வெள்ளி, 11 ஜனவரி, 2013

மதுரை, கோவையில் புற்று நோய்ப் பண்டுவ மையம்: செயலலிதா

உரூ. 28 கோடியில் மதுரை, கோவையில் புற்று நோய்ப் பண்டுவ மையம்: செயலலிதா

First Published : 11 January 2013 10:59 AM IST


புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்கும் பொருட்டு, மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடியே 2 லட்சம் ரூபாய், 48 புதிய பணியிடங்கள் தோற்று விப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 24 லட்சம் ரூபாய் என 14 கோடியே 26 லட்சம் ரூபாயும்; கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைப்பதற்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய், 46 புதிய பணியிடங்கள் தோற்று விப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 37 லட்சம் ரூபாய் என 14 கோடியே 37 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 28 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவிலேயே தலை சிறந்த ஆய்வுக் கூடங்களில் ஒன்றான சென்னையில் இயங்கி வரும் கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து, மீண்டும் அங்கு தடுப்பு ஊசி உற்பத்தியை தொடங்குவதற்கும், அங்கு திசு வங்கி அமைக்கவும், புதிய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர்  உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக