வியாழன், 17 டிசம்பர், 2009

துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி

17 December, 2009 by admin

நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீமானின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது




Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 13923



நெஞ்சைப் பதறவைக்கும் அந்த வீடியோ காட்சிகள்

என்.வி

கூட்டுச் சேர்ந்து திருட்டு நடத்தியவர்கள் இடையே கூட்டில் குழப்பம் ஏற்பட்டுவிட்டால் திருட்டு அம்பலமாகிவிடும் என்பார்கள். அந்த மாதிரிதான் செல்கின்றது கொழும்பு அரசியலில் உயர்மட்டத்திடையே தற்போது ஏற்பட்டுள்ள பிணக்கின் விளைவும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வன்னிப் பெருநிலப்பரப்பில் ஈவிரக்கமற்ற, மூர்க்கத்தனமான யுத்தத்தை தொடுத்தது அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் அரசு நிர்வாகம். வன்னி யுத்த பூமியை ஓர் இரும்புத் திரைக்குப் பின்னால் மூடி வைத்துக்கொண்டு அங்கு பெரும் அட்டூழியங்களையும், அட்டகாசங்களையும் புரிந்தன இலங்கைப் படைகள். அதுவும் கடந்த மே மாதத்தில் அங்கு கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டபோது - விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் வயது, பால் வேறுபாடின்றி வேட்டையாடப்பட்டபோது மூடிய இரும்பு வேலிச் சுற்றி வளைப்புக்குள் அரங்கேறிய அந்த உலகப் பேரவலத்தைச் சகித்திருப்பதைத் தவிர, சர்வதேச சமூகத்துக்கு வேறு வழியே இருக்கவில்லை.

இறுதியில், விடுதலைப்புலிகளின் தலைமைக்கு என்ன நேர்ந்தது என்பது வரை கொழும்பு கூறிய தகவல்களை - புரட்டுக்களை - கேட்டிருப்பதைத் தவிர, சர்வதேசத்துக்கும் வேறு மார்க்கம் இருக்கவில்லை. இவ்விஷயத்தில் அங்கும் இங்குமாக, அரசல் புரசலாக, சில உள் வீட்டுத் தகவல்கள் அவ்வப்போது கசிந்தபோதிலும் அவை ஆணித்தரமாக உறுதி செய்யப்படாத நிலையில் அப்படியே அமுங்கிப்போயின.

ஆனால், இந்த யுத்தத்தில் இறுதி வெற்றி ஈட்டியாகிவிட்டது என அதிபர் மஹிந்தரின் அரசுத் தலைமை மார்தட்டி ஆறு மாத காலத்துக்குள் யுத்தத்தை நடத்திய அரசுத் தலைமைக்குள்ளேயே பெரிய விரிசல். முப்பதாண்டு கால யுத்தத்தைத் தனது மூன்றரை ஆண்டு காலத் தலைமையின் கீழ் வெற்றிகரமாக முடித்த ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே, பகிரங்கமாக அரசுத் தலைவருக்கு எதிராக நேரடியாகக் களம் இறங்கும் நிலைமை.

முன்னர் யுத்தக் களத்தில் எதிரியைச் சந்தித்தமை போன்று இப்போது அரசியல் களத்தில் அரசுத் தலைவரையே எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் முன்னாள் படைத் தளபதி.

யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு அதிபர் மஹிந்த ராஜபக்ஷே, அவரது நம்பிக்கைக்குரிய சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய முக்கூட்டு அணி அப்போது உலகுக்கு மூடி மறைத்துச் செய்த தகிடுதத்தங்கள், இப்போது அந்தக் கூட்டுச் சிதறிவிட்டதால் அதுபற்றிய உள் ரகசியங்கள் மெள்ள கசியத் தொடங்கியிருக்கின்றன.

அதுவும் சில உணர்வுபூர்வமான 'சென்ஸிட்டிவ்' விவகாரங்கள் விரைவில் அம்பலத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகின்றன என்பதற்கான கட்டியம் இப்போதே கூறப்படத் தொடங்கிவிட்டது.

இலங்கையின் அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் மோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவுக்கும், ஜெனரல் பொன்சேகாவுக்கும் இடையில் தென்னிலங்கைச் சிங்களவர்களிடையே ஏட்டிக்குப் போட்டியாக ஆதரவுண்டு என்பதுதான் தள நிலைமை.

ஆக, வடக்கு, கிழக்கிலும் பிற இடங்களிலும் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு விழுகின்றனவோ அவர்தான் இந்த இருவரில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கையை ஆட்சி செய்யத் தெரிவுசெய்யப்படப் போகின்ற அதிபராவார் என்பது நோக்கர்களின் கணிப்பீடு.

சிறுபான்மையினரின் வாக்குகளை வளைத்துப் போட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்ற நிலையில், அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான தந்திரோபாயங்களை இரு தரப்பினருமே வகுக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழர்களுக்கு 'சென்ஸிட்டிவ்' வான விஷயங்களைத் தேர்தல் காலத்தின் கடைசி நேரத்தில் முன்வைத்து அவர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதன் மூலம் அவர்களைத் தம் வலையில் வீழ்த்தும் உத்தியில் இரு தரப்புமே இப்போதே திட்டங்களை வகுக்கத் தொடங்கி விட்டன.

அப்படித் தமிழர்களை உணர்வுபூர்வமாகத் தட்டியெழுப்பக்கூடிய அம்சங்களுள் பிரதானமான தொன்று வன்னி யுத்தக் களத்தில் கடைசி நேரத்தில் அரங்கேறிய விஷயங்கள். அதுவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், அவருடைய குடும்பத்தவர்களுக்கும் உண்மையில் நேர்ந்த கதியை மெள்ளக் கசிய விடுவதன் மூலம் அதற்கான குற்றச்சாட்டை ஒரு தரப்பு மற்றைய தரப்பின் மீது சுமத்துவதன் மூலம் தமிழ் வாக்காளர்களை அதிர்ச்சியூட்டித் தம் பக்கம் திரும்ப வைக்கலாம் என்ற திட்டம் தயாராவதாகத் தெரிகின்றது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் மே 16, 17, 18 -ம் தேதிகளில் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏமாற்றி, மசிய வைப்பதற்காக சில முக்கிய நடவடிக்கைகளில் சர்வதேச அமைப்புகளின் பங்கிருப்பதாகக் காட்டும் வகையில் கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்கள், அச்சதி வலையில் புலிகளின் தலைமை விழுந்த வகை, பிரபாகரன் உட்பட அத்தலைவர்களுக்கு ஏற்பட்ட விபரீதங்கள் போன்றவை தொடர்பாகப் பல்வேறு ஒளிப்பதிவு 'டேப்'புகள் படை உயர் அதிகாரிகள் வசம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிரபாகரனின் குடும்பத்தவர்களுக்கு குறிப்பாக மூன்று பிள்ளைகளுக்கும் நேர்ந்த கதியைப் புலப்படுத்தும் படங்கள் இப்போது மெள்ள கசியவிடப்பட்டிருப்பது இதில் ஒரு துளி மட்டுமே.

புலிகளின் உயர் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தில் இடம்பெறுவதாக நம்பிக்கொண்டு முன்னெடுத்த சரணடைவில் தொடங்கி, துப்பாக்கியால் சுட்டும், கோடாரியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டவை வரையான பல்வேறு கொடூரங்கள் ஒளிப்பதிவில் உள்ளனவாம்.

தென்னிலங்கைச் சிங்கள வாக்குகள் தமக்குக் கிட்டுவதைப் பாதிக்காமல், அதேசமயம் தமிழர்களின் வாக்குகளைத் தங்களுக்குச் சார்பாகக் கடைசி வேளையில் திருப்பக்கூடியதாக இந்த உணர்வுபூர்வ சமாச்சாரங்கள், வாக்களிப்பு நெருங்கும் சமயத்தில் கசியவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த ஒளிப்பதிவுகள் வெளியாகும்போது தமிழர்கள் மத்தியில் பிரளயம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றார் அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் பெற்ற மூத்த படை அதிகாரி ஒருவர்.

மஹிந்த தரப்பும், பொன்சேகா தரப்பும் இந்தப் பதிவுகளையும், விஷயங்களையும் ஒருவருக்கு எதிராக மற்றவர் பிரயோகிப்பதற்காக அவற்றை எப்படிப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதே பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.

நிர்வாணமாக்கப்பட்டு கண்களும், கைகள் பின்புறமாகவும் கட்டப்பட்ட நிலையில் சில தமிழர்கள், சீருடையணிந்த சிங்களச் சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டமையைக் காட்டும் வீடியோ படங்கள் பிரிட்டனின் 'சானல் 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானமையை அடுத்து எழுந்த 'சுனாமி'யை விட, இப்போது பிரபாகரன், அவருடைய குடும்பத்தவர்கள், புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நேர்ந்த கதியை விவரிக்கும் ஒளிப்பதிவுகள் வெளியானால் அவை பிரளயத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

உஙகள் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக