ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புது நடைமுறை

அறிவித்தால் மட்டும் போதாது. வாக்குரிமைக்குரிய அகவை  வந்த ஒவ்வொருவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அரசின் பொறுப்பாக இருக்க  வேண்டும். நாங்கள் முதலில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில் தெருவில் குடியிருந்தோம். பின்னர் அதன் பக்கத்தில் உள்ள மாவுஆலை முதல் தெருவிற்கு இடம் மாறினோம். ஆனால்,  வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் எடுக்கப்பட்டு விட்டது. பெயர் எடுக்கும் முன்னர் வாக்காளரின் தற்போதைய முகவரி அறியும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்க வேண்டும். பதிவு அஞ்சலில் மடல் அனுப்பி இருக்க  வேண்டும். அதே நேரம் பதிய இடத்திலும் பெயர் சேர்க்கப்படவில்லை.  வாக்குப் பதிவு நடைபெற்ற பள்ளிகளில் பெயர்ப்பட்டியல் இருக்கும். சரி பார்க்கலாம் என்றார்கள். உரிய பள்ளிக்குச்சென்றேன். அப்படி எங்களிடமும் சொன்னார்கள். ஆனால், பட்டியல் தரவில்லை. எங்களுக்குக் கல்விப்பணி உள்ளதால் நாங்கள் அது குறித்துக்கவலைப்பட வில்லை என்றனர். அஞ்சலகங்களில் வாக்காளர் பட்டியலைப் பார்த்துச் சரி பார்ககலாம் என்றார்கள். அஞ்சலகம் சென்றால், இங்கே யாரும் வந்து  கேட்கவில்லை. எனவே, உரிய நாளுக்கு முன்னரே திருப்பி அனுப்பி விட்டோம் என்றனர். தொகுதி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலைப் பார்க்கலாம் என்றனர். அவ்வாறு சென்று பார்த்தால் மூடிக் கிடக்கிறது. தொலை பேசி வழி  வருவாய்த்துறையில் விசாரித்தால் எல்லாத் தொகுதி அலுவலகங்களுக்கும் பட்டியலை அனுப்பவில்லை. சிலவற்றிற்கு மட்டுமே அனுப்பி உள்ளோம் என்றனர். அடுத்து இணைய வழி பதிவு செய்தோம்.  சரிபார்த்துப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்கள். ஆனால், அப்பொழுதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை. இதுதான் தேர்தல் ஆணையமும் வருவாய்த்துறையும் வாக்காளர்களைச் சேர்க்கும் அழகு. இந்த முறை மாற்றப்பட வேண்டும். வாக்காளர் பெயர் காரணமின்றி எடுக்கப்பட்டாலோ, சேர்க்கப்படாமல் இருந்தாலோ தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தண்டனை எனக்  கொண்டு வரவேண்டும். வெறும் அறிவிப்புகளால் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_80926820130921235659.jpg
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புது நடைமுறை: 944 இணையதள மையங்களுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்
சென்னை: வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோர், இனி தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியது இல்லை. இணையதள மையங்களில் இருந்து, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 944 இணையதள மையங்களுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, முன்பு தாலுகா அலுவலகம் அல்லது ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அங்கு செல்ல முடியாதவர்கள், அரசியல் கட்சியினரின் உதவியை நாடினர்.

ஆர்வம் குறைவு:

இதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, ஆன்- லைனில் விண்ணப்பிக்கும் முறை, அமலில் உள்ளது. ஆனால், மக்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஆர்வம் காட்டவில்லை. கேரளாவில், 75 சதவீதம் பேர், ஆன்-லைனில் விண்ணப்பிக்கின்றனர். ஆந்திராவில், 40 சதவீதம் பேர், ஆன்-லைனில் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில், 7.8 சதவீதம் பேர் மட்டுமே, ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 20 ஆயிரம் பேர் மட்டுமே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எளிது. விண்ணப்பங்களை, கள அலுவலர்கள், நேரடியாக விசாரித்து சரி பார்த்த பிறகே, பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதன்பின், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், கம்ப்யூட்டர், லேப்டாப் வசதி இல்லாதவர்கள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடிவதில்லை.

ஒப்பந்தம்:

இப்பிரச்னைக்கு தீர்வு காண, நாட்டில் முதன் முறையாக, தமிழகத்தில் இணையதள மையங்களுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செல்லும்போது, அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை. ஆனால், அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது, இருப்பிடச் சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். சென்னையில், இப்பணியை மேற்கொள்ள உள்ள, 84 இணையதள பயிற்சியாளர்களுக்கு, மாநகராட்சி அலுவலக கட்டடத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது.

இணையதள மையங்கள்:

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: இணையதள மையங்களில், விண்ணப்பிப்போருக்கு ரசீது வழங்கப்படும். அதில் உள்ள எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆன்- லைனில் அறிந்து கொள்ள முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த, 40 நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்த அடையாள அட்டை வழங்க, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், திருத்தம் இல்லாமல், இரண்டாவது முறையாக, வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 32 மையங்களில், 944 இணையதள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பொறுத்து, கூடுதல் இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கட்டணம் நிர்ணயம்:

இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச் சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார் பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள மையங்களில் எழுதி வைக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக