ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

தமிழர்களுக்கு வாக்களிக்காதீர்: இலங்கையில் வலியுறுத்தல்

தமிழர்களுக்கு வாக்களிக்காதீர்: இலங்கையில் வீடுதோறும் வலியுறுத்தல்

Comment   ·   print   ·   T+  
தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மாகாணங்களில், தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்று வீடுதோறும் ஆயுதங்களைக் கையில் ஏந்தி ராணுவ உடை அணிந்தவர்கள் வலியுறுத்தியதாக, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணங்களுக்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.
இலங்கையின் வடக்கு பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், 142 உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தல் முடிவுகள் நாளை பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ராணுவ உடையில் மிரட்டல்?
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே 'தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது' என்று வீடுதோறும் ஆயுதங்களைக் கையில் ஏந்தி ராணுவ உடை அணிந்தவர்கள் வலியுறுத்தியதாக, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவரும், தமிழ் வேட்பாளருமான ஆனந்தி சசிதரன் அளித்த பேட்டியில், கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற வாரத்தில் ஒரு நாள், நான்கு லாரிகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ராணுவ உடை அணிந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளில் நுழைந்து, தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டினர்” என்று தேசிய தமிழ் கூட்டணியின் துணைத் தலைவர் சேணாதிராஜா கூறியுள்ளார்.
ராணுவம் மறுப்பு...
அதேவேளையில், இதுபோன்ற நடவடிக்கைகள் ராணுவம் ஈடுபடவில்லை என்றும், புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கண்காணிப்பு
இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்கும் நடவடிக்கையில், சார்க் நாடுகள் அமைப்பின் சார்பில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமையிலான பார்வையாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பார்வையாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கையில் பார்வையாளர்கள் குறுக்கிட முடியாது என நிருபர்களிடம் பேசிய என்.கோபாலசாமி கொழும்பில் தெரிவித்தார்.
தேர்தல் முடிந்ததும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் சார்க் பார்வையாளர் குழு தனது அறிக்கையை இலங்கை அரசிடம் தாக்கல் செய்யும்.
கோபாலசாமி தலைமையிலான குழுவினர் காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்பினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் சென்று பார்வையிடுவார்கள். அதன் பிறகு தேர்தல் பற்றிய தனது அறிக்கையை இறுதி செய்வார்கள்.
இந்திய தயாரிப்பு வாக்குப் பெட்டிகள்
வடக்கு மாகாண சபைக்கு நடைபெற்று வரும் வாக்குப் பதிவின்போது சில வாக்குச் சாவடிகளில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளை பயன்படுத்தியது இலங்கை. மரத்தால் ஆன வாக்குப் பெட்டிகளைத்தான் தாம் நடத்தும் தேர்தல்களில் இலங்கை வழக்கமாக பயன்படுத்தும். புதிய முயற்சியாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்டிகள் வடக்கு மாகாணத்தின் சில வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்டன.
முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் நேர்மையாக தேர்தலை நடத்த இந்திய தயாரிப்பு வாக்குப் பெட்டிகள் உதவும் என்ற நம்பிக்கையில் சோதனை அடிப்படையில் இவை பயன்படுத்தப்பட்டன. உள்ளே போடப்படும் வாக்குச்சீட்டுகள் தெரியும் வகையில் கண்ணாடி போன்ற தன்மையுடன் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக