ஞாயிறு, 6 ஜனவரி, 2013

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!

சொல்கிறார்கள்

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!
ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடும் சந்தனமேரி: நான், பர்மா நாட்டிலிருந்து, தாயகமான, சிவகங்கையின் சூராணத்துக்கு, புலம் பெயர்ந்தவள். பிழைக்க வழியின்றி, வேலை தேடி அப்பா, அந்தமான் சென்றார். உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேரில், மூத்தவள் என்பதால், வயல் வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றினேன். வேலை செய்யும் இடத்தில், தண்ணீரை டம்ளரில் குடிக்காமல், இரு கைகளை ஏந்தி குடிக்கணும். கஞ்சியை, பனை ஓலையில் ஊற்றி குடிக்கணும். திருமணமாகி, ஜாதி வெறி நடைமுறைகள் அதிகமுள்ள, ஓரிக்கோட்டைக்கு வந்தேன். இங்கு, சாவுக்கான வேலையை, தலித் மக்கள், அடிமை போல் செய்தனர். சாவுக்கு வருபவர்கள் தரும் நெல்லையே, கூலியாக தருவர். திருமண வீட்டிலும், இதே நிலை. ஓலை பெட்டி, மண்பானையை எடுத்துச் சென்றால் தான், சோறு கொடுப்பர்; வீட்டிற்கு வந்தே சாப்பிடணும். காளையார்கோவிலில், உயர் வகுப்பை சேர்ந்தவர், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து, பெண்களை திரட்டி போராடினோம்; பலனில்லை. அதனால், இடதுசாரி கட்சியில் சேர்ந்தேன். இங்கு, ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளை, எப்படி சரி செய்யலாம் என்ற புரிதல் கிடைத்தது. தொண்டியில், தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை அடைக்கப்பட்டது. மக்களோடு போராடி, பாதையை திறந்தேன். கண்டதேவி தேரோட்டத்தில், தலித் பெண்களை தேர் இழுக்க வைத்தேன். "ஒரு தலித் பொம்பளை' என, ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்தேன். ஓரிக்கோட்டையில், தலித்கள் தற்போது, அடிமை வேலைகள் செய்வதில்லை. "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆரம்பித்தேன். ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

சாப்பிடுவதை விட்டேன்; சிற்பமானது!
சாக்பீசில், சிற்பம் செதுக்கும் பிரியதர்ஷினி: சென்னை, கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். நான், எல்.கே.ஜி., படிக்கும் போது, வேஸ்டாக தூக்கி போடுகிற, சின்ன சின்ன துண்டு சாக்பீசை, வீட்டுக்கு எடுத்துட்டு போய், யாருக்கும் தெரியாமல் சாப்பிடுவேன். ஒரு நாள் சாக்பீஸ் எடுத்து சாப்பிட போகும் போது, என் அப்பாவும், அம்மாவும் பார்த்து விட்டனர். அதை சமாளிக்க, சாக்பீசை வைத்து ஏதோ செய்வது போல், நடித்தேன். அதை உரசிய போது, உருவம் கொடுத்து, லிங்கத்தைப் பார்த்தேன். குண்டூசி எடுத்து கீறிக் கீறி லிங்கத்தை தனியாக எடுக்க முயற்சித்தேன். அது உடைந்து விட்டது. விடாமுயற்சியால், ஐந்தாவது சாக்பீசில், லிங்கம் செய்து முடித்தேன்.அதன்பின், கிடைக்கிற நேரம் எல்லாம், சாக்பீசை செதுக்குவேன். இதுவே, என்னோட ஹாபி ஆகிவிட்டது.ரொம்ப கஷ்டப்பட்டு செய்யும், சில உருவங்கள், கடைசியில் உடைந்து விடும். அப்போது அம்மா, "விடுடா செல்லம். அடுத்தமுறை சூப்பரா வரும்' எனச் சொல்லி, ஊக்கப்படுத்தினார்.இதுவரை, கப்பல், பார்பி டால், ஸ்பூன், நாற்காலி என, 100க்கும் மேலான உருவங்களை செதுக்கிஇருக்கேன்.இப்போ கொஞ்ச நாட்களாக, சோப்புலயும் உருவங்கள் செய்ய ஆரம்பித்து உள்ளேன். பல ஓவியப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருக்கேன். இது சுய ஆர்வம் தான். இந்த சாக்பீஸ் சிற்பம், ஓவியத் திறமையை என்னோட ஹாபியாக நிறுத்திடாமல், முறையாக முயற்சி எடுத்து மெருகேற்றி, சாதனை படைப்பேன். 

1 கருத்து: