வெள்ளி, 7 மே, 2010

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, மே 6: நாடாளுன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேரடங்கிய பெஞ்ச், இத்தகைய பரபரப்பான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியது. எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளதும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.அரசியல் சாசன விதி 282-ன் கீழ் இத்தகைய அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதற்கு தடை விதிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.இந்த திட்ட செயல்பாடு முழு திருப்தியளிப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதில் அதிகார பகிர்வு விதி மீறல் ஏதுமில்லை. எனவே இதில் நீதிமன்றம் குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் இத்திட்டத்தை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த சில வழிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இத்திட்டத்தை ரத்து செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை மற்றும் மக்களவையின் நிலைக்குழுக்கள் இத்திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கின்றன. அதில் அங்கிங்கு சிறு மாறுபாடுகள் இருக்கக்கூடும். இருப்பினும் உள்ளூர் மேம்பாட்டுக்கான இத்திட்டம் மூலம் பல பகுதிகளில் குடிநீர் வசதி, நூலகம் அமைத்தல், உடற்பயிற்சி அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.இத்தகைய தொகுதி வளர்ச்சி நிதியால் குறிப்பிட்ட தொகுதி எம்.பி. தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதோடு எதிரிகளை ஓரங்கட்ட இது பயன்படுத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. அதேபோல தொகுதி மேம்பாட்டு நிதியால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்ட அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்பதையும் ஏற்க முடியாது. இது பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.டிவிஷன் பெஞ்சில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், டி.கே. ஜெயின், பி. சதாசிவம், ஜே.எம். பாஞ்சால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் கேட்பதாக 2005-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே இந்த திட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.முதன்முதலில் 1999-ம் ஆண்டு இத்திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம் சிங் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் வழக்கு பதிவு செய்தது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால் எம்.பி.க்கள் இந்நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டனர்.2006-ம் ஆண்டு மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த பிரச்னையை 5 பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றியது. இந்த வழக்கில் அப்போது சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ஜி.இ. வாஹன்வாதி ஆஜரானார்.
கருத்துக்கள்

தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் திட்ட அறிவிப்புப் பலகையிலும் பெயர்ப்பலகையிலும் தொகுதியின் உறுப்பினர் பெயர் மிகப் பெரிதளவில் விளம்பரத்தப்படுகின்றது. அவ் வுறுப்பினரின் சொ ந்தப்பணத்தில் மேற் கொள்ளப்படும் திட்டம் அல்ல. எனவே, நா.ம./ச.ம. /மாமன்ற உறுப்பினர்களின் பெயர்களைப் பெரிதாகக் குறிப்பிடாமல் தொகுதியின் பெயரை மட்டும் குறித்தால் போதுமானது. நிகழ்ச்சி விவரததில் தொகுதி உறுப்பினர் பெயர் வரும். அதுவே போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக