வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இந்திய அரசின் காரணமாகவே இலங்கையில் தேர்தல் நடைபெற்றது: வாசன்

1 / 2 ) தனி  இறையாண்மை உடைள சிங்கள அரசின்  செயல்பாடுகளில் இந்தியா தலையிடாது எனக் கூறி அங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகச் செயல்படாதது உண்மையா? இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தேர்தல் நடைபெறுவதாகக் கூறுவது உண்மையா? இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாததுடன் திட்டமிடுதலிலும் படையணிகளை அனுப்புவதிலும் படைக்கருவிகள், வேதியல் குண்டுகள் கொண்டு அழிப்பதிலும் உடந்தையாக இருந்த இந்திய அரசு, இப்பொழுதும் தொடரும் இனப்படுகொலைகளையும் கற்பழிப்புகளையும்  கட்டாயக் கருத்தடைகளையும் நிலப்பறிப்புகளையும் படையினரின் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தலாமே! தமிழக மீனவர்களின் படுகொலைகளைக்கூடத் தடுத்து நிறுத்த வகையற்ற சிங்கள அடிமையான இந்திய அரசு, தேர்தலுக்காகப் பொய்களை அவிழ்த்து விடுவதில் பயனில்லை. இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் இருப்பது உண்மையானால், ஈழப்பகுதிகளில் இருந்து சிங்களப் படைகளையும்  சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/ (தொடர்ச்சி  2/2 காண்க)

2 / 2) அப்படி எல்லாம் அடுத்த நாட்டில் மூக்கை நுழைக்க மாட்டோம் என்றால்,  (ஒன்று) வக்கற்ற அரசு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். (இரண்டு, ) சிங்களக் கூட்டாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியில் தன் அணியின் செல்வாக்கிற்காக மிரட்டும் பாணியில் தமிழர் நலனில் கருத்து உள்ளதுபோல் வாசன் நடிப்பதைக் காங்கிரசார் நம்பினாலும் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது:  வாசன்

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஜி.கே. வாசன்.தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் முதன்மையான அணி. இரண்டாவது அணி, மூன்றாவது அணி பற்றியெல்லாம் தெரியாது.காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 15 ஆண்டுகளாகவும், ராகுல் காந்தி 10 ஆண்டுகளாகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மூலை முடுக்குக்கு எல்லாம் எந்தவித லாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணிக்காகச் சுற்றுப் பயணம் செய்கின்றனர்.பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார். அதில், தமிழகம் வருகையும் ஒன்று.
சோனியா காந்தி, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்கள். அவர்கள் காட்டும் வழியை அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி உறுப்பினர்கள், அடிதட்டு தொண்டர்கள் பின்பற்றி வருகிறோம். அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவது எங்களது கடமை என்ற உரிமையோடு செயல்பட்டு வருகிறோம்.கடந்த 65 ஆண்டுகளாக இந்திய மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினாலும், அது 3 அல்லது 4 முறைதான் நிகழ்ந்தது. அதிலும், பாஜக ஒரு முறைதான் ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை பழைமை மாறாமல் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளது. விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தலைவர்களின் வழியைப் பின்பற்றி வருவதால், எங்களுடைய பணிக்கு மக்கள் உறுதியோடு வாக்களிப்பர் என நம்புகிறோம்.
இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவதற்காகவும், நலனுக்காகவும் அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம், தமிழர் நலன் சார்ந்த நல்ல முடிவு ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து அமைதி திரும்ப வேண்டுமானால், அப்பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே வடக்கு மாகாணத்தின் முதல் கோரிக்கை என அம்மாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழலை இந்திய அரசு உடனடியாக ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுத்தினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மீனவர் பிரச்னையில் முழுமையான தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார் வாசன்.
அப்போது, பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக