ஈன் தே இல பண்டைன் [Jean de la Fontaine (1621-1695)]என்பவர் எழுதிய கதைகளின் அடிப்படையில் வீரமாமுனிவர் பரமார்த்த குருவின்
கதை என்னும் நூலை எழுதி உள்ளார். 1728 இல் புதுச்சேரியில் இவரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. நவீன நகைச்சுவைக் கதை இலக்கியததில் இதுவே முன்னோடி எனக் கூறுவது தவறில்லை. சிறுவர்
கதை இலக்கியத்திலும் முன்னோடியாகக் கொள்ளலாம். ஏதோ காழ்ப்புணர்ச்சி அடிப்படையில்
கட்டுரையாளருக்கு இதை ஏற்க மனம் வரவில்லை போலும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்!
இனத்தைக் காப்போம்!/
பரமார்த்த குரு கதை முன்னோடி முயற்சியாகுமா?
நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர்
அனைவரும் வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத்
தவறியதில்லை. ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான
அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று கா.சிவத்தம்பியும் ‘தமிழ்க் கதை வரலாற்றிலே
ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்தது’ (இரா.த. ப.20) என்று இரா.தண்டாயுதமும்
பரமார்த்த குரு கதையின் இடத்தை மதிப்பிடுகின்றனர்.
வரலாற்றில்
இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது? அப்படியானால் அது எங்கே
கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா? நூலில் மொத்தம் எத்தனை கதைகள்
உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும்
கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச்
சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது
என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.
மூன்று நூற்றாண்டு
வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது
தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர்
கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த
குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை
தழுவல் என்றும் இலத்தீன் தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால்
வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது
என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.
எனினும்
பல்வேறு பதிப்பகங்கள் ‘பரமார்த்த குரு கதை’ என்னும் தலைப்பில் நூல்களைத்
தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இப்போது விற்பனையில் இருக்கும் நூல்
ஒன்றில் உள்ள கதையிலிருந்து சில வரிகள்:
‘அவ்வாறு பல
இடங்களுக்கும் சென்றுவிட்டு குருவும் சீடர்களும் மடத்துக்குத் திரும்பி
வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது வழியில் குதிரை மேல் வந்து கொண்டிருந்த
குருவின் மேல் மரக்கொம்பு பட்டது. அதனால் அவருடைய தலைப்பாகை பின்புறம்
விழுந்தது. சீடர்கள் அதை எடுத்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில்
சிறிது தொலைவு செல்லும்வரை பேசாமல் இருந்த குரு பின்னர் தம்முடைய
தலைப்பாகையைத் தரும்படி சீடர்களிடம் கேட்டார்.’
பதினெட்டாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரான வீரமா முனிவர் அன்றைக்கே இவ்வளவு
தெளிவான உரைநடை எழுதினாரா என்னும் வினா எழுவது இயல்பு. இன்றைய ஆசிரியர்
ஒருவர் எளிமைப்படுத்திச் சமகால மொழியில் எழுதிய கதை இது. வீரமா முனிவரின்
உரைநடை எப்படி இருந்தது என்பதை அறிய விரும்புவோருக்கு மூல நூல்
கிடைப்பதில்லை.
செய்யுள் வடிவில் படைக்கப்பட்ட
இலக்கியங்களுக்கு உரை எழுதும் வழக்கம் தமிழில் பல நூற்றாண்டுகளாகவே
இருந்தது. ஆனால் உரைநடையிலேயே முழுநூலை எழுதலாம் என்பதைத் தொடங்கி வைத்தோர்
கிறித்தவப் பாதிரியார்களே. தமிழின் முதல் அச்சு நூலான ‘தம்பிரான் வணக்கம்’
தொடங்கிப் பல நூல்களை அவர்கள் உரைநடையில் எழுதியுள்ளனர். வீரமா முனிவர்
எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்டவற்றுள் உரைநடை நூல்கள் பத்து. தொன்னூல்
விளக்கம் என்னும் முக்கியமான இலக்கண நூலையும் தேம்பாவணியாகிய
காப்பியத்தையும் இயற்றியவர் அவர். செய்யுள் செய்வதில் பெருவல்லமை
பெற்றிருந்தவர். தமிழ்ப் புலவர்களோடு மட்டுமல்லாமல் சாதாரண மக்களோடும்
பழகும் வாய்ப்பை அவர் பெற்றிருந்த காரணத்தால் உரைநடையையும் எழுதினார்.
அன்றைக்கு அவர் எழுதிய உரைநடை எப்படிப்பட்டதாயிருந்தது? வீரமாமுனிவர்
எழுதிய மூலக்கதையாக இன்று பார்க்கக் கிடைத்த ஒரு கதையிலிருந்து (இது
பரமார்த்த குருவின் கதை ஏழாவது என்று குறிப்பு சொல்கிறது) சில வரிகள்:
‘ஒரு
நாளவர்கள் மடத்துக்குத் திரும்பி வருகையிலசைந் தசைந்து குதிரைமேல்
வரும்போது கீழே தொங்கின வொரு மரக் கொப்புப்படவே யவர் தலைப்பாகை பிறகே
விழுந்ததாம். அதனைச் சீஷர்களெடுத்தார் களென்றெண்ணி சும்மா வனேகந்தூர மவர்
சென்ற பின்பு தலைப்பா கெங்கே தாருங்கோளென்று கேட்டார். அதங்கே விழுந்த
விடத்திற் கிடக்குமென் றவர்கள் சொல்ல வவர் கோபித்து விழுந்ததெல்லா
மெடுக்கத் தேவை யில்லையோ நானும் சொல்ல வேணுமோ வென்றார்.’ (விக்கிமூலம்)
இந்த
மொழிநடையில் இரண்டு முக்கியமான கூறுகளைக் காணலாம். முதலாவது செய்யுள்
நடைக்குரிய சொற்புணர்ச்சி முறையைக் கையாண்டுள்ளமை. முதல் தொடரை
சொற்புணர்ச்சி நீக்கி எழுதினால் ‘ஒருநாள் அவர்கள் மடத்துக்குத் திரும்பி
வருகையில் அசைந்து அசைந்து குதிரைமேல் வரும்போது கீழே தொங்கின ஒரு
மரக்கொப்புப் படவே அவர் தலைப்பாகை பிறகே விழுந்ததாம்’ என்று அமையும்.
இன்றைய உரைநடையில் உருபுகள், ஒட்டுக்கள் முதலியவற்றை எழுதும்போது
சொற்புணர்ச்சியைப் பயன்படுத்துகிறோம். இது மிகக் குறைவான அளவே. ஆனால்
செய்யுளில் புணர்ச்சியைக் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
இல்லாவிட்டால் தளை தட்டும். உரைநடையில் கையாளப்படும் சொற்புணர்ச்சிக்கும்
செய்யுளில் காணப்படும் சொற்புணர்ச்சிகளுக்கும் பல வேறுபாடுகள்
உருவாகிவிட்டன. நவீன உரைநடை செய்யுளுக்கு உரிய புணர்ச்சியைப் பெருமளவு
தவிர்த்துவிட்டது என்றே சொல்லலாம். உரைநடையில் நூல் எழுதினும்
செய்யுளுக்குரிய புணர்ச்சி விதிகளைப் பெருமளவு கையாண்டு எழுதும் முறை
அக்கால வழக்கு என்பதை பரமார்த்த குரு கதை மூலம் அறிகிறோம்.
வீரமாமுனிவரின்
உரைநடையில் அமைந்துள்ள மற்றுமொரு முக்கியக் கூறு பேச்சு மொழி. தாருங்கோள்,
வேணுமோ, சீச்சீ, அதுக்கு முதலிய பேச்சு வழக்குகளை அவர்
பயன்படுத்தியுள்ளார். உரையாடல் வரும்போது பேச்சுமொழி வருகிறது.
பேச்சுமொழியின் தொனியும் இக்கதை சொல்லலில் அமைந்துள்ளது. செய்யுள்
புணர்ச்சியும் பேச்சுதொனியும் இணைந்த நிலை இந்த உரைநடையில் காணப்படுகிறது.
பேச்சுதொனி என்பதை வாய்மொழி மரபு சார்ந்து புரிந்துகொள்ளலாம்.
எழுதப்படவில்லை
என்றபோதும் மக்கள் வாய்மொழியாகக் கதைகளைச் சொல்லியே வந்திருப்பர்.
வாய்மொழிக் கதைகளுக்குரிய கருவையே பரமார்த்த குரு கதைகளும்
கொண்டிருக்கின்றன. முட்டாள்தனத்தால் ஏற்படும் வேடிக்கைகள் வாய்மொழிக்
கதையாவதற்கு இன்றுவரைக்கும் பல சான்றுகள் காட்ட இயலும். கரு மட்டுமல்லாமல்
அத்தகைய நாட்டுப்புறக் கதை சொல்லும் முறையே பரமார்த்த குரு கதையிலும்
இருக்கிறது. ‘ஒருநாள் அவர்கள் மடத்துக்குத் திரும்பி வருகையில்,’
‘தலைப்பாகை பிறகே விழுந்ததாம்’ ஆகியவற்றை நோக்கினால் இது விளங்கும்.
மேற்காட்டிய ஏழாம் கதை முழுவதிலும் இவ்வியல்பைப் பார்க்கலாம்.
இக்கதையில்
நவீன இலக்கியத் தோற்றத்திற்கான கூறுகள் இருக்கின்றனவா? தொடக்க கால உரைநடை
நூல்கள் பலவற்றிலும் காணப்படும் செய்யுள் புணர்ச்சியும் வாய்மொழி மரபும்
உள்ளதே தவிர நவீன இலக்கியத்திற்கு ஏற்ற கதைக் கருவோ சொல்முறையோ சிறிதும்
இல்லை. உரைநடையில் காணப்படும் பேச்சுதொனியும் வாய்மொழி மரபுக்கு உரியதே.
அக்காலத்தில் உருவான கிறித்தவப் பாதிரியார்கள் பலரின் (தத்துவ போதகராகிய
இராபர்ட்-டி-நொபிலி, சீகன்பால்கு முதலியோர்) உரைநடை நூல்களில் காணப்படுவது
போன்ற இயல்புகளே பரமார்த்த குரு கதையிலும் உள்ளன.
ஆகவே
பரமார்த்த குரு கதையை நவீன இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்வது அவ்வளவு
ஏற்புடையதல்ல. உரைநடை வரலாற்றில் அதற்குரிய இடத்தை வழங்கலாம். அக்கதையின்
உட்பொருளை விவாதிக்கலாம். அக்கால உரைநடை நூல்களோடு இணைத்துக் காணலாம்.
பதினெட்டாம்
நூற்றாண்டில் நவீன இலக்கியம் உருவாவதற்கான சூழல் சிறிதும் உருவாகவில்லை
என்னும் உண்மையைக் கருத்தில் கொண்டால் பரமார்த்த குருவின் கதையை அடிக்கல்
என்று அழைப்பதைப் பரிசீலனைக்கு உட்படுத்தவே நேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக