வியாழன், 10 ஜனவரி, 2013

பாலியல் கொடுமைகள் நிற்க மது ஒழிக்கப்பட வேண்டும்.

சொல்கிறார்கள்

மனநல மருத்துவர், அசோகன்:

  மேற்கத்திய கலாசாரமும், பெண்களின் நாகரிக ஆடை அலங்காரங்களும் தான், பாலியல் அக்கிரமங்கள் அதிகரிக்க காரணம் என, சிலர் கூறுகின்றனர்; அது சரியல்ல. முன்பெல்லாம், ஓர் இளைஞன், தவறான பழக்கத்திற்கு ஆட் பட்டால், "சேர்க்கை சரியில்லை' என்பர். இப்போது, ஓர் அறைக்குள்ளேயே, இளைஞனை சீரழிக்கும் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இணையத்தில், நாம் ஒரு பட்டனைத் தட்டினால், ஏதாவது ஒரு மோசமான, "வெப்சைட்' தோன்றுகிறது. தானாகவே, நம், "இ-மெயிலில்' ஆபாசப் படங்கள் வந்து விழுகின்றன. முகம் தெரியாத பெண்களுக்கு, ஆபாசச் செய்திகளை அனுப்பும் பாலியல் வக்கிரங்கள், இணையத்தில், அதிகம் நடக்கின்றன. "அணுகுண்டு தயாரிப்பது எப்படி, தற்கொலை செய்வது எப்படி' என்றெல்லாம், பிரத்யேக, "சைட்'கள், பாடம் நடத்துகின்றன. எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லாமல், தவறான மருத்துவ வழிகாட்டுதல்கள் பல, இணையதளத்தில் உள்ளன. இப்படி, தணிக்கை எதுவும் இல்லாமல், இணையதளங்கள் செயல்படுவது, மிக ஆபத்தானது. இதற் கான தீர்வை, அரசு தான் உருவாக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர், அவர்கள் மீது அளவான கண்காணிப்பும் வைத்திருக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகம் உருவாக, முதல் விதை ஒவ்வொருவரின் வீட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, கணவன் ஆணாதிக்க மனோபாவத்தில் இருந்து விடுபட்டு, மனைவியை மதிக்க வேண்டும். இதைப் பார்த்து வளரும் குழந்தைகளும், பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், பாலியல் கல்வி மிக அவசியம். ஒருவரை தொடுவதில் கூட, "எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல்' என்பது, சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். பல சூழல்களில், பாலியல் கொடுமைகளுக்குக் காரணமாக, மது இருப்பதால், அதை ஒழிக்க வேண்டும். மொத்தத்தில், சட்டம் மூலமாகவே, அதிரடியாகவோ, உடனே, பாலியல் கொடுமைகளை, ஒழித்து விட முடியாது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக