திங்கள், 7 ஜனவரி, 2013

மின் அதிர்ச்சி தரும் செருப்பு - பெண்களின் பாதுகாப்பிற்கு

"ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
 
தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.

டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், "ரோபோ' செருப்பை தயாரித்துள்ளனர். சாதாரணமாக பெண்கள் அணியும் செருப்பில், சிறிய எலக்ட்ரானிக் சாதனம் பொருத்தப்படும். அது, காலுக்கோ, நடக்கவோ எந்த சிரமமும் கொடுக்காது.



பெண்களுக்கு ஏதாவது சிக்கல் எழும் போது, போலீஸ் மற்றும் உறவினர்களை உஷார்படுத்த வேண்டும் என்றால், செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும். அந்த எலக்ட்ரானிக் கருவியில் இருந்து புறப்படும் சிக்னல்கள், மொபைல் போனை, "ஆன்' செய்து, போலீஸ் மற்றும் போன் உரிமையாளர்களின் உறவினர்களை உஷார்படுத்த, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பி விடும். இந்த அருமையான, எலக்ட்ரானிக் செருப்பை உருவாக்கியது, ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர். அவர்களுக்கு, பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள் உதவியுள்ளனர். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், இந்த ரோபோ செருப்பை தயாரித்துள்ள மாணவியர், அதன் செயல்பாட்டையும் செய்து காட்டினர்.

"தரையில் இரண்டு முறை தொடர்ந்து தட்டியதும், எஸ்.எம்.எஸ்., சென்றதுடன், அந்த செருப்பை அணிந்தபடி, எதிராளியை மிதித்தால், அந்த நபருக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' ஏற்படும். சிறிது நேரத்திற்கு எதுவும் செய்ய முடியாமல், அந்த நபர் திணறுவார்; அந்த நேரத்தில் தப்பித்து கொள்ளலாம்' என, அந்த மாணவ, மாணவியர் விளக்கினர்.

அதிகபட்சம், 2,000 ரூபாய் தான்;


"ரோபோ' செருப்பின் விலை, அதிகபட்சம், 2,000 ரூபாய் தான். வெளியே செல்லும் போது, எந்த பொருளையும் மறந்து விடுவது உண்டு; ஆனால், யாரும் செருப்பு போட மறப்பதில்லை என்பதால், இந்த எலக்ட்ரானிக் கருவியை, செருப்பில் தயாரித்ததாக, மாணவர்கள் கூறினர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக