வெள்ளி, 27 செப்டம்பர், 2013

3,500 குடியிருப்புகளை இடித்துவிட்டுக் கட்ட முதல்வர் உத்தரவு

இடிக்கப்படும் அரசு குடியிருப்புகள் யாவும் 1967 இற்குப்பின்னர்க் கட்டப்பட்டவைதாம். அதற்கு முன்னர்  கட்டப்பட்டுள்ள தனியார் வீடுகளும் அலுவலகக் கட்டடங்களும் நல்ல நிலையில் உள்ள பொழுது இவை ஏன் இடிபடு நிலைக்கு ஆளாகி உள்ளன. சிறப்பான முறையில் கட்டாத அன்றைய பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் , உரிய அலுவலர்களிடம் இருந்தும் அவர்கள் மறைந்திருப்பின் அவர்களது சொத்துகள் மூலமும் இழப்பீடு  பெற வேண்டும். சாலை முதலிய அமைத்த பின் குறிப்பிட்ட காலத்திற்குள் கேடடைந்தால் அமைத்தவர்களே தம் சொந்தச் செலவில் சீராக்கித் தரவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். பொருள்களுக்குக் காப்புக் காலம் இரு்பபதுபோல் அரசு கட்டும் கட்டடங்களுக்கும் போடும் சாலைகளுக்கும் காப்புறுதிக் காலம் வரையறுத்து  பழுது செலவுகளை இவற்றிற்குப் பொறுப்பானவர்களிடம் இருந்தே பெற வேண்டும். தரமற்ற வற்றைக்கட்டி மக்க்ள பணத்தை வீணடிக்கின்றார்கள்.அதற்கு முடிவு கட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3,500 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை க் கட்ட முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் பழுதடைந்துள்ள 3,500 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளைக் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளதால், அதில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இங்கு குடியிருக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில், இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு, அங்கு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  
இதன்படி, முதற்கட்டமாக இந்த ஆண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 குடியிருப்புகளை 38 கோடியே  40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 120 குடியிருப்புகளை 9 கோடியே 60 லட்சம் ரூபாய்  செலவிலும், பெரம்பூர் பகுதியில், சத்தியவாணிமுத்து நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 392 குடியிருப்புகளை  31 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எழும்பூர் பகுதியில் நேரு பார்க் (பி.எச்.சாலை) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 288 குடியிருப்புகளை 23 கோடியே  4 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள  32 குடியிருப்புகளை 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேப்பாக்கம் பகுதியில் லாக் நகர் (நாவலர் நகர்) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 304 குடியிருப்புகளை 24 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 708 குடியிருப்புகளை 56 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  கோட்டூர்புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள  136  குடியிருப்புகளை 10 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாப்பூர் பகுதியில் ஆண்டிமான்யம் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 42 குடியிருப்புகளை 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பல்லக்குமான்யம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 48 குடியிருப்புகளை 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 246 குடியிருப்புகளை 19 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்சி மாவட்டம், திருச்சி-பீச்சான்குளம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுளள 587 குடியிருப்புகளை 46 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 117 குடியிருப்புகளை 9 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 3,500 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை  280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு முதல்வர் நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக