திங்கள், 23 செப்டம்பர், 2013

இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் தொடங்குக - திலிப் சக்கரவர்த்தி

இந்திய வரலாற்றை இனி த் தென்னிந்தியாவில் தொடங்கி எழுத வேண்டும்! - திலிப் சக்ரவர்த்தியுடன் ஓர் உரையாடல்

Comment   ·   print   ·   T+  
திலிப் சக்ரவர்த்தி
திலிப் சக்ரவர்த்தி
வெறும் புராணங்களாலும் கட்டுக்கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் தொல்லியலாளர்கள்தான். ஆனால், தமது ஆயுட்காலம் முழுவதும் அந்தத் துறையில் பணியாற்றிப் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இங்கே மறக்கப்பட்டுவிட்டனர். தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே. அந்தக் குறையைப் போக்கும் விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்ரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார்: 'இந்தியத் தொல்லியலின் ஐம்பது ஆண்டுகள்' (Fifty Years of Indian Archaeology).
ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டு கால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. அவருடன் ஓர் உரையாடல்.
தொல்லியல் குறித்து இன்னும் அவ்வளவாக விழிப்புணர்வு ஏற்படவில்லையே? தொல்லியல் ஆய்வுகளை இங்கிருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தோடுதானே அணுகுகிறார்கள்... அயோத்திப் பிரச்சினையில் அப்படித்தானே நடந்தது?
நமக்கு் தொல்லியல் குறித்த தீவிரமான பார்வை இல்லை. அயோத்தியை எடுத்துக்கொண்டால், அந்த இடம் முழுவதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. எவரும் அதன் தொல்லியல் முக்கியத்துவத்தை 'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அந்த இடத்தின் மிகச் சிறிய பகுதியின் மீதுதான் கவனம் செலுத்தினார்கள். அயோத்தி ஒரு முக்கியமான தொல்லியல் இடம். அங்கு மௌரியர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சிங்க உருவம் பொறித்த தூண் இருக்கிறது. அது சாரநாத் தூணைப் போன்றது. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இந்திய வரலாறு குறித்து மாறுபட்ட பார்வை உருப்பெறக் காரணமாக இருந்த இடதுசாரி சார்பு வரலாற்று அறிஞர்களை நீங்கள் உங்கள் நூலில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கருத்து என்ன? வலதுசாரி வரலாற்று ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது அவர்கள் நல்லவர்கள் என்று தோன்றவில்லையா?
அடிப்படையில் அதுவோர் அதிகார விளையாட்டு. இந்திரா காந்தி காலத்திலிருந்து இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மிகப்பெரும் செல்வாக்குடன் இருந்துவருகிறார்கள். குறிப்பாக, தில்லியில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் அதிகார நாட்டம் கொண்டவர்கள். அவர்களுக்கு வரலாற்று ஆராய்ச்சி மீது அவ்வளவாக ஆர்வம் கிடையாது. அவர்களில் பலர் வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவர்கள். வலதுசாரி சார்புகொண்ட வரலாற்றாசிரியர்களும்கூட அப்படித்தான். இந்த நாட்டில் கல்வித் துறையில் நடந்த மிகப் பெரும் அறிவுத்துறை சீர்கேடு வரலாற்று ஆய்வுகளில் நடந்த சீர்கேடுதான். அவர்களோடு அனுசரித்துப்போகாததால் நான் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமாசெய்யுமாறு அவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
தில்லியில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களுக்கு உண்மையான வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபாடு கிடையாது. பல்கலைக்கழகம் என இருந்தால் அங்கே ஒருங்கிணைந்த அருங்காட்சியகம் ஒன்று இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்கூட அப்படியான அருங்காட்சியகம் கிடையாது. அங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு அதில் ஆர்வம் வரவில்லை?
அயல்நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் நூலில் எழுதியிருக்கிறீர்களே, ஏன்?
இந்தியாவின் தொல்பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளில் எனக்கிருக்கும் அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன். முதலாம் உலகம் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைப் பார்க்கும் விதம் அப்படி இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமது சொந்த நாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. அடிப்படையில் அவர்கள் இனவாதப் பார்வை கொண்டவர்கள். நான் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். தெற்காசியத் தொல்லியல் ஆய்வுகளுக்கென ஒரு ஐரோப்பிய அமைப்பு உள்ளது. அதில் தெற்காசியாவைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. கேம்ப்ரிட்ஜில் அதைப் போலவே ஓர் அமைப்பு இருக்கிறது. அது வெளிப்படையாகவே ஐரோப்பியர்களுக்கென செயல்பட்டுவருகிறது. அதிலிருந்து நிதி முதலான உதவிகளைப் பெறுபவர்களாகவே இந்தியத் தொல்லியலாளர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து அவர்களுக்கு முக்கியமில்லை.
இது அவர்களின் இனவாதப் பார்வையின் விளைவா அல்லது வேறு காரணங்களும் இருக்கின்றனவா?
பெரும்பாலும் இனவாதப் பார்வைதான் காரணம். அதைவிடவும் இது மூன்றாம் உலக நாடுகள் மீதான அதிகாரம் தொடர்பான விஷயமாகவும் இருக்கிறது. அறிவே அதிகாரம். மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிய தங்களது அறிவே மிகப்பெரும் அறிவு என அவர்கள் மற்றவர்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.
இதேமாதிரியான குற்றச்சாட்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் குறித்த ஆய்வுகள் தொடர்பாகவும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது...
அவர்களுக்கு உள்ளூர் அறிஞர்கள் ஒரு பொருட்டே இல்லை. நாம் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களை எச்சரிக்கையோடு பார்க்கத் தொடங்கினால்தான் அவர்கள் இங்கிருப்பவர்களுக்கு மரியாதை தர முன்வருவார்கள். அதை நாம் செய்யவில்லை. அது நம் தவறு.
தொல்லியல் துறை சார்ந்து மட்டும்தான் இப்படிச் சொல்கிறீர்களா?
கலை வரலாற்று ஆராய்ச்சியில் நடப்பதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. தொல்லியல் துறையில் நடப்பதைத்தான் சொல்கிறேன். அதில் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பேராசிரியர் ராஜன் அவர்கள் மேற்கொண்டு இருக்கும் பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
பேராசிரியர் ராஜன் மேற்கொண்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. அவர் தனது அகழாய்வில் கண்டெடுத்தவை சாதாரண மக்களும் கல்வியறிவு பெற்றிருந்ததைக் காட்டுகின்றன. அப்படியான எழுத்துப் பொறிப்பைச் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு மொழி வளர்ச்சியடைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே அங்கு எழுத்தறிவு இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த மக்கள் பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
வட இந்திய வரலாற்றுக்கும் தென்னிந்திய வரலாற்றுக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இதுவரை இந்திய வரலாறு வடக்குப் பகுதியிலிருந்து ஆரம்பித்தது என்றே என்ணப்பட்டுவந்தது. இனி நாம் இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் தொடங்கி ஆராய வேண்டும்.
தென்னிந்தியாவில் நெல் பயிரிடப்பட்டதன் வரலாற்றை எவ்வளவு முயற்சித்தாலும் கி.மு.3000க்கு முன்னே கொண்டுபோக முடிய வில்லை என உங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?
துரதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கும் சான்றுகள் அப்படி இருக்கின்றன. அதைப் பற்றி இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்பட வேண்டும். அப்போது ஒருவேளை இந்த நிலைப்பாட்டை மாற்றக்கூடிய சான்றுகள் நமக்குக் கிடைக்கக்கூடும்!
ரவிக்குமார், எழுத்தாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக