தருமபுரிக் கலவர வழக்கு : உரூ.7.32 கோடி இடைக்காலப் பொருளுதவி தர உத்தரவு
தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.32 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 7ம் தேதி காதல் திருமணத்தால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து 3 கிராமங்களில் உள்ள 326 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 326 குடும்பங்களுக்கு 2 வாரங்களில் நிவாரண நிதி அளிக்க வேண்டும். அதன்படி, மொத்தம் ரூ.7.32 கோடியை இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்குரைஞர் செங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் அளித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அமைப்புகள் மதிப்பிட்டதன் அடிப்படையில் 326 குடும்பங்களுக்கு ரூ.7 கோடியே 32 லட்ச ரூபாயை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தவிர, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்து 2 வார காலத்துக்குள் இடைக்கால நிவாரணத் தொகையை 326 குடும்பங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், அடுத்த வழக்கு விசாரணை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக