சனி, 12 ஜனவரி, 2013

பசுவிற்கு வளைகாப்பு

பசுவுக்கு நாளை வளைகாப்பு நிகழ்ச்சி:  ழைிழ் ிய ல் பரபரப்பு

ஆலங்குடி: பசுவுக்கு நாளை, வளைகாப்பு நடத்துவதாக அச்சிட்டப்பட்ட அழைப்பிதழால், புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, நாளை, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்த இருப்பதாகவும், அதற்கு அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என, அழைப்பிதழ் தயாரித்துள்ளார்.மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப் பார்த்த பிறகு கூட, கோபம் குறையாமல் இருந்தேன். என்னை பார்க்க அவர் வந்தார். அப்போது, வளைகாப்புக்கு அவர் சொன்ன காரணங்களை கேட்டதும், நிச்சயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளேன். அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சன்னாசி சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து பராமரித்து, பால் கறந்து விற்று ஜீவனம் நடத்துகிறார். அவர் வெளியில் சென்று, மற்றவர்களின் மாடுகளுக்கும் பால் கறந்து, அதற்கு கூலி பெற்று வருகிறார். அதனால் பசுக்களின் மீது, அவருக்கு ஈடுபாடும், பாசமும் என்றைக்கும் உண்டு. அதனால் தான் வளர்க்கும் பசுக்களுக்கு, ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறார்.

இதுகுறித்து சன்னாசி கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல், பசுக்கள் வளர்க்கிறேன். இதுவரை, பசுக்களுக்கென்று ஏதும் செய்யாததால், இப்போது வளைகாப்பு நடத்துகிறேன். பசுக்களை அனைவரும், பால் தரும் ஒரு விலங்கு என்ற கோணத்தில் தான் பார்க்கின்றனர்; நான் அவற்றை தெய்வமாக மதிக்கிறேன்.விவசாயத்தின் மீதும், கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில், கால்நடைகள் மீது இத்தனை அக்கறை கொண்டிருப்பது, மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வளைகாப்பு அன்று காலை, பசுவை குளிப்பாட்டி, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவிலில் கட்டி, அதற்கு தேவையான அளவுக்கு தீனியும் போட்டு, பொங்கல் வைத்து, அதற்கு ஊட்ட ஏற்பாடு செய்துள்ளேன். விழாவுக்கு வருபவர்கள், வளைகாப்புப் பெண்ணுக்கு சந்தனம், குங்குமம், விபூதி பூசுவதைப் போல், பசுவுக்கு பூசி, வணங்க வேண்டும் என்பது, என் விருப்பம். அன்றைக்கு பசுவின் காலில் பூட்ட, வெள்ளியில் காப்பு ஒன்றை தயாரித்து வைத்திருக்கிறேன்.இப்பகுதியில், அனைவரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கும், தலைமை தாங்கும் யூனியன் தலைவர், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, காப்பை எடுத்து கையில் கொடுக்க வேண்டும். பசுவையும் வாழ்த்த வேண்டும் என்று, அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு டீ, கேசரி, வடை போன்ற சிற்றுண்டி மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை, சன்னாசி செலவு செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக