே. எல்லா நாடுகளிலும் செய்தித் தொடர்புக்குத்தான் இதழ்கள் தோன்றின. செய்திகள் பெருகப் பெருக செய்தித் தொடர்புகளின் எல்லைகள் விரிய விரிய, இதழ்களும் வளர்ச்சி அடைந்தன. ""பத்திரிகைதான் ஒரு நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி'' என லார்ட்கிரேவும், ""பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப் பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகிறது'' என பிராங் மோரஸ் என்பவரும் இதழியலின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.""பொதுநோக்குடைய இதழியல் துறை, ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வரையறுக்கப்பட்ட வளரும் மனித நலன் என்னும் குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகிறது'' என்று ஹெரால்டு பெஞ்ஜமின் என்னும் புகழ்மிக்க அமெரிக்க இதழியல் பேராசிரியர் கூற்று இதழியலுக்கே சிறப்பு சேர்க்கிறது.இதழ்கள் பொறுப்புணர்வோடு செயல்படாவிட்டால் ஏற்படும் கேடுகள் அளவிட முடியாதன. எனவே, இதழியலாளர்கள் மிகுந்த அற உணர்வோடும் சமுதாயப் பொறுப்போடும் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம் மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் கூட.நாடாளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளோடு பத்திரிகைத் துறையும் இணைக்கப்பட்டு அரசின் நான்காம் தூணாகக் கருதப்படுகிறது.உண்மையாகவும், நம்பிக்கையாகவும், துல்லியமாகவும் செய்திகளை வெளியிட வேண்டும்; தன்னலம் கருதி செய்திகளைப் பயன்படுத்தக்கூடாது; தெரிந்தே ஒரு பக்கம் சார்ந்து, உண்மைக்குப் புறம்பாகத் தலையங்கம் எழுதுவதோ, செய்திகளுக்குத் தவறான விளக்கங்கள் தருவதோ, விமர்சிப்பதோ கூடாது; நடுநிலைமையோடு செய்திகளை வெளியிட வேண்டும்; செய்தி அறிக்கையும் கருத்துகளின் வெளியீடுகளையும் வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பன பத்திரிகை சுதந்திரத்துக்கான எல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.""சட்டத்துக்குப் புறம்பாகப் போகாமல் எதைப் பற்றியும் வெளியிட, விவாதிக்க இதழ்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் தேவை. மனித இனத்தின் தலையாய உரிமைகளுள் ஒன்று "பத்திரிகை சுதந்திரம்'. தவறு ஏற்பட்டுவிட்டால் திருத்திக்கொள்ளத் தயங்கக்கூடாது. செய்திகளை பண்பு நெறிகளினின்று விலகாமல் வெளியிட வேண்டும். குறிப்பாக வன்முறைகளை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு முதலிய செய்திகளை வெளியிடுகின்றபோது, வாசகர்களின் விலங்கு உணர்வுகளைத் தூண்டாதவாறு செய்திகளை வெளியிட வேண்டும். இவ்வாறு இதழ்கள் நடுநிலையோடும் அற உணர்வோடும் பொறுப்போடும் செயல்பட வேண்டும்'' என்பவை பத்திரிகைத் தர்மமாகக் கூறப்பட்டுள்ளது.இதழ்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் வேண்டுமோ அந்த அளவுக்குச் சுய கட்டுப்பாடும் வேண்டும் என்பதை, ""இதழியலின் ஒரே நோக்கம் தொண்டு செய்வதுதான். பத்திரிகை என்பது மிகப்பெரும் சக்தியாகும். ஆனால், கட்டுப்பாடில்லாத வெள்ளம், நாட்டுப் புறத்தை மூழ்கடித்துப் பயிர்களை வீணாக்குவதைப் போல, கட்டுப் பாடில்லாத பேனா, உருவாக்குவதற்குப் பதிலாக அழித்து விடுகின்றன. கட்டுப்பாடு வெளியிலிருந்து வருவது நஞ்சாக மாறிவிடும். கட்டுப்பாடு உள்ளுக்குள்ளேயே தோன்ற வேண்டும். பத்திரிகைகள் மக்களின் நலன்களைக் காக்கவும் வளர்க்கவும் அரசுக்கு இதழ்கள் தோன்றாத் துணையாகத் திகழ்கின்றன'' என்று மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள கருத்துகள் பத்திரிகை சுதந்திரத்தின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.""பொதுமக்களின் கருத்தை உருவாக்குவதிலும், செப்பனிடுவதிலும், பிரதிபலிப்பதிலும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பத்திரிகை மிகவும் முக்கியமானதாகச் செயல்படுகிறது. பத்திரிகை நமது சமுதாயத்தின் ஆதார நிறுவனமாகும். அரசியல், சமுதாய, பொருளாதார வளர்ச்சிகளைச் சிறப்பாக ஏற்படுத்த அது மிகவும் துணைபுரிகிறது. அரசு செயல்படுவதோடும், அது பின்பற்றும் கொள்கையோடும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. நமது பொது வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாட்டையும் அது தொடுகின்றது'' என்று மக்களாட்சியில் இதழ்களின் பங்கு குறித்து சிறப்பித்திருக்கும் டி.எஸ்.மேத்தா என்னும் ஆய்வாளர் கூறும் இக்கருத்துகள் என்றும் நினைவு கொள்ளத்தக்கவை.தமிழ் இதழ்களின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவின் உரிமைப்போர், இரு உலகப் பெரும்போர்கள் என மூன்று போர்கள் உறுதுணையாக, ஊக்கிகளாக இருந்தன. உலகப்போர்களின் போதுதான் இதழியல் துறை செழித்து வளர்ந்தது. உரிமைப் போரில் எல்லா இதழ்களும் நல்ல வளர்ச்சியை அடைந்தன. நமது நாட்டின் விடுதலை இயக்கத்துக்குப் பெரும் துணை புரிந்தவை பத்திரிகைகளே. விடுதலை இயக்கத்தை நடத்திய தலைவர்களில் பலர், தங்களது இயக்க வளர்ச்சிக்கு உதவும் வகையில் தாங்களே இதழ்களை நடத்தி வெற்றியும் கண்டுள்ளனர்.""விடுதலைக் கிளர்ச்சியும், தமிழ்ப் பத்திரிகைத் துறையும் சேர்ந்தே வளர்ந்தன; அவை இரட்டைக் குழந்தைகள்'' என்கிறார் ம.பொ.சி.""எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது இருத்தல்'' என்று வீர முழக்கமிட்டு வாழ்ந்த மகாகவி பாரதியார், ""எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்'' என்று இதழியலுக்கு மணி மகுடம் சூட்டினார்.இதழ்களின் பேராற்றலைப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ்ந்து பாடியதோடு,""அறிஞர்தம் இதய ஓடைஆழநீர் தன்னை மொண்டுசெறிதரும் மக்கள் எண்ணம்செழுத்திட ஊற்றி ஊற்றிக்குறுகிய செயல்கள் தீர்த்துக்குவலயம் ஓங்கச் செய்வாய்நறுமண இதழ் பெண்ணே! உன்நலம் காணார் ஞாலம் காணார்''என, இதழ்களின் கல்விப் பணியையும் இலக்கிய நயத்தோடு இதழியலை சிறப்பிக்கிறார்."" இந்தியப் பத்திரிகை வரலாறு என்பதே அதனுடைய சுதந்திரத்துக்கான போராட்ட வரலாறுதான்'' எனப் பத்திரிகையாளர் ஆர்.சி.எஸ். சர்க்கார் கூறியுள்ளார்.இதழ்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அவற்றை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் முயல்வதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.பத்திரிகை சுதந்திரத்தின் கூறுகளாகக் கொலம்பியா மிசெüரி பல்கலைக்கழகத்தின் தகவல் மையம் கீழ்க்கண்டவற்றை வெளியிட்டுள்ளது. அவை: செய்திகளைப் பெறுவதற்கு உரிமை, முன் கட்டுப்பாடின்றி அச்சிடும் உரிமை, அச்சமோ, அச்சுறுத்தலோ இன்றி அச்சிடும் உரிமை, தகவல் தொடர்புக்கு வேண்டிய வாய்ப்புகளையும், சாதனங்களையும் பெற்றுக்கொள்ளும் உரிமை, அரசோ, மக்களோ தலையிடாமல் செய்திகளைப் பரப்புகின்ற உரிமை போன்றவை பத்திரிகை சுதந்திரமாகக் கருதப்படுகின்றன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பத்திரிகைகளுக்கு இப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்! நாட்டில், மக்களாட்சியில் நடக்கும் அக்கிரமங்களை துணிந்து வெளியிடமுடிகிறதா? அப்படி வெளியிடும் பத்திரிகை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்துதல், தீ வைத்தல், நிருபர், புகைப்படக்காரர் தாக்கப்படுதல் போன்றவை இன்றும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில், பத்திரிகை சுதந்திரம் பறிபோகும் நிலையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.கடந்த ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொடுமையான நிகழ்வு. பத்திரிகை ஆசிரியர் ஒருவர், தன் வீட்டின் முன் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத சிலரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதுமட்டுமல்ல, 2008-ஆம் ஆண்டில் உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4, அமெரிக்காவில் 11, ஆசியாவில் 31, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 9, மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் 15 என மொத்தம் 70 பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஆப்பிரிகாவில் 23, அமெரிக்காவில் 24, ஆசியாவில் 52, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 14, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 12 என மொத்தம் 125 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் பத்திரிகை சுதந்திரமா? பத்திரிகை சுதந்திரம் என்பது நாட்டுச் சுதந்திரத்தின் நடைபாதை என்றும், பத்திரிகையை மக்களாட்சி முறை என்ற கட்டடத்தின் நான்காவது தூண் என்றும் கூறுவர். அத்தகைய சிறப்புகளைப் பெற்றுள்ள பத்திரிகை, சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களில் உள்ள குறைநிறைகளை அச்சமின்றி எடுத்துச் சொல்ல பத்திரிகைச் சுதந்திரம் இன்றியமையாத ஒன்று.பலநாடுகளில் பத்திரிகைகளுக்கு என்று சில உரிமைகளும் சுதந்திரங்களும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனங்களில் தரப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, ஏனைய நாடுகளில் பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவது என்றும், அதனால் பத்திரிகைகளுக்கு என்று தனி உரிமைகள் தேவையில்லை என்றும் அரசியல் நிர்ணயசபை முடிவெடுத்து, அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளாகப் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் தரப்பட்டுள்ளன.கொள்கைப்படிப்பும், மக்கள் நலனில் அக்கறையும் ஆட்சியாளருக்குக் குறையக்குறைய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் குறைந்துவிடுகிறது. இதன் தொடர் விளைவாக பத்திரிகைகள் புகழ்பாடும் ஒலிபெருக்கிகளாகத் திகழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விமர்சனங்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றன. எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியை நல்லாட்சியாக மாற்றுவது பத்திரிகை விமர்சனங்கள்தான். ஆட்சியின் அவலங்களையும், நிர்வாகக் குளறுபடிகளையும் பத்திரிகைகள் படம்பிடித்துக் காட்டுவை. ஆரோக்கியமான விமர்சனமாக ஓர் அரசு ஏற்றுக்கொண்டு தனது குறைகளைக் களைய முற்படுமேயானால், அந்த ஆட்சி நல்லாட்சியாக மக்கள் மன்றத்தால் எடைபோடப்படும் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் போவது ஆச்சரியம்தான். அதேபோல ஆட்சியாளர்களின் அடிவருடியாக இருந்து அதன்மூலம் தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதன்மூலம், தனது எழுத்துக்கும் வாசகர்களுக்கும் துரோகம் இழைப்பதை சில பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ள மறுப்பதும் வியப்பான ஒன்றே!பத்திரிகை சுதந்திர தினமாக மே 3-ஆம் தேதியை யுனெஸ்கோ நிறுவனம் 1993-ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரதினம் என்றைக்கு என்பதுகூட தெரியாமல் பத்திரிகையில் பணி புரிபவர்கள் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இதுதான் வேதனையிலும் வேதனை. இது தொடர்கதை ஆகாமல் இருக்க, ஆண்டுதோறும் பத்திரிகை சுதந்திர தினத்தை அந்தந்த பத்திரிகை அலுவலங்கள் கொண்டாடவேண்டும். சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் மட்டுமே தியாகிகள் அல்ல. இந்நாட்டு அரசியல் மற்றும் சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி அதன்காரணமாக உயிர்த்தியாகம் செய்தவர்களும் சிறை சென்ற, மரணம் அடைந்த பத்திரிகையாளர்களும்கூட தியாகிகள்தான்! (மே 3 - பத்திரிகை சுதந்திர தினம்)
கருத்துக்கள்

உரிய நாளில் வந்துள்ள நல்ல கட்டுரை. எனினும் இலங்கையில்தான் இதழளார்கள் மிகுதியானபேர் கொலைக்கும் சிறைவைப்பிற்கும் ஆளாகியுள்ளனர் என்ற செய்தியைக் குறிப்பிட்டிருக்கலாம். மேற்கோள்களிலும் நல்ல தமிழ்ச் சொற்களையே கையாண்டிருக்கலாம். மக்கள் உரிமை பற்றியும் இதழ்கள் உரிமை பற்றியும் பேசும் பெரும்பாலான இதழ்கள் தங்கள் நிறுவன இதழாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தும் அவலங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.இதழியல் என்பது இன்று விரிந்து பரந்து பட்ட பொருளில் வழங்கப்படுவதை விளக்கியுள்ள கட்டுரையாளர் இந்நாளைப் பத்திரிகை சுதந்திர தினம் எனக் குறிப்பதைவிட (தான் தெரிவித்ததன் அடிப்படையிலேயே) ஊடக உரிமை நாள் எனக் குறிப்பின் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக